Pages

Thursday 5 September 2013

சொர்க்க வழிப்பாதை





   ஏதோ ஒரு திடப்பொருள் என் ஓட்டத்திற்கு திடீர் தடைபோட்டது. எம்பி போய் குப்புற விழுந்தேன்.காயம் படவில்லை. சிறு சிராய்ப்பு கூட இல்லை.  மீண்டும் மந்திரக்குள்ளனின் குரல்,

     "இப்போது கூட பாதகமில்லை இப்படியே ஓடிவிடு நான் உனக்கு சிறப்பு அனுமதி வாங்கி தருகிறேன் பிரதான கதவை திறக்க"

    "போடா குள்ளா"

    "இதற்காகவே உனக்கு அது கிடைக்க கூடாதென சபிக்கிறேன்"

   "அதெல்லாம் எனக்கு தெரியும் இங்கேயிருந்து இந்த தங்கநிற சாலையில் போகணுமா, இல்லை தார் சாலையில் போகணுமா அதை மட்டும் சொல்லு"

    "பூலோக தற்குறியே தார் என்றால் என்ன? அது கருநிற வைரத் துகள்களால் பதியப்பட்ட சாலை,உன் உடலை நீ திரும்ப அடைவதற்கான நேரம் இன்னும் அரை   மணி தான்...அதன் பிறகு நீயே விரும்பினாலும் உன் உடலுக்கு உன்னால் திரும்ப முடியாது"

   "எல்லாம் எனக்கு தெரியும் என் தாத்தாவின் உயிரில்லாமல் நான் திரும்பி பொகப்போவதில்லை"

   "அதைத்தான் நானும் சொல்கிறேன் நீ திரும்பப் போவதில்லை!"

    "வாயை மூடு எனக்கு தெரியும்"

    "அது உன் விதி இப்படி சவால் விட்டதனாலேயே பல பேர் இங்கேயே நிரந்தரமாக தங்கியிருக்க நேர்ந்திருக்கிறது."

   "இரண்டு சாலைகளில் ஒன்று தான் சரியானது.எது சரியான சாலை என்பது எனக்கும் கூட தெரியாது. என்னாலும் இங்கிருந்து மறைந்து ராஜாவின் அரண்மனைக்கு முன் தோன்ற முடியுமே தவிர சாலைகளை உபயோகிக்க இயலாது, இதையும் மீறி தவறான சாலைகளில் செல்பவர்கள் திரும்பி வர இயலாத ஏற்பாடுகளை எங்களது மகாராஜா ஏற்படுத்தி வைத்திருக்கிறார். பல ஆன்மாக்கள் சொர்க்கம் செல்லும் பேரவாவில் இந்த சாலைகளில் காணாமல் போன சம்பவங்கள் பூலோகவாசியான உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கிளம்பிவிட்டேன்!  அங்கு மேலும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை...தங்க நிற சாலை, வைரத்தால் பதியப்பட்ட சாலை ஏதோ ஒன்றில் தான் என் தாத்தாவின் உயிரை    மேலோக எடுபிடிகள் கொண்டுபோயிருக்க வேண்டும்.

    என்னை அலைக்கழிக்கும் நோக்கில் ஆரம்பத்திலிருந்தே இந்த எடுபிடிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நானும் என் தாத்தாவும் தண்ணி லாரியில் இடிபட்டு விழுந்ததிலிருந்தே அப்படித்தான். இடிபட்டு விழுந்த ஐந்தாவது நிமிடத்தில் சுயநினைவு வர கண்விழித்த போது என் தாத்தா மிதந்து கொண்டிருந்தார் கூடவே மூன்று எடுபிடிகள் அவரை இழுத்துப்பிடித்திருந்தார்கள். மெதுவாக அவர்கள் மேலே மிதந்து செல்ல ஆரம்பிக்க, உடலை அசைக்க முடியாமல் நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

  ஆனால் அவரை காப்பாற்றியாக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது.  நான் அவரை காப்பாற்றியாக வேண்டும்.  நான் அவரை காப்பாற்றியாக வேண்டும்  நான் அவரை காப்பாற்றியே ஆக வேண்டும்  மூன்று நிமிடங்களுக்கு
இதையே தான் தீவிரமாக எனக்குள் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறேன் போல.இது  ஒருவகை செல்ஃப் ஹிப்னாடிஸம். ஏற்கனவே அடிபட்டு குற்றுயிராக கிடந்த எனக்கு செல்ஃப் ஹிப்னாடைஸ் செய்து ஆன்மாவை பிரியச்செய்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. கொஞ்ச நேரத்தில் என் ஆன்மா உடலிலிருந்து விடுபட்டு என் உடலை பார்த்து சிரித்தது.

  இப்போது என்னாலும் பறக்க முடிந்தது. எடுபிடிகள் போன பாதையின் சுவடுகளில் மிதந்து தொடர்ந்தேன்.

  முன்னூறு நிமிஷ பறத்தலில் தென்பட்டது ஒரு நகரம், கரு மேகங்கள் மண்டி, மின்னல் வெட்டி, தொடர்ந்து மழை பெய்துக்கொண்டிருந்தது. மிகப்பெரிய கதவு ஒன்று வழக்கம் போல மூடியே இருந்தது. செவ்வாய் கிரகத்தை எல்லாம் எந்திரங்களை இறக்கி பல்வேறு ஆங்கிள்களில் படப்பிடிக்க முடிந்த நம் கண்ணுக்கு இத்த்னை வருடங்கள் இந்த வெண்வெளி நகரம் தட்டுப்படாமல் போனது ஆச்சரியம் தான். கதவை நெருங்குகையில் எங்கோ மறைவிலிருந்து திடீரென தோன்றினான்  குள்ளமான உருவம் கொண்ட மனிதன். விசித்திரமாக இருந்தான். கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பூலோக சாமியார்களை தலையில் அடித்து ஐந்தடி உள்ளே பூமிக்குள் இறக்கினது போல உருவம்.

   ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை புரட்டியபடி,

    "உன் வரிசை எண் சொல்லு"

   "................."

     "இறந்த தேதி? "

   "........."

   "அட யாரப்பா நீ? ஊமையா?"

   "இல்லையே!"

 " அப்புறமென்ன? எமலோக தூதர்கள் உனக்கு வரிசை எண்ணை சொல்லவில்லையா?"

   "அப்படின்னா என்ன?"

   "அடே நீ எங்கிருக்கிறாய் என்றாவது தெரியுமா? உன்னை யார் இங்கே கூட்டி வந்தது? நீ தனியாக வந்த போதே எனக்கு சந்தேகம்!"

   "தெரியவில்லை ஆனால் என் தாத்தாவின் உயிரை எடுபிடிகள் கொண்டுபோயிருக்கும் இடத்திலிருக்கிறேன் என்பது மட்டும் சத்தியம்"

  "உஷ்ஷ்ஷ் சத்தம் போட்டு சொல்லாதே அவர்கள் எடுபிடிகளல்லர்,எமனின் பிரத்யேக தூதுவர்கள், உன் பெயரென்ன? நட்சத்திரமென்ன அதையாவது சொல்லு? "

  "வாழவந்தான்,ஸ்விட் டட்டில்னு சொல்ற வால் நட்சத்திரம் தான் என் ஃபேவரிட்"

   உன் குசும்புக்கு இத்தனை நாள் உன்னை எப்படி விட்டு வைத்தார்கள் எம் தூதுவர்கள்?!

  "பெயர் மட்டும் போதாது உன்னை அடையாளம் காண, இந்த தகட்டில் உன் உள்ளங்கையை பதியசெய்",

  பதித்தேன்

  "அடேய் உனக்கு இன்னும் 60 வருடங்கள் வாழ்க்கை இருக்கிறதடா அதற்குள் எப்படி உன்னால் இங்கு வர முடியும்?!

  "எப்படியோ வந்தேன்..கதவை திறந்து விடு ,எனக்கு என் தாத்தாவின் உயிர் வேண்டும்"

  அதிர்ந்து வியர்த்து என்னை முறைத்தான் குள்ளன்.

  "இங்கிருந்து ஓடிவிடு இல்லாவிட்டால் உன் தாத்தாவோடு சேர்த்து உன்னையும் அடைக்க வேண்டியிருக்கும்'

  "அடைக்கப்போகிறீர்களா??!

