Pages

Thursday 2 June 2011

அழுக்குப் பயலுகளும் அழகான புள்ளைகளும்






சில பல காலமாக தமிழ் சினிமாவில் முழுக்க முழுக்க ரியலிஸம் எனப்படும் யதார்த்த சினிமா பதார்த்தமாய் பரவி வருவது தெரிஞ்ச விஷயம். இதுல என்னன்னா எந்த ப்ரடீயூஸருக்குமே காஸ்ட்யூம் செலவே இல்லைன்னு வேற கேள்வி. அத அப்றம் பேசும்வோம். இந்த யதார்த்த பதார்த்தத்துல என்னெல்லாம் வருமுன்னு பாப்போம் இப்ப
  1. கதைக் களம் மதுரையா இருக்கணும் (அப்பத்தானே வந்துட்டாய்ங்க, போனாய்ங்க, மாமென் மச்சேய்ன் வெட்டு குத்து கட்டப்பஞ்சாயத்து, சினிமா மோகம் இப்டி காட்டலாம். மதுரைக்காரய்ங்க பாவம். பயபுள்ளக அப்டியா இருக்கோம் இருந்திருக்கோம்னு புரியாம அலையுதுக வேற)

  1. ஹீரோ ஒரு லுங்கி மிஞ்சி மிஞ்சிப் போனா இன்னொரு லுங்கிதான் படம் முழுக்க கட்டுவாரு (முன்னமெல்லாம் பாட்டுக்காவது எங்கிட்டாவது போவாய்ங்க, இப்பல்லாம் அதுவும் எதார்த்தமப்பா;( )


  1. ஹீரோ கண்டிப்பா அடியாளா இருக்கணும், இல்ல அட்லீஸ்ட் லோக்கல் ரௌடியா இருக்கணும் அப்டியே இல்லைன்னாலும் நாலு பேருக்கு நல்லது செய்யவாது சண்டியார திரியணும்.

  1. ஹீரோவோட கண்டிப்பா அத விட அழுக்கு லுங்கி கட்டின ஒரு நாலுபேர் கூடவே சுத்தி மொக்க போடணும்.


  1. முக்கியமா எதார்த்த சினிமாவுக்கு அம்மா செண்டிமெண்ட் வேணும். அந்த அம்மாவும் யதார்த்த அம்மாவா பயங்கரமா கீச்ச்ச்ச்னு கத்தணும். தலைவிரி கோலமா கத்திக்கிட்டே ஹீரோவ வெளக்கமாத்தாலக் கூட அடிக்கலாம். (அந்தக் காலத்துல எஸ்.வரலெட்சுமி தொடங்கி அப்றம் நம்ம சுஜாதா வரைக்கும் எல்லாருமே அழகான மைல்ட் மதர்ஸ். என்ன செஞ்சாலும் திட்டாத மதர்ஸ். அதுக்கு காரணம் ரௌடியா இருந்தாலும் கமலும் ரஜினியும் குளிச்சிட்டு இருந்ததுதான் காரணமின்னு ஹி ஹி நம்ம உளவு சினிமாத்துறை தெரிவிக்குது).

  1. கதைக் களம் ஒரு முட்டுச்சந்துல இருக்கற, முந்நூறு குடித்தனத்துக்குள்ள இருக்கற ஒரு வீட்ல, முடிஞ்சா கூட்டுக்குடும்பத்துல கூட இருக்கலாம். (அப்பத்தானே அது எதார்த்த சினிமா)


  1. அடுத்து வாரது, நம்ம ஹீரோயினி. அந்தப் புள்ள கண்டிப்பா வெளுப்பா இருக்கணும் அழகாவும் இருக்கணும். காலேஜுக்கோ இஸ்கூலுக்கோ அவசியம் போகணும். இங்கிலீஷ் வேற பேசணும். ஆனா மக்கா இருக்கணும். (அழகா இருந்து காலேஜ் போனாலே மக்குன்னு சொன்னதுக்காகவே தமிழ் சினிமாக்காரங்களுக்கு கோவிலே கட்டலாம்).

  1. ஹீரோவக் கண்டாலே ஒன்னு பயந்து நடுங்கணும், இல்லைன்னா படபடத்து வெக்கப்படணும் (அடாஅடா இந்த சினிமாலயாவது வெக்கப்படறத காட்றாங்களே.. நம்ம நண்பர் சொல்றாரு சினிமாலயாவது பெண்கள் நமக்கு பயப்படறத காட்றாங்களேன்னு.. என்னத்த சொல்ல..ஹும்ம்).


  1. அப்றம் இந்த புள்ள ஒண்ணு வில்லன் வீட்டுப்புள்ளயா இருக்கணும், இல்லைன்னா அழகாப் பொறந்துட்டு எவன் கைலையாவது சிக்கப் போற கேரக்டரா இருக்கோணும்.

