Pages

Tuesday 13 September 2011

வார்ம் ஹோல்




                                                                                          வார்ம் ஹோல்





திக்கற்று சீறி வந்து நிற்காமல் எதிர்காலம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் கால சர்ப்பத்திலிருந்து விழுந்து தடுமாறி எழும்பி நிற்கிறான் ஆத்மா.
லட்சத்து சொச்சம் நூற்றாண்டுகளை கடந்து இங்கே துப்பிவிட்டு போயிருக்கிறது சர்ப்பம் இம்முறை.


வருடம் 300000:
             துயரம்  இன்னும் விட்டுவைத்திருக்கும் நிலப்பரப்பு  நூறு சதுர அடி கூட இல்லை. உயிரினங்களின் கடைசி கூட்டமிது! உயிருக்கு பயந்து கோடானு கோடி உயிர் வரலாற்றின் மொத்த துயர  எச்சமும், பாவமும், வக்கிரமும், கோபமும் ,ஆற்றாமையும் ஒரு சேர கொப்பளிக்க தங்களின் கடைசி நோடியை எதிர்நோக்கி உலக சரித்திரத்தின் கடைசி உயிர்க்கூட்டம் நிர்க்கதியற்று நிற்கின்றது. இன்னும் ஒரு சில வினாடிகள், உலகம் முழுமையையும் ஆட்கொண்ட துயரத்தீப்பிழம்பு  பூமியில் உயிரணுக்களின் ஆட்டத்தின் கடைசி சுவட்டை துடைத்தெறிந்து ஆக்ரோஷமாக சிரிக்கவிருக்கின்றது. சலனமற்று பார்த்துக்கொண்டிருந்தான் ஆத்மா.
------------------------------------------------


மூன்று நாட்களுக்கொருமுறை இந்த கால சர்ப்பம் மீண்டும் அவனை விட்ட இடத்தை வந்தடைகின்றது. கால, நேர, சீதோஷ்ண, கண்ட நகர்வுகளின் லகான்களை தங்களால் எளிதாக கட்டுபடுத்திவிட முடியும் என மனிதன் நினைத்துக்கொண்டிருந்ததைவிடவும் ஒரு முட்டாள்தனம் இந்த பிரபஞ்ச வெளியில் வேறெதுவும் இருக்காது. பூமி 1 வினாடிக்கொருமுறை சுற்றிக்கொள்கின்றது இப்போதெல்லாம்  24 மணிநேரமென்பது ஒரு வினாடியாக சிதைந்திருக்கின்றதென்றால் , இதில் தப்பி பிழைக்கும் தகவமைப்பு எந்த உயிரிக்கு இருக்கவியலும்?   இதுவரை (முப்பத்து முக்கோடியே)^9 மூன்று வினாடிகளை கடந்து ஆத்மாவை சுமந்து வலம் வந்து கொண்டிருக்கின்றது சர்ப்பம். இதோ வந்து......


சாவே என் மீது உனக்கு கருணையே கிடையாதா?? வாய் விட்டுக்கதறினான் ஆத்மா.
-------------------------------------------------------------------


"பூனை மதில்சுவரிலிருந்து தவறி விழுந்தாலும் அது இறப்பதில்லை" என்றது ஒரு குரல்.


குரல் வந்த திசையை நோக்கினான் ஆத்மா. ஆலிவ் மரமொன்றின் கீழே சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார் ஒரு மனிதர், தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.புன்னகை தவழ இவனையே பார்த்துக்கொண்டிருந்தார் மனிதர். துறவியாக இருக்கக்கூடும், கருநிற அங்கி தரித்திருந்தார். 

கோபம் சற்றே குறைய

 "எனக்கின்னும் இரண்டு வினாடிகள் தாம் மீதமிருக்கின்றது. நீ யார்?"

"ஜென்"
இரண்டு வினாடிகளுக்குப் பிறகும் சர்ப்பம் வரவில்லை! 

என்ன ஒரு ஆச்சரியம், என் கணக்குப்படி இந்நேரம் வந்திருக்கவேண்டுமே ?

இது என்ன வருடம்?

"15ம் நூற்றாண்டு"

நீ யார்?

மேலே சொன்னேனே!

"உலகம் அழிந்துவிட்டது"

"முட்டாளே, அதற்க்கின்னும் பல கோடி ஆண்டுகள் இருக்கின்றது. அப்படியே இருந்தாலும் தேவன் இருக்கின்றான் மனித குலத்தைக்காப்பாற்ற,"இம்முறை கோபம் கொப்பளிக்க கத்தினார் ஜென்.
உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் ஆத்மா.

அதெல்லாம் இருக்கட்டும் எவ்வளவு சொல்லியும் இருபத்தொறாம் நூற்றாண்டின் வழியாக போக மாட்டேன் என அடம் பிடிக்கிறது சர்ப்பம், கேட்டால் பிரபஞ்சசக்தியின் கட்டளை என்கிறது. உனது உலகம் சுற்றும் பயணத்திற்கு முடிவே இல்லையென எக்காளமிடுகிறது.

பேசாமல் ஓடி ஒளிவோம், எப்படியாவது  சாவதற்கான வழியை கண்டுபிடிப்போம்.ஓடினான் ஓடினான்.திசைகள் அறியாமல் கானகங்கிளிடையே கால் ஓயும் வரை ஓடினான். ஒரு கட்டத்தில் களைப்புற்று, ஒரு காலத்தில் சிங்கம் வாழ்ந்து பாழடைந்து போயிருந்த குகையொன்றில் படுத்துறங்கினான்.