  தவ்வி மதில்சுவர் மேல் மீண்டும் ஏறிக்கொண்டான்

 கதவருகில் நெருங்கினேன்.திறந்து தானிருந்தது. குள்ளன் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். நான் உடலைகுறுக்கி உள்ளே நுழைத்து கணநேரத்தில் மறுபுறம் வந்துவிட்டேன். நீண்டதொரு சாலை. பத்துநிமிடம் உற்றுபார்த்தால் தான் தெரியும் தூரத்தில் ஏதேதோ அரண்மனை சாயலில் கட்டிடங்கள்.தாமதிப்பது நிச்சயம் ஆபத்து. ஏதோ அடைத்துவிடுவார்களென்று வேறு சொன்னான் குள்ளன்.கள்ளசாவி கூட கொண்டுவரவில்லை!

 கல் தடுக்கி விழுந்து எழுந்து குள்ளனின் ஏளனங்களுக்கு ஆளாகி இப்போது தங்க சாலையா கரு நிற சாலையா என்பதே பிரதான பிரச்சினை.

  அரை மணியில் பாதி தான் இப்போது மிச்சமிருந்தது.

 எந்த சாலையையும் எடுக்காமல், அருகில் வந்து இருசாலைகள் பிரியும் இடத்தை கவனித்தேன். பிரியுமிடத்தில் சாலை கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. காலால் லேசாக மிதித்தேன். அந்த லேயர் உடைந்து உள்ளுக்குள் சரிந்தது.

 பாதாள சுரங்கம்! அடாது பெய்த மழையால் தங்கதுகள்களும், கருநிற வைரமும் தண்ணீரில் கலந்து மிதந்து கொண்டிருந்தன. அலேக்காக உள்ளே இறங்கினேன். கும்மிருள். கண்ணை மூடிக்கொண்டு ஓடுவது தான் உசிதம். இன்னும் 11 நிமிடங்கள் தான்!

  சளக்.. சளக்கென தண்ணீர் என் கால்களில் பட்டு  தெறித்துக்கொண்டிருக்க, ஏழு நிமிட கெடு மீதமிருந்த நிலையில் சுரங்கம் முடிவுக்கு வந்தது. பெருமூச்சு விட்டேன்

 மீண்டுமொரு ராட்சத கதவு. குள்ளன் சிரித்துக்கொண்டிருந்தான்.எரிச்சலாக வந்தது எனக்கு

 "தயவு செய்து என்னை உள்ளே விடு, என் தாத்தாவுக்கு இன்னிக்கு ரிட்டையர்மெண்ட்,அவரை கூட்டிப்போய் ரிட்டையர்மெண்ட் பணத்தை வாங்கிக்கிறேன்..அதுக்கு பிறகு உன் எடுபிடிகளை அனுப்பி வை தாத்தாவை நானே பிடிச்சு குடுக்கிறேன் நாளைக்கு"

 "புரியவில்லை!, இறந்தவரை பூலோகத்துக்கு திருப்பி அனுப்பும் அதிகாரம் எனக்கில்லை..அனுப்பவும் முடியாது. இறந்தது இறந்தது தான். உன்னால் அவரை கூட்டிப்போக முடியாது"

 "ஐந்து நிமிடங்கள் தானிருக்கிறதடா குள்ளா"

 முறைத்தான். கதவருகில் போய் நின்று என்னவோ முணுமுணுத்தான் கதவு நீங்கிக்கொண்டது.

 மிக அழகாக நிர்மாணிக்கப்பட்ட நகரம்.மேலோகத்தில் எப்படி சிமெண்டும், ராணா டார் முறுக்குக்கம்பியும் கிடைக்கிறதென்று கேட்டால் குள்ளன் சபித்து தொலைப்பான்! எதுக்கு வம்பு.

 நான்கு நிமிடங்கள்.

ஏதோ நர்சரி ஸ்கூலுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.ஓவென அழுகுரலும், சிரிப்பொலியும், காச் மூச்சென கூச்சலும், அதோ அங்கே இரு நீண்ட நெடிய கட்டிடம் தெரிகிறது என் தாத்தாவை இழுத்து வந்த தடியன்களையொத்த எடுபிடிகள் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தான்கள்.

 நைசாக நெருங்கினேன். என்னை வெடுக்கென முறைத்தவர்கள் அப்புறம் சுதாரித்து சிரித்துக்கொண்டான்கள். கட்டிடத்தில் நுழைந்தால் லட்சக்கணக்கான அலமாரிகளில் ஒரு சின்ன கையடக்க கண்ணாடி குமிழுக்குள் இறந்தவர்களின் ஆத்மாக்கள் அடைக்கப்பட்டிருந்தன. குமிழ்கள் ஒளிர்ந்து அறை வெளிச்சத்தால் நிரம்பிக்கொண்டிருந்தது.

 மூன்று நிமிடங்கள்.......

 இந்த லட்சக்கணக்கான குமிழ்களில் என் தாத்தாவை கண்டுபிடிக்க வேண்டுமே.! செய்வதறியாது திகைத்த என் கண்ணில் "குற்றவகை" என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட கதவு தெரிந்தது. கண்டிபிடித்துவிடலாம். உள்ளே போனால் கற்பழிப்பு,கொலை,கொள்ளை,ஊழல்,சுரண்டல்,வன்மம்,மது,மாது,சூது........

இரண்டு நிமிடங்கள்....

 அய்யய்யோ குற்றங்களின் வகைகளை படித்து முடிக்க முயற்சித்தாலே நான்கு நாட்கள் ஆகும் போலிருக்கிறது.இந்த லட்சணத்தில் நான் என உடலுக்கு திரும்பவே முடியாது. என் தாத்தா என்ன குற்றம் செய்திருப்பார்? யொசித்தேன். ஆங் எப்போது பார்த்தாலும்  சிகரெட் ஊதித் தள்ளி பக்கத்திலிருப்பவர்களை சித்ரவதை செய்வாரே! வேகமாக ஓடி புகையிலை பிரிவை அடைந்தேன். அதில் எங்கேயுமே அவர் இல்லை! கிட்டதட்ட  நம்பிக்கையிழந்தேன். அறையை வெறுப்பாக நோட்டமிட தொடங்கினேன். ஒரு மூலையில் ஒரே ஒரு குமிழ் மட்டும் தனியே வைக்கப்பட்டிருந்தது "எப்போதும் மூக்குப்பொடி  உபயோகித்து தும்மி தும்மியே தொல்லை கொடுத்தவன்" என்னும் தலைப்போடு .

ஆஹா...கண்டுபிடித்தாயிற்று! குமிழை லாவகமாக கையிலெடுத்துக்கொண்டு ஓடத்துவங்கினேன்...

ஒரு நிமிடம் பாக்கியிருந்தது.

முதல் பிரதானகதவு............ இரண்டாவது கதவு........அதை தாண்டிவிட்டால் அங்கிருந்து மறைந்து பூலோகத்தில் தோன்றும் சக்தியை பிரயோகிக்கலாம்! ஆத்மாவாக இருத்தலில் உள்ள வசதி இது!

  ஓடிய வேகத்தில் தரையை கவனிக்கவில்லை! திடப்பொருள் மீண்டும் தடுக்கி தாவிப்போய் விழுந்தேன். கையிலிருந்த குமிழ் எட்டடி உருண்டுபோய் உடைந்து நீர்த்துப்போனது! அய்யோ! போச்சு .! எல்லாமே போச்சு ! இன்னும் முப்பதே வினாடிகள் தான்!

 எழுந்திரிக்க முடியவில்லை! குள்ளன் தோன்றினான்..சிரித்தான்.

 'நான் அப்பொழுதே சொன்னேன் உன்னால் முடியாதென்று! இப்போது உன் தாத்தா ஆத்மாவாக கூட இல்லை! பெருமைப்பட்டுக்கொண்டான்

   ".............."    கெட்ட வார்த்தையே தான்.

 குள்ளன் நெருங்கினான். ஓங்கி ஒரு உதை கொடுத்தான். "பிழைத்துப்போ!

 சிதையில் சில வினாடிகளுக்கு முன்னம் தீ மூட்டப்பட்டிருந்த என் உடலின் மீது விழுந்தேன்! சுயநினைவு வந்து சூடு உறைக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. பதறிப்போய் சிதையிலிருந்து உதறி எழுந்தேன்!

 "பாரேன் இப்போதான் தீ வெச்சோம் அதுக்குள்ளாற பொணம் வெறைக்குது!"என்றான் ஒருவன்

 தொடர்ந்து,   நடுமண்டையில் நச் நச்சென்று நாலு உருட்டுகட்டைகள் பதம் பார்த்தன!