10. முடிவுல அந்தப் புள்ள கண்டிப்பா மண்டையப் போடணும். இல்லைன்னா இந்த அழுக்குப்பையன் மண்டையப்போடணும். மொத்தத்துல சேரவே கூடாது
11. எல்லாத்தையும் விட இந்தப் படத்தோட நடிகரோ துணை இயக்குநரோ இல்ல இயக்குநரோ நல்ல தொலைத்தொடர்பு சாதனங்களோட தொடர்புடையவரா இருக்கணும் (அப்பத்தானே, படம் அப்டி இப்டி இருக்கு ரொம்ம்ம்ம்ப எதார்த்தமா இருக்குன்னே பரப்பி விட்டு நாமள உள்ளாற கூட்டியாந்து கும்மலாம். எவ்ளோ படம் நம்ம்ம்ம்பி ஏமாந்திருக்கோம்)

இந்த பாயிண்ட்டெல்லாம் விட்ருங்க சாமி, உங்க மனசத் தொட்டு சொல்லுங்க, அது ஏன் அம்புட்டு அழகான புள்ளைகளும் இந்த எதார்த்த சினிமால, பல்லுவெளக்காத, குளிக்காத பத்துநாளா ஷேவிங்கே பண்ணாத, படிக்காத, வேலைவெட்டிக்கு போகாத மொத்தத்துல அழுக்கான பயலுகளையே லவ்வுதுங்க.. பொம்பள பிள்ளைக மனசத்தான் பாக்கும் அழகப்பாக்காதுகன்னு யாராவது சொன்னீங்க கட்டையில கொண்டே அடிப்பேன். இப்டி போய் புள்ளைகளே மோசமான வாழ்க்கைய தேர்ந்தெடுக்கும் ஆளாவே காட்றாங்களே, இந்த பெண்ணியம் பேசும் கூட்டமே ஒண்ணுமே சொல்ல மாட்டீகளா??

அத விடுங்க, எங்கிட்டாவது ஒரு படத்திலயாவது, அழகான பையன் இதே போல பல்லுவெளக்காத, குளிக்காத தலைசீவாத மாதிரி இருக்கற புள்ளயப் பாத்ததும் லவ்வுறானுங்களா?? ஏன்?

அப்ப ஆண்டாண்டு காலமா இருக்கற அடிமை புத்தி மாறல பாத்தீங்களா?
பொம்பளைங்கன்னா புற அழகு, ஆம்பளைன்னா வீரம் (இது வீரமே இல்லங்கறது அடுத்த விஷயம்) இப்டி அடிப்படைவாதத்தை அப்பட்டமா காட்றதுதானே இந்த எதார்த்த சினிமா??
இதப்பாத்து ஊருக்குள்ள கொஞ்சம் அறிவு இருக்கற புள்ளைக கூட மெக்கானிக்க, நாலு பேர அடிக்கறவனையெல்லாம் பாத்துக்கிட்டு அலையுதுகன்னா உங்க தாக்கத்த என்னென்னு சொல்ல.

ஒண்ணு மட்டு சொல்றோம்யா நீங்க சொல்ற எதார்த்த சினிமாவும் அழுக்குப்பையனும், அழகான புள்ளையும் நீங்களா உசத்திக்கிட்டு ஆடற ஒரு மாயை. ABSOLUTELY PROMOTED WITH INTENTION. தெரிஞ்ச மீடியாவையும் வலைமனையும் வெச்சிக்கிட்டு, வேணுமின்னே இன்னொரு ஆள ஏற்பாடு பண்ணி திட்டவேற வெச்சுக்கிட்டு (இது சீப் பாப்புலாரிட்டி ப்ரமோஷன், நம்ம சிவசங்கர் பாபாவையும் யாகவா முனிவரையும் வெச்சு சன் டி.வி போட்ட டெக்கி) நீங்க வேணுமின்னா இந்த எதார்த்த சினிமாவை கொண்டாடலாம். நாள் முழுக்க இந்த கொடுமைய பாத்துக்கிட்டு சினிமாலயாவது சுகம் காணலாமின்னு வாரவனுக்கு நீங்க கொடுக்கறதுக்கு பேரு விசம்யா விசம்.

இப்பல்லாம் எங்க ஊர்ல ரெண்டு லுங்கி வெச்சிருக்கவன் தொல்ல தாங்கல்ல. ஒரு புள்ளைய ஊர்ல நடமாட விடமாட்டேங்கறாய்ங்க.
இனிமேயாவது அழுக்கு புள்ளையும் நீட்டா இருக்கற பயலயும் ஆடவிடுங்க பாப்போம். இதுவும் எதார்த்தம்தானே..செய்யுங்க பாப்போம். ஒரு பய வரமாட்டான் தியேட்டருக்கு!

பாவம்யா, இந்தப் புள்ளைகளுக்கு அழகான பயலுகள காட்டுங்கன்னு சொல்லல்ல.. கொஞ்சம் குளிச்சிட்டு சுத்தமா இருக்கற பயலுகள காட்டுங்க.. அழகுங்கறது வேற விசயம். சுத்தம்ங்கறது வேற விசயம். அதுகளவும் கனவுல உங்கள மாதிரியே பாடிக்கிட்டு திரியட்டும்.