------------------------------------

மூன்றாம் நாள் முடிவில் குகையின் மேலிருந்த இடறி விழுந்த கல் பட்டு தூக்கத்திலிருந்து எழும்பினான் ஆத்மா, மூர்க்கத்தனமாக மூச்சுவிட்டுக்கொண்டு கோபக்கனல் கக்கும் கண்களை சிறிய துவாரத்திற்குள் விட்டு முறைத்துக்கொண்டு இருந்தது சர்ப்பம்.

கண்டுபிடித்துவிட்டது.

"ஹ்ம்ம்ம் வந்து ஏறு"

---------------------------------------

கி.பி.3098
கிங்பி மாதம், 42ம் தேதி

வரலாற்று வகுப்பு:

"அப்புறம் அந்த மனிதனுக்கு என்னாயிற்று? மாணவர்கள் வினா எழுப்பினர்.

 "இயற்கையின் அதி தீவிர உக்கிரத்துக்கு ஆளானான் அம்மனிதன்,  அதன் பிறகு ஒருவரும் இயற்கையின் ரகசியங்களை தோண்டாதபடி அவனை தண்டித்தது"

"அப்படின்னா இறந்துட்டாரா?"

"இல்லை வார்ம் ஹோல் எனப்படும் கால,நேர குழல் என்பதை ஒரு கற்பனையானதாகத்தான் கருதி வந்தார்கள் நம் முன்னோர்கள், ஒரு நாள் நிஜமாகவே சர்ப்ப வடிவில் வானத்திலிருந்து வந்திறங்கியது, ஆத்மாவைக் கவ்விக்கொண்டு போனது! உலகமெங்கும் சாவைக்குறித்த ஆராய்ச்சிகள் அத்தோடு நிறுத்தப்பட்டன.அதன் பிறகு ஆயிரமாண்டுகளாகியும் அவரைப்பற்றிய தகவலில்லை. "

குழந்தைகள் நடுங்கத்துவங்கினார்கள்.

அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த ஆத்மா பேச எத்தனித்தான். 

------------------------------------
வேதங்களை தோண்டி, சித்தர்களை தேடி, சாகா வரம் வாங்க ஆத்மா தவமிருக்க துவங்கி இத்தோடு நான்கு வருடங்களாகின்றன.

இவனது தவத்தை கலைக்க அமானுஷ்ய சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் வீண்.
நேரடியாக வந்து பேசி சமாதானப்படுத்த முயன்றார்கள். அறிவியல் என சொல்லி ஏற்கனவே சாகா மருந்தை கண்டெடுக்க முயற்சித்து மனிதர்கள் தோற்றுப்போனதை சொல்லி விளக்க முற்பட்டார்கள்,

சாகா வரம் வாங்குவதில் உறுதியாக நின்றான் ஆத்மா.

அமானுஷ்ய சக்திகள் தோற்றுப்போயின.

கடும்கோபத்தோடு வரம் அருளின.

கால நேர சர்ப்பத்தை வரவழைத்து ஏதோ ரகசியம் ஓதின.

----------------------------------------------
மனிதர்களே தென்படவில்லை எங்கெங்கு காணினும் பசுமை, கொடிய விலங்கினங்கள் சாதாரணமாக வலம் வந்துக் கொண்டிருந்தன. 

டைனோசார் கூட்டம் ஆட்டு மந்தைகளைப்போல வலம் வந்துக் கொண்டிருந்தது.

அது காலை உயர்த்திய வேளையில் அடியில் போய் நின்றுக்கொண்டான்.

மெதுவாக கால் கீழ்நோக்கி வந்துக்கொண்டிருந்தது. 

உடல் ஒரு ரப்பர் போல நெகிழ்ந்து  ஆத்மாவின் வரத்தை காப்பாற்றியது.

----------------------------------------------
இம்முறை சர்ப்பம் எங்கேயுமே இறக்கிவிடுகிறார்ப் போல தெரியவில்லை. முன்னெப்போதையும் விட உக்கிரமாக சுற்றி வருகின்றது.

ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு உயர எழும்பி பிரபஞ்ச வெளியில் நின்றது. சூரியனைப் பார்த்து முறைக்கத்துவங்கியது. சர்ப்பத்தின் கண்கள் சிவக்க சிவக்க சூரியன் தன் பொலிவை இழந்து கருக்கத் துவங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக கவ்வத்துவங்கிய இருள் முழுமையாக பரவத்துவங்கிய வேளையில் பேரிரைச்சலோடு கிரகங்களனைத்தும் சூரியனுக்குள் போகத்துவங்கின.

சொல்லப்போனால் சூரியன் விழுங்கத்துவங்கியது.

இனி இங்கே எதுவுமே இல்லை. பூமி இல்லை, நிலப்பரப்பு இல்லை.பருப்பொருளென சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உயிர்த்தோற்ற அதிசயம் சூரியனின் வாய்க்குள் போய்க்கொண்டிருக்கின்றது.

சர்ப்பம் சற்று விலகி நின்று வெடித்து சிதறுண்டு விரவி பிரபஞ்ச வெளியில் கலந்து போனது.


ஆத்மாவுக்கு சாவில்லை.................................