 குள்ளனை மீண்டும் பார்க்கபோகிறேன்.





  

Monday 2 September 2013

ஊடல் தோற்கும் புள்ளி.






   அந்தி கவியும் அந்திமமொன்றில் தான் ஆரம்பித்தன என் தோல்விகள்

   புணராமல் புணர்தலென்னும் விதியை  பந்தயப் பொருளாய் காட்டினாய்

   கனவுலகில் உனை நெருங்க எத்தனித்து ஜெயித்துக்கொண்டது என் முதலாம் தோல்வி,
 
   கண்களால் நான் தொடுக்க முயன்ற சைகைகளை சட்டையே செய்யவில்லை உன் வெற்றி

   வார்த்தைகளால் புணர முயன்ற நவீன முயற்சியும்
     
    உன் முன் மண்டியிட்டு மன்றாடி கதற நேர்ந்தது..
       
    வெற்றிகளெனும் உன் காதல் பாதரசத்தை என் முயற்சிகளெனும்
   
   காற்று  நீர்க்கச்செய்வது எங்கணம்!

     

                        

Wednesday 19 June 2013

நேனோ கார்பன் இழைகள்




நாம் எல்லோரும் சமீபமாக “மறைநீர்” என்ற விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். நாம் அன்றாடம் நுகரும் ஒவ்வொரு பொருளின் உற்பத்திக்கு பின்னாலும் பயன்படும் நீரின் அளவை கணக்கிடும் சித்தாந்தம் இது. இதைக் கண்டறிந்தவர் லண்டனைச் சேர்ந்த டோனி ஆலன்.உதாரணமாக நாமக்கல்லில் பெருமளவு உற்பத்தியாகும் முட்டையை எடுத்துக்கொண்டோமானால் ஒரு முட்டையின் மறைநீர் அளவு 200 லிட்டர். மூன்று ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 200 லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம் தான்.

போலவே தற்போது இந்தியாவின் நீர்வளத்தை கிட்டத்தட்ட இல்லாமல் செய்துகொண்டிருக்கும்,  இரும்பு உருக்கு மற்றும் தானியங்கி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் நீர் பயன்பாடு மிக அபரிதமாக இருப்பது வருந்தற்தகுந்த விஷயம்.சமீபத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இரும்பு உற்பத்தியில் 80 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கின்றன. இந்த முதலீடுகளால் இந்தியா இரும்பு உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாக மாறும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லாவிட்டாலும்,இந்த இரும்பு தொழிற்சாலைகளின் நீர் பயன்பாடு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய எஃகு கொள்கை 2012ன் படி 2016-2017ம் ஆண்டுகளின் இந்திய எஃகு தோழிற்சாலைகளின் நீர் பயன்பாடு 350 மில்லியன் கனஅடி அளவுக்கும், 2025-2026ம் ஆண்டுவாக்கில் அது 650 மில்லியன் கனஅடியாகவும் உயரும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே உலக மக்கள் தொகைக்கு 18% பங்களிப்பை சீரும் சிறப்புமாக வழங்கிக்கொண்டிருக்கும் இந்தியா இந்த மறைநீர் அச்சுறுத்தலை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறி.

இவ்வளவு மொக்கை எதற்கென்று கேட்கிறீர்களா?

விஷயமிருக்கிறது. நாமெல்லோரும் நேனோ தொழில்நுட்பத்தைப் பற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்டிருப்போம்.சாதாரண மூலக்கூறைப்போல் அல்லாமல் மிக நுட்பமாக கட்டமைக்கப்படும் நேனோ மீட்டர் அலகால் அளவிடப்படும் மூலக்கூறுகளாலானது இந்த நேனோ உலகம்.


இந்த தொழில்நுட்பத்தின் படி உருவான கார்பன் Nano Tubeகள் தான் எஃகு நிறுவனங்களின் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கப்போகின்றன. கார்பன் துகள்களை 1200டிகிரி வெப்பஉலையில் வைத்து கோபால்ட் நிக்கல் வினையூக்கி முன்னிலையில் இது தயாரிக்கப்படுகிறது என்பதெல்லாம் இந்த கட்டுரைக்கு அவசியமில்லாதது. வெப்பம் கடத்தும் திறன் என்று ஒரு விஷயமிருக்கிறது.அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு 0.635 W/mK. அதுவே நேனோ கார்பன் இழை சேர்க்கப்பட்ட தண்ணீரின் வெப்பம் கடத்தும் திறன் 0.78 W/mK. கிட்டதட்ட 30% அதிகம்!. தண்ணீரானது இரும்பு உருக்காலையில் மோல்ட் செய்யப்பட்ட எஃகு தகடுகளை குளிர்விக்கப்பயன்படுகிறது. 

800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதித்துக்கொண்டிருக்கும் இந்த தகடுகளை குளிர்விக்க சாதாரண நீரானால் பெருமளவு தேவைப்படும். அதுவே நேனோ கார்பன் இழைகள் அந்த நீரில் சேர்க்கப்பட்டால் வெப்பம் கடத்தும் திறன் கணிசமாக அதிகரிப்பதோடு மிகக்குறைந்த அளவு நீரைக்கொண்டு இந்த தகடுகளைக் குளிர்விக்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிட்டதட்ட ஒவ்வொரு டன் எஃக்குக்கும் 12800 லிட்டர் அளவுக்கு நீரை சேமிக்க முடியும்.இது மட்டுமின்றி வெப்ப மாற்று உபகரணங்கள் பயன்படும் இடங்களிலெல்லாம் இந்த கார்பன் இழை தொழில்நுட்பம் வரும்காலங்களில் பெரிதும் பயன்படப்போகிறது.

ஏன் இன்னும் சில வருடங்களில் நம் இட்லி குக்கர், பால் குக்கர்களில் கூட இந்த நீரை உபயோகிக்கும் நிலை வரலாம்.

தொழிற்சாலைகளின் பெருக்கம் தவிர்க்க முடியாததாகி வரும் இந்நாட்களில் சுற்றுசூழலை பாதுகாப்பது பெரும் சவாலாகி இருக்கிறது.. அந்த வகையில் இந்த ஆராய்ச்சியில் முதல் ஆளாக களமிறங்கியிருக்கும் டாடா ஸ்டீலின் முயற்சியை வரவேற்போம்.

நன்றி:The Hindu.


Wednesday 21 March 2012

தலையற்ற விதி



கி
ரகத்தை நெருங்க முயன்று தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் முயற்சித்துக்கொண்டிருந்தது
மற்றொரு கிரகம், நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சந்தித்தித்துக்கொள்ள நினைப்பதே பிரபஞ்சத்தின் 
மாபெரும் முட்டாள்தனம் தானே?! காற்றைத்துரத்தியபடி காற்றும், பறவையைத் தொடர்ந்தபடி
பறவையும், பூச்சியை துரத்தியபடி பூச்சியும், இரவையே விரட்டிக்கொண்டு பகலுமாக ,
மேலெலுந்தவாரியாக பார்க்கையில் ஏதுமற்றதாக காட்சியளிக்கக்கூடிய அந்த இரவு நேர வானம்
இப்படியான ஒழுங்குமுறைகளை லட்சக்கணக்கில் ரகசியமாக எனக்கு மட்டும் வெளிப்படுத்தியபடி
இருக்கிறதாகத் தோன்றுகிறதெனக்கு. வானத்தை வெறித்துபார்த்தபடி கண்டதையும் பிதற்றுவது
ஏதோ இப்போது தான் தொடங்கிய நாகரீகப்பழக்கமென தயவு செய்து யாரும்
நினைத்துக்கொண்டிருக்காதீர்கள்.வானத்தை வெறிப்பது தான் ஆதி, துவக்கம்,
நினைவிலடக்கவியலாமல் நீண்டுச்செல்லும் பிரபஞ்ச சூன்யவெளிப்புதிரின் முழுமுதற் விடை.
மனித விலங்குகளாகிய உங்களெல்லோரின் அறிவுப்புள்ளியின் துவக்கத்தின் ஒளிக்கீற்று.
வெயிலாய், மழையாய், காற்றாய், இடியாய், மின்னலாய், கிரகணமாய் ஒழுங்குமுறைகளின்
பிறப்பிடம்.



ன்னை முதன்முதலாய் மனிதனெனும் உணர்விலிருந்து விடுபடச்செய்தது ஒரு மனிதக்கூட்டமே
தான். அது ஒரு இழவு வீடு என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மரணம் என்பது எவ்வளவு
இயல்பானதும் ஒழுங்கானதுமென்பதை நான் எடுத்துரைக்கப்போய் தான் என்னை அடித்து உதைத்து
நான் மனிதனே இல்லை என என் வாயலேயே சொல்ல வைத்தார்கள். நெருங்கிய
சொந்தமில்லாவிட்டாலும்,செத்தவன் என் ரத்த சொந்தமென எனக்கு வேண்டப்பட்டவர்கள்
பேசிக்கொண்டார்கள், ஒன்று இங்கே இருக்கும் எல்லோரும் ஒருவருக்கொருவர் ரத்த
தொடர்புடையவர்களாகத்தானிருக்க முடியும்,இல்லையெனில் என்னை தயவு செய்து உங்களது
காட்டுமிராண்டி கூட்டத்தில் சேர்க்காதீர்கள் என்றேன்.அத்தோடு என்னை பார்க்க வருவதையும்
நிறுத்தி என்னை தனிமைப்படுத்த துவங்கினார்கள்.



ன்னை நானே சிறப்பானவனாக பாவித்துக்கொள்வது கொஞ்சம் தலைக்கனம் சார்ந்த
விஷயமென்பதை நானறிவேன், ஆனாலும் வேரு வழியில்லை, இங்கே நான் மனிதன் இல்லை
என்று வாதிட்டால் அப்போ நீ என்ன பெரிய இவனா?! என்கிறார்கள்.மனிதர்களின் சிறப்பே
இவ்வாறாக அவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்
என்பது தான். முன்பெல்லாம் மனிதர்கள் எனக்கு அவ்வளவு இடையூறாக
தோன்றமாட்டார்கள்.ஆனால் இப்போதோ நிலைமையே வேறு.நான் எங்கு போனாலும்
அதைகண்டுபிடித்து என்னை பின்தொடர்வது போலவே வருகிறார்கள் எப்போதும் எங்கேயும்
எதையாவது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்,அவர்களால் பேசாமல் ஒரு மணித்தியாலம் கூட
இருக்கமுடியாதோ தெரியவில்லை.அவர்களைக் கண்டால் சொல்லவோணாத ஆத்திரமேமேலிடுகிறது.ஆக்கிரமிப்பு எனும் பதத்தை கண்டுபிடித்தவன் மனிதன் தானே.
பூமிக்கோளத்தின் சிறு பகுதியையும் எஞ்சவிடாமல் அவனே ஆக்கிரமித்தும் தொலைத்திருக்கிறான். இந்த உலகத்துன்பங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு மரணம் என்று கொண்டீர்களானால் அதையும் நீங்களே தான் முழுமையாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறீர்கள்.


நான் பிறந்தபோது சமநிலை ஆன்மா,எந்த விந்தணுவிலிருந்து நான் பிறப்பெடுத்திருந்தாலுமே நான்
இன்றைய நானாகத்தான் உருவாகியிருப்பேன்.உலக சமுதாயத்தின் ஒடுக்குமுறைகள்
தான் என்னை இன்றைய நபராக வளர்த்தெடுத்திருக்கிறது,
'இல்லை உலகின் நாகரீகம் தான் என்னை வளர்த்தது,
இல்லை இல்லை ஆற்றாமை, இல்லை நான்…இல்லை நான்…இல்லைநான்…
இப்படி என்னை வளர்த்தெடுத்ததற்கு ஏகப்பட்ட நியதிகள் பொறுப்பேற்க
முன்வரும்போது நான் கொலையே செய்தாலும் என்னை தண்டிப்பது
நியாயமாக இருக்காது என்று தான் தோன்றுகிறது.


 கோடானுகொடி விந்தணுக்களும் தங்களூக்கே உரிய ஆன்மாவை உள்ளடக்கியது.
ஒருமனிதனின் ஓராயிரம் விரயங்களிலும்,துரிதஸ்கலிதங்களிலும்,ஆபாசக்கனவுகளிலும் தப்பித்து “நாம்” பிறப்பதென்னவோ அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை.ஒருவேளை ஆன்மா என்பதே புரட்டாக இருக்குமோ?! என்றவாறும் கூட சமயங்களில் நினைக்கிறேன். உங்களைப்போலல்லாமல் உயிரற்ற எண்ணங்களிடம் கூட பாரபட்சம் பாராட்டுவதில்லை நான். அனைத்து திசைகளிலும் அவற்றை சுழலவிட்டு இன்பம் காண்கிறேன்.


 தைக்கண்டுமே கலங்காத எனக்கு காலத்தைக் கண்டால் கலக்கமாக இருக்கிறது,
உலகின்கொடூரமான ஆயுதம் அணு ஆயுதம் என்கிறார்கள்,கொடுமையான விஷம்,
கொடுமையான தண்டனை,கொடுமையான சித்ரவதை,கொடூரமான கொலை,இப்படியாக நீளும்பட்டியலில் காலம் இடம்பெறாதது நிச்சயம் விசித்திரம்.காலம் தன்னுள்ளே ஒளித்துக்கொண்டிருக்கும் குரூரங்களும் கொடுமைகளும் அ-இரக்கங்களும் தான் எத்துனை.


காலம் என்பதே பொய்யான அளவீடென்று தோன்றுகிறது.,காலம் எனவொன்று உண்மையில்
இருக்கிறதா என்ன?உலகம் தோன்றிய பிறகு தான் காலமும் தோன்றியது என எந்த முட்டாள் மனிதனாவது வாதிடத்தயாரா? உலகத்தோற்றத்திற்கும் முன்னமும்,அழிவுக்கு
பிந்தியதுமான சூன்யவெளியில் காலம் என்ற அளவீட்டை எந்த கணக்கில் வைப்பீர்கள்?

        ருநாள் இரவு முழுவதும் இவ்வாறே வானத்தை வெறிப்பது எனக்கு மிகவும்
பிடித்தமான ஒரு விஷயம். ஒழுங்குமுறைகள் தான் நம்மை வழிநடத்துகின்றன,
ஒழுங்குமுறைகள்தான் நம்மை தோற்றுவித்தன, ஒழுங்குமுறைகள் தான் உயிரை உருவாக்கின
என்றெல்லாம் பலவாறாக கண்ணில்படுபவர்களிடமெல்லாம்சொல்லித்தான் வருகிறேன்.நான் மனநிலை பாதித்தவன் எனும் ரீதியில் தான்
இதையும் மனித இனம் அணுகித் தொலைக்கிறது. ஆனால் கேவலமாக மனிதன் என்ற பெயரால்
அழைக்கப்படுவதை விட இதை நான் மிகவும் விரும்பிகிறேன்.

 டப்பாவிகளே மனநல காப்பகத்தில் கூட என்னை தனியாக விடமாட்டீர்களா நீங்கள்?
இங்கேயும் சாரைசாரையாக வந்து என் தனிமையை கெடுக்கிறீர்களே..செத்து ஒழியுங்கள்… 
மாம் நான் தான் கொலை செய்தேன் ஆனால் கொலை செய்தது நானல்ல ஐயா
சந்தேகமெனில் என் நாட்குறிப்பைத் தான் கேளுங்களேன்.


 காலத்தை ஒழுங்குமுறை குலைத்தால் என்ன நடக்குமென்பது தான் மனிதன்
எனும் உணர்விலிருந்து என்னை விடுவித்தது.இப்போது அது மீண்டுமொருமுறை நடக்கத்தான் போகிறது.என்கழுத்தை சுற்றி இறுக்கப்பட்ட அந்த கயிறு அதன் இறுக்கத்தை கூட்டும்போது
இன்பமாக இருக்கிறது.உடலிலிருந்து வெளிப்பட்டு காலத்தை கவனிக்கிறேன்,வருடுகிறேன், கொஞ்சி மகிழ்கிறேன்.

நான் உடலாக,பருப்பொருளாக இருந்த போது இதே போல காலம் எனக்கு கைவந்திருந்தால்
என்செயல்களுக்கு அவசியமே இருந்திருக்காது.இப்போதும் தாமதமில்லை. இந்த பிரபஞ்சத்தை காப்பாற்ற என்னை விட்டால் வேறு யார்!? மனிதர்களாகிய உங்களை ஒழித்தாலே தப்பித்தது அது. ஒழுங்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் ஒழுங்கை ஒரேயொரு புள்ளியில் குலைத்தேன்.
அடுத்தகணம் பிரபஞ்சத்தை விழுங்கத்தொடங்கியிருந்தது காலம். பிரபஞ்சம் தன்னை தானே எளிதாக புதுப்பித்துக்கொள்ளும்,ஆனால் உன்னால் அது ஒருபோதும் முடியாது மனிதனே.
அதற்கு நீ கோடிக்கணக்கான வருடங்கள் சூன்யவெளியோடு சூன்யமாக கலந்து காத்துக்கிடக்கவேண்டும், நியாயவிலைக்கடையில் பொருள் வாங்கிவிடுவது போல எளிதானதல்ல அது. ஒரு வேளை இனியொரு முறை அந்த பிரபஞ்ச நோய் ஏற்படாமலும் போகலாம்.


னால் ஒன்று,பிரபஞ்ச அழிவையும் பாழாய்ப்போன விஞ்ஞானத்தால் வென்றுவிட முடியுமென
யோசித்துக்கொண்டிருக்கும் சவலைகளுக்காக சொல்கிறேன் வலி என்பதே துளியுமற்ற
சாவு தூக்கில் தொங்குவது தான் மனித இனமே ஒருவேளை பிரபஞ்ச அழிவை நீங்கள் தடுத்துவிட்டாலும் தயவு செய்து தூக்கில் தொங்கி செத்துப்போய் இங்கேயும் வந்து என் தனிமையைக்கெடுக்காதீர்கள்.







Tuesday 4 October 2011

தடம் திரும்பா பிறழ்வுகள்


  தை நான் பார்த்திருக்கக்கூடாது!! அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்!! எல்லோரும் என்னையே குறை சொல்லுகிறார்கள்....என்னையறியாமல் அந்த விஷயம் என் கண்ணில் பட்டதற்கு நானெப்படி பொறுப்பாக முடியும்?? முழு சதவிகிதம் என் தவறல்லாத ஒரு விஷயத்திற்காக என்னை மட்டுமே எல்லோரும் திட்டுவது எந்த விதத்தில் நியாயம்??
 பைக்கை அரக்கபரக்க அரைகுறை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தான் ரவி, கை கட்டி ஒரு ஓரமாக செய்வதறியாது திகைத்திருந்த என்னிடம்,
  "டேய் உனக்கு அறிவே கிடையாதாடா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? இதெல்லாம் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா??

   வாய திறக்கிறானா பாருங்க!!  உறுமினான்...
  "டேய் என் தப்பு இல்லடா.....!
 "மூடு ..இனி ஒரு வார்த்தை பேசாத...!

 அடப்பாவி அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் செய்துக்கிட்டிருந்தேன்?! மனதிற்குள் தான்!!

வருகிறவனெல்லாம் எனக்கு இலவச அர்ச்சனை செய்வதும், அப்படியே நாலடி நடந்து ஐ.சி.யூ-வை எட்டிப்பார்த்து உச்சுகொட்டிவிட்டு தீவிர ஆலோசனையில் ஆழ்வதுமாக இருந்தனர். நான் மட்டும் சுவற்றோடு ஒட்டி , கூனி குறுகி!!
 ராமனுக்கு சீரியஸ்!! இதுவும் கூட இங்கே கூடிய கூட்டத்திற்கு காரணங்களில் ஒன்று....இன்னொன்று என்னை திட்டி தீர்ப்பதற்காக இருக்கலாம்!! 
                                     ---------------------------------------------------------------
  அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது, எழுந்திருந்து ஜலக்கிரிடையை முடித்துக்கொண்டு, அறைக்குள் வருகையில் நின்றிருந்தான் சுரேஷ். 
    "மச்சி குளிச்சிட்டு வந்துடுறேண்டா, இந்தா என் போனை சார்ஜ்ல போட்டிருக்கேன் பாரு ...ஏதாச்சும் கால் வந்தா எடுக்காத! சொல்லிதொலைத்தவன் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு போயிருந்தாலும் பரவாயில்லை....
  அவன் போன மூன்றாவது நிமிடம் போன் அலறியது! நான் கண்டுக்கொள்ளவில்லை...

  ரெண்டு நிமிட இடைவெளியில் மீண்டும் அழைப்பு! 

 இன்னொரு முறை என்னால் இந்த சத்தத்தை சகிக்க முடியாது! இம்முறை போனை கையிலெடுத்தேன்.....அவன் வீட்டிலிருந்து அழைப்பு........லைன் துண்டிக்கப்பட்டதும் ஸ்கிரீனை பார்த்தேன்..... புது மெசேஜ் ஒன்று....ஃப்ரம் "டியர்"...என்றிருந்தது....அப்படியே வைத்துவிட்டிருக்கலாம்....ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் ஓபன் பண்ணிவிட்டேன்....அதை நான் செய்திருக்கக்கூடாது!!
                             ------------------------------------------------------------------
  எல்லோரும் இயல்பாகத்தானிருந்தார்கள்....எனக்கு தான் நிம்மதி வறண்டுவிட்டிருந்தது! இதில் எல்லோரும் ஏதோ தவிப்பிலிருப்பது போல ஒரு பிரமை வேறு! வகுப்பே சிரித்து திமிலோகப்பட்டுக்கொண்டிருக்க எனக்கு அந்த இடைவேளை நேரம் கூட சுமையாகி விட்டிருந்தது. நான் ஏன் வருத்தப்பட வேணும்?? எனக்கு என்ன வந்துச்சு?? வருத்தப்பட வேண்டிய ராமனே என்னருகில் உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்துக்கொண்டிருக்கிறான்! இரண்டு பெஞ்ச் தள்ளி சுரேஷ்...!
  ராமனுக்கு லவ் ஃபெயிலியர்...! முதலாமாண்டிலிருந்தே தீவிரமாக என் வகுப்பு பெண்ணை காதலித்து வந்தான்...அவளும் கூட....
 எல்லோரும் இவர்களின் காதலை வியந்து பாராட்டினாலும் ஆரம்பம் முதலே எனக்கு இதில் உடன்பாடே இல்லை...இங்கு உடன்பாடு என்பது..இவர்கள் சின்சியராக காதலித்தார்கள் என்பதில் உடன்பாடில்லை எனும் பொருள் பெறுகிறது.
அட்மிஷன் போட்ட மூன்றாவது நாள் முளைத்த காதலிது. வருகைபதிவேட்டில் இவர்களிருவரது பெயர் உறுதியாவதற்கு முன்பே வகுப்பு சகாக்கள் இவர்களது காதலை உறுதிப்படுத்திக்கொண்டு கேன்டீனிலும்,கஃபேயிலுமாக மாறி மாறி ஆற்றிக்கொண்டிருந்தார்கள்.அவளது பெயர்?? அவளது பெயரை நினைக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு கெட்டவார்த்தையும் சேர்ந்தே வருகிறது!

  சொந்த ஏர்செல்லிலும், ஓசி ஏர்டெல்லிலும், குளிக்கப்போயிருந்த நண்ப,நண்பிகளின் பி.எஸ்.என்.எல்லிலும் காதலை ஜோராக வளர்த்தார்கள்... தெரு தெருவாக சுற்றுவதும், வகுப்பில் ஒரே ரொமாண்ஸுமாக ஒரே தொல்லை! ஒரே வாரத்தில் மொபலில் இருந்த ஆயிரம் ரூபாயை பேசி தீர்த்திருப்பதாக கஃபேயில் காபி குடித்துக்கொண்டிருக்கும்போது சொல்லி மார்தட்டிக்கொண்டான் ராமன்.நான் எதுவும் பேசவில்லை....உனக்கு பொறாமை என்றான்! நினைத்துக்கொள்ளட்டுமென 
 விட்டுவிட்டேன்.
     மூன்றாம் செமஸ்டர் வருவதற்கு முன்னமே நான் எதிர்பார்த்தது நடந்தது....செல்லம், வைரம், புஜ்ஜு எனக்கொஞ்சிக்கொண்டிருந்தவர்கள், குழாயடி தண்ணிக்கு சண்டைபோடுவதைப்போல போனிலேயே சிண்டு முடிய ஆரம்பித்தார்கள். 

 நேருக்கு நேரான பெஞ்ச்களில் மட்டுமே உட்கார்ந்து ரொமாண்ஸ் பண்ணும் பழக்கம் கூட புளித்துவிட்டிருக்க வேண்டும்!இப்போதெல்லாம் "அவள்" இவனை முறைக்க கூட கடைசி பெஞ்சை நோக்கி கழுத்தை திருப்ப வேண்டியிருந்தது .

  அவர்கள் காதலின் ஆரம்ப துளிர்ப்பு நிலை வலுப்பெற காரணமான நண்பர்கூட்டம் இப்போது எங்கே என்றே தெரியவில்லை! ஆனால் நான் வழக்கம் போல அவனோடு பேசி ,பாவித்திருந்தேன்.
                                      ----------------------------------------------------------------
 ஒரு மாதத்தில் எல்லாமும் முடிந்துவிட்டிருந்தது. ஆரம்பத்தில் அவளைப்பற்றியே பேசி சலிப்பான் ராமன்.இப்போதெல்லாம் மறந்துவிட்டிருந்தான் நடைபாதை கடைகளில் அவள் பெயரை பார்க்கும் போது கூட என்னிடம் கதையளக்காமல் கடந்து செல்லுமளவுக்கு! எப்போதாவது அவள் ஞாபகம் வந்தால் புகைவிட்டு மழுங்கிப்போகச்செய்துகொள்கிறான் . எப்படியோ எனக்கு தொல்லையில்லாமல் கடந்தன இரண்டு வாரங்கள்! ஆங் என் இன்னொரு நண்பனான சுரேஷ் பற்றி 
 சொல்ல மறந்தேவிட்டேனே...அவனும் எனக்கு ராமனை போல நெருக்கம் தான். என்னைவிட ராமனுக்கு ரொம்பவும் நெருக்கம்! "அவளும்,இவனும்,அவனும் கூட ஒன்றாக பேசி சிரித்திருக்கிறார்கள். ஏன் காதலை கைவிட்டானென நான் கேட்டதேயில்லை...அவனும் சொல்லவில்லை....
                                                     -----------------------------------
காலேஜ் முடிந்து பேருந்து பிடிக்க வேண்டிய அவசரத்தில் இருந்த நான் கால்குலேட்டரை பெஞ்சிலேயே விட்டுவிட்டதை பஸ்ஸ்டாப்பில் தான் உணர்ந்தேன். 
 ராமனை காத்திருக்கசொல்லிவிட்டு வேகவேகமாக ஓடிப்போய் பார்த்தால் கதவு பூட்டியிருந்தது. திகைத்துப்போய் துப்புரவு ஆயாவை அணுகினால் இன்னும் ரூமை பூட்டலப்பா போய் பாரு என்றாள். அட ஆமாம் கதவு சும்மா தான் சாத்தியிருந்தது.! ஒரு தள்ளு தள்ளினேன் ...உள்ளே நான் கண்ட காட்சி...........................
                                         ----------------------------------------------------------

 அந்த காட்சியே நான் "அவளை" அந்த கெட்டவார்த்தையோடு விளிப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது! அந்த சம்பவம் எனக்குள் எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.  அவரவர் விருப்பம் ...நான் ஏன் திட்ட வேணும்?? எவள் எவனோடு போனால் எனக்கென்ன?? நானாக திட்டவில்லை....அமைதியாக இதெல்லாம் சகஜம் தானென எண்ணி விட்டுவிட்டேன்.ஆனால் அந்த விளித்தலை நியாயப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது..
  அன்றிரவு தூக்கம் வராமல் நான் புரண்டு படுத்தாலும் அதிகாலையிலேயே விழிப்பு தட்டிவிட்டது, எழுந்திருந்து ஜலக்கிரிடையை முடித்துக்கொண்டு, அறைக்குள் வருகையில் நின்றிருந்தான் சுரேஷ். 
    "மச்சி குளிச்சிட்டு வந்துடுறேண்டா, இந்தா என் போனை சார்ஜ்ல போட்டிருக்கேன் பாரு ...ஏதாச்சும் கால் வந்தா எடுக்காத! சொல்லிதொலைத்தவன் போனை சைலண்ட் மோடில் போட்டுவிட்டு போயிருந்தாலும் பரவாயில்லை....
  அவன் போன மூன்றாவது நிமிடம் போன் அலறியது! நான் கண்டுக்கொள்ளவில்லை...

  ரெண்டு நிமிட இடைவெளியில் மீண்டும் அழைப்பு! 

 இன்னொரு முறை என்னால் இந்த சத்தத்தை சகிக்க முடியாது! இம்முறை போனை கையிலெடுத்தேன்.....அவன் வீட்டிலிருந்து........லைன் துண்டிக்கப்பட்டதும் ஸ்கிரீனை பார்த்தேன்..... புது மெசேஜ் ஒன்று....ஃப்ரம் "டியர்"...என்றிருந்தது....அப்படியே வைத்துவிட்டிருக்கலாம்....ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் ஓபன் பண்ணிவிட்டேன்....அதை நான் செய்திருக்கக்கூடாது!!
 மூன்று வினாடி பிராஸஸுக்கு பிறகு இப்படியாக விரிந்தது அந்த குறுஞ்செய்தி,
  "சுரேஷ் அந்த சிவா (நான் தான்) நேத்து சாயங்காலம் என்கிட்ட புரஃபோஸ் பண்ணுறாண்டா!!
அடுத்த மெசேஜ்,
   "சுரேஷ் செல்லம் எங்க போய்ட்ட...அவனை என்ன பண்றது?? நான் என்னோட நோட் எடுக்க கிளாஸுக்கு போனப்போ இப்படி பேசுறான்!ஆனா நான் கண்டுக்கலை...எனக்கு நீ தாண்டா செல்லம் எல்லாமே...எனக்கு நீ தான் முக்கியம் ...அவன் நான் கிடைக்காத கோவத்தில உன் கிட்ட வந்து என்னை மத்தவங்களோட பார்த்ததா கூட சொல்லுவான் நம்பிடாதடா செல்லம்..உம்ம்மாமா "
  "நீ அவன்கிட்ட கேக்காத ,,,நானே பாத்துக்குறேன்...என்ன பண்ணட்டும் சொல்லு!
 "ரிப்ளை மீ மீ மீ மீ ",
அடுத்தடுத்த மெசேஜ்களில் என் ரத்தம் கொதிநிலையை அடைந்துவிட்டிருந்தது....
அடி "______________________________" என கத்திவிட்டேன் என் பொறுமையை மீறி......
பின்னாலேயே ராமன் நின்றிருந்ததை நான் கவனிக்கவில்லை....நான் "அவளை" திட்டியதை நியாயப்படுத்த உண்மைகளை உரைக்க வேண்டியாகிவிட்டது.
                                              ------------------------------------------------------

PRE-CLIMAX:
சொல்ல சொல்ல கேட்காமல் காலேஜ்க்கு லீவு போட்டான் ராமன். அவன் சுரேஷிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.அமைதியாக இருந்தான்.அவன் பக்குவத்தை எண்ணி வியந்துகொண்டே காலேஜை அடைந்தேன்.. ரூமில் தனியாக ராமன் இருந்தான்.


சரியாக மாலை ஐந்தரை மணிக்கு அழைப்பு அவசரமாக கே.எம்.சிக்கு வர சொல்லி...ராமன் என்னும் புண்ணாக்கின் பக்குவ நீட்சியை அசிங்க அசிங்கமாக திட்டியபடியே வந்து சேர்வதற்குள் எல்லோரும் கூடி விட்டிருந்தார்கள்...நான் உள்ளே போனதுமே சூழ்ந்துக்கொண்டு கன்னா பின்னாவென திட்டிதீர்த்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.என்ன மருந்தை ராமன் சாப்பிட்டதால் ஐ.சி.யூவில் வைத்திருக்கிறார்கள் என்று கூட யாரிடமும் கேட்க முடியாது!கொலை 
வெறியில் இருக்கிறான்கள் என்மேல் என் நிலையை சொன்னால் கேட்க வார்டு நர்ஸை தவிரவும் அங்கு யாரும் தயாராயில்லை.கூட்டத்திலிருந்து விலகி ஒரு 
ஓரமாக சுவரோரம் ஒதுங்கினேன்!   

  பைக்கை அரக்கபரக்க அரைகுறை ஸ்டாண்ட் போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தான் ரவி, கை கட்டி ஒரு ஓரமாக செய்வதறியாது திகைத்திருந்த என்னிடம்,
  "டேய் உனக்கு அறிவே கிடையாதாடா?? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டியா?? இதெல்லாம்
நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியாதா??

வாய திறக்கிறானா பாருங்க!!  உறுமினான்...
  "டேய் என் தப்பு இல்லடா.....!

"மூடு ..இனி ஒரு வார்த்தை பேசாத...!

 அடப்பாவி அதைத்தானே நான் இவ்வளவு நேரமும் செய்துக்கிட்டிருந்தேன்?! மனதிற்குள் தான்!!

  வருகிறவனெல்லாம் எனக்கு இலவச அர்ச்சனை செய்வதும், அப்படியே நாலடி நடந்து ஐ.சி.யூ-வை எட்டிப்பார்த்து உச்சுகொட்டிவிட்டு தீவிர ஆலோசனையில் ஆழ்வதுமாக இருந்தனர். நான் மட்டும் சுவற்றோடு ஒட்டி , கூனி குறுகி!!இதிலும் குரு ரொம்பவும் எகிறினான்.அவன் தான் அன்று கால்குலேட்டர் எடுக்க   போகையில்..............................


   நேரமாக நேரமாக எனக்கு பதட்டம் கூடியது. சுமார் எட்டரை மணிவாக்கில் ராமன் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக சொன்னார்கள். அப்போது கூட எல்லோரும் உள்ளே சென்று பார்த்துவர...என்னை மட்டும் உள்ளேவிடமாட்டேன் என்றார்கள்.
 நான் இப்போதைக்கு ரூமுக்கு திரும்புவது தான் உசிதம். 


POST-CLIMAX:
     தூக்கம் வராமல் புரண்டு படுத்திருந்தேன்.சிந்தனையெல்லாம் நண்பர்களை  சமாதானப்படுத்தப்போகும் வழியையே எண்ணிக்கொண்டிருந்தது . மணி 12ஐ நெருங்குகையில்.  மொபைல் சினுங்கியது. நியூ மெசேஜ்!!  ஏதோ அன்னோவ்ன் நம்பரிலிருந்து!! திறந்தேன்..

 "சிவா செல்லம்...............என ஆரம்பித்து காதல் ரசம் தளும்பும் காக்டெயில் மெசேஜ் அது! என்ன சொல்ற நீ?? என்று முடிந்திருந்தது. 


                 இப்படிக்கு,
                  "அவள்"    
எனக்கும் கூட அந்த மெசேஜை திரும்ப ஒருமுறை படிக்க வேண்டும் போலிருந்தது!   

கடவுளாகும் சூட்சுமம்



   ன்னை நம்பக்கூடிய அளவு அறிவுள்ள ஜீவராசி பூமியிலேயே இல்லையோ என ஒருகணம் நினைக்க தோன்றியது.பிறகென்ன?  வெறுப்பாக இருக்கிறது! நான் கடைசியாக இந்த விஷயத்தை சொன்னது என் கண்ணில்பட்ட பதினெட்டாவது மனிதனிடம்! வழக்கம் போல அவனும் இதை சட்டை செய்யாமல் வராத எச்சிலை சிரமப்பட்டு ஒன்றுதிரட்டி அவனுக்கு பக்கவாட்டில் எனக்கு எதிர்திசையில் துப்பிவிட்டு ஏதும் பேசாமல் கடந்து போயிருந்தான்! அவனது எச்சில் விரவிய காற்றுபட்ட அந்த சிலவினாடிகள் மட்டும் அவமானம் வெகுண்டு நான் பார்த்தது பொய்யோ என மீண்டும் ஒருமுறை நினைக்க தொன்றியது...ச்சே வாய்ப்பே இல்லை...நிச்சயம் நானே என் கண்ணால் பார்த்த அதிசயம் அது..இருப்பினும்  நேரடியாக பார்த்த நானே இன்னும் முழுமையாக நம்பாத ஒரு விஷயத்தை சொன்ன மாத்திரத்திலேயே 18 பேர் நம்பிவிட வேண்டுமென எதிர்பார்த்தது என் முட்டாள்தனம் தான்..மீண்டும் ஒரு முறை காட்சிகளை மனதில் சம்பவிக்க விட்டு பார்த்தேன்.. வாய்ப்பே இல்லை....அவர் நிச்சயம் கடவுளே தான்..



யாருக்கும் வாய்த்திராத ஒரு அதிசயம் எனக்கு நடந்தது..! அமைதியாக அதே சமயம் அவசர அவசரமாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த என்னை வழிமறித்தது அந்த உருவம். கரும் நிறத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில் அசாதாரணமான தாடி மீசையுடன்...முதலில் ரொம்பவும் பயந்து தடுமாறிவிட்டேன். நகரமுடியாமலும், நம்ப முடியாமலும் நின்றிருந்த என் மன தடுமாற்றத்தை அவ்வுருவம் அறிந்திருக்க வேண்டும்...ஆனாலும் அவர் வாயை திறக்க முற்படவில்லை..சாந்தமான பார்வையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார். பயம் விலகி..லேசாக ஒளிரும் அவரது சருமத்தை ஆச்சரியமாக பார்த்தபடி இருந்தேன். திடீரென என்ன நினைத்தாரோ தெரியாது. சிலபல ஜாலங்களை என் முன் நடத்திக்காட்டினார். ஊமை இருள் படரத்துவங்கிய அந்த நீண்ட நெடும் சாலையின் மங்கலான நிலவொளியில் அவரால் ஆல்ப்ஸ் மலைத்தொடரை கண்முன் வரவழைத்து காட்ட முடிந்தது,ஆப்பிரிக்க ஆதி இனம்,பிரபஞ்ச இயக்கம், விண்மீனின் அழிவு என பலவும் என் கண் முன்னால்... சிறு வயதில் கைகளால் இயக்கப்படும் புரஜெக்டரில் தான் இப்படியான ஒளிசார்ந்த அதிசயங்களை பார்த்திருக்கிறேன். இவர் அதனினும் அதிசயமாக வெறும் கைகளிலிருந்தே ஒளியை விரியச்செய்து  திரேதாயுகத்தின் பன்னிரெண்டு லட்சத்து சொச்சம் வருடங்களையும்,துவாபர யுகத்தின் நான்கு லட்சத்து வருடங்களையும் திரித்து நீட்டி ஏதோ வெள்ளி நிற நூலிழையாக திரட்டி காட்டினார்.  எனக்கு அதை தொட்டு பார்க்க வேண்டும் போலிருந்தது...அவர் மறுப்பேதும் சொல்லவில்லை,  இருந்தாலும் கூட  அவரது அமைதி தழுவும் புன்னகையை மீறி என்னால் எதையுமே செய்யமுடியவில்லை...அவர் எனக்கு சொல்ல நினைப்பதை எல்லாம் அவரது கண்கள் மூலமாகவே என் மனதில் பதிய செய்வதை போலிருந்தது.ஒருவித பரவச உணர்வு என்னை ஆட்கொண்டது போலொரு அயர்ச்சி...எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் கேட்க என்னிடம் நான்கு கேள்விகள் இருந்தன....ஆனால் அவரை போல கண்களால் செய்திகள் சொல்லும் வித்தை எனக்கு தெரிந்திருக்கவில்லை...வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை!! குறைந்தபட்சம் "மீண்டும் உங்களை எப்போது பார்க்கலாம்?" என்ற நான்காவது கேள்வியையாவது கேட்டு தொலைத்திருக்கலாம்....அன்றிரவு மட்டும் 38 முறை அதை நான் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்ததாக அம்மா அடுத்தநாள் காலையில் சொல்லி சிரித்தாள். இதை ஏன் நான் ஒரே ஒரு முறை அவரிடம் செய்யவில்லை?? என்பது இப்போது எனது ஐந்தாவது கேள்வியாகிவிட்டிருந்தது.
அசாதாரணமாக விடிந்த அந்த காலை வேளையில் அம்மாவிடம் கூட இதை சொல்ல தோன்றவில்லை.விழுந்து விழுந்து சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த அவளை பார்க்க எனக்கு பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது.  




நாட்கள் நகர்ந்தாலும்..தினம் தினம் அந்த நிகழ்வு எனக்கு முந்தைய நாள் மாலை தான் நடந்தாற்போல ஒரு உணர்ச்சி.. என் வழக்கமான அலுவல்களை தாண்டி அவரை மீண்டும் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு தொக்கி தவிக்க செய்தது.  
அவரை நான் மிகத் தீவிரமாக தேடத்தொடங்கிய இந்த நான்கு மாதங்களில்  விசித்திரமான சில சம்பவங்கள் நடந்தேறின,

சம்பவம்:1
  அவரை நான் முதன்முதலில் சந்தித்த சாலை சந்திப்பில் தார் சாலை அகற்றப்பட்டு, ஒரு கடவுளின் பிரகாரத்தோடு, ஒரு சிறு கோவிலும்,அதை சுற்றி பூத்து குலுங்கும் செடி கொடிகளும் உருவாக்கப்பட்டன.எப்போதுமே ஓய்வில்லாமல் இயங்கும் அந்த சாலை சந்திப்பை திடீரென வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன?  என என் நண்பனிடம் கேட்டு வைத்தேன்,பதிலில்லை.
சம்பவம்:2
  அவர் காட்டிய வெள்ளி இழையை பார்த்ததிலிருந்து இரவு நேர வானங்கள் ஒருவித அகோர சப்தங்களை என்னுள் மட்டும் பிரத்யேகமாக எழுப்புவதை போலவும், ஏதேதோ சாஸ்திரங்கள் என் காதில் ஓதப்படுவது போலவுமிருந்தது. இவற்றை மொட்டைமாடியில் படுத்துறங்குவதை நான் நிறுத்தியிருந்தாலே தவிர்த்திருக்கலாம் என்றாலும்..மேற்புறம் மூடப்பட்ட அறைகளில் உறங்க முனையும் வேளைகளில் என் சாவு நேர சம்பவங்கள் ஒன்று கூடி என் காதுக்குள் சம்பாஷிப்பது  போன்ற உணர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. மொட்டை மாடி உறக்கங்களை என்னால் அவ்வளவு எளிதில் உதறிவிட முடியவில்லை.
சம்பவம்:3
  என்னை சுற்றி வெண்மையான இறக்கைகள் கொண்ட விநோத மனிதர்களும், உடலெல்லாம் கருமை பூண்ட கொடூர மனிதர்களும் நடமாட ஆரம்பித்தார்கள். அவர்கள் என் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறார்கள் என உணரும் பொழுதுகளில் ஒருவித பயம் என்னை கவ்வ துவங்கியிருந்தது. வெள்ளை மனிதர்களும், கருமை மனிதர்களும் தாவி, பறந்து போர் புரிந்து கொண்டார்கள்.
சம்பவம்:4
  நான் கடவுளை சந்தித்த அதே தேதியிட்ட தபால் ஒன்றை தபால்காரர் என் வீட்டில் கொடுத்துவிட்டு போயிருந்தார்.ஒரு குறிப்பிட்ட முகவரியிட்ட அந்த தபாலில்   நான் அவரிடம் கேட்கவிருந்த கேள்விகளை அவர் அறிந்திருந்ததாகவும், கலியுகத்தில் கடவுளர்களுக்கு பேசும் திறன் இல்லையெனவும், சித்திரை பௌர்ணமியொன்றில் மக்கள் குறைகளை அவர் தீர்க்கவிருப்பதாகவும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், நுழைவுக்கட்டணத்தை வசூலிக்கவும் என்னை தேர்ந்தெடுத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.கலியுகத்தில் கடவுளர்களால் பேச முடியாதென்றால் என்னால் ஏன் 'அந்த' நாளில் பேச முடியாமலிருந்ததென்ற என் ஆறாவது கேள்விக்கும் கூட அந்த கடிதத்தில் பதிலில்லை.
                       


ன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதை போல ஒரு உணர்வு ஆட்கொள்ள....என் வயிற்று பிழைப்பு எனக்கு துச்சமாக பட்டது..அப்போது எனக்கிருந்த ஒரே கவலை மக்களை நம்பச் செய்து ஒன்று திரட்டுவது.சந்தேகத்துடன் தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். மக்களை நம்ப வைப்பது நான் எதிர்பார்த்த அளவுக்கு சிரமமாக இருக்கவில்லை.....நானே எளிதில் நம்பிவிடாத தன்மை கொண்ட என் பேச்சை முதல்முறை கேட்கும்போதே அதிசயம்போல் நம்பினார்கள்.. நுழைவுகட்டணத்தை செலுத்தி அவரவர் பெயர்களை பதிந்து கொள்ளவும் செய்தார்கள்,ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் மக்களே பிரச்சாரத்திலிறங்கிய அதிசயமும் நடந்தது.  மூன்றே வாரங்களில் என்னிடம் சேர்ந்த சில லட்சம் கோடிகளை என்னால் பாதுகாக்க முடியவில்லை ...மேலும், இவ்வளவு நபர்களை எப்படி கடவுளால் ஒரே நாளில் சந்தித்துவிட முடியும் என்ற சந்தேகமும் என்னை குடைந்தெடுத்தது,கடவுளிடமே கேட்டுவிட்டால் உசிதமென முடிவெடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட அந்த பௌர்ணமிக்கு முந்தின நாள் அவரை சந்திக்க அவரது தபாலில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேரில் போனேன்...ஒரு பெரிய மைதானத்தில் ஒரே  ஒரு சாதாரண ஆறுக்கு-நாலு அறையில் சாந்தசொரூபியாக வீற்றிருந்தார் "கடவுள்", இம்முறையும்,எனக்கு கேள்விகேட்கும் வாய்ப்பை அவர்வழங்கவேயில்லை...கொஞ்ச நேரம் நின்றிருந்துவிட்டு.வாகனத்தில் கொண்டு போயிருந்த  பணத்தை அங்கேயே வைத்துவிட்டு அமைதியாக திரும்பி வந்துவிட்டேன். 




'டவுள்" குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது... அன்று விடியற்காலையிலிருந்தே மக்கள் என்னை மொய்க்கத் தொடங்கினர். மக்கள் புடைசூழ, கடவுளின் இருப்பிடம் நோக்கி நடந்தே பயணித்தேன். லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர...பரந்து விரிந்த மைதானத்தில் மக்கள் நிறைந்திருக்க.. மக்களை அறைக்கு வெளியே நிறுத்திவிட்டு, கதவை திறந்து உள்ளே சென்று தாழிட்டேன்...அறை வெறிச்சோடி கிடந்தது ,கடவுள் அங்கு இல்லை!!! "30 நாளில் மோசடியை கற்றுக்கொள்வது  எப்படி" என்ற புத்தகம் மட்டும் கீழே சிதறிகிடந்தது.அறையை சுற்றி வெளியே காத்திருக்கும் மக்களை பற்றிய பயத்தையெல்லாம் தாண்டி, புதிதாக ஏழாவது கேள்வி ஒன்று என் மனதை குடைந்தெடுக்க ஆரம்பித்தது,

"நான் ஏன் கடவுளாக பிறக்கவில்லை??" 

ஒலிம்பிக் தங்கமும், திருடனின் மனைவிக்கு வந்த பங்கமும்


கால்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தான் முதலாமானவன்....நெருக்கடியான அந்த தெருவின் ஆறடி சாலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினவன் கூட அப்படி ஓட முடியாது, ஆங் பின்னங்கால் பிடறியிலடிக்க....அப்படின்னு கூட ஏதோ சொல்லுவாங்களே..ஆனால் இவன் பண்ணிய வேலைக்கும், ஓடும் வேகத்துக்கும் முன்னங்காலே பிடறியில் அடிக்காத குறை.... கிட்டதட்ட சேரி எஃபெக்டில் இருக்கும் "செம்பட்டின்" அந்த தெருவில் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தான் . தெருவின் இருபுறமும் இருக்கும் வீடுகளின் வாசல்கள் கிட்டதட்ட ஒட்டினாற் போல் இருக்கும் சந்து பொந்துக்களில்...ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தட்டுமுட்டு சாமாங்களை கண்டபடி மிதித்தபடி உயிரை கையில் இறுக்க பிடித்துக்கொண்டு....மன்னிக்கவும்....கையில் ஒரு பர்ஸை இறுக்க பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.'ஓட்ட' ஜோசியம் தெரிந்திருந்த ஒரே காரணத்தினால் இவனை என்னால் இனம் காண முடிந்தது.இவன் திருடன்.



ல்லைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள் இரண்டாமானவள், செம்பட்டையடுத்த குண்டூரிலிருந்து ஓட்டமும் நடையுமாக தன் கேரக்டரை நிறைவாக தொடங்கியிருந்தாள் இவள். 

"பாவிப்பய மகன், வேசி மகன்..ராத்திரி அவ்ளோ சொல்லியும் கேக்காம மறுபடியும் திருடபோயிருக்கானே ...உருப்புடுவானா இவன் ...அய்யயொயொயோ".....

என ஆம்புலன்ஸ் சைரன் போல இவள் கதறிக்கொண்டு வந்தது...பிறவி செவிடர்களுக்கு கூட கேட்காமல் இருந்திருக்காது. இந்த நாய் நிச்சயம் செம்பட்டுக்கு தான் களவாடப்போயிருக்கும்....நேத்து தான ஏட்டையா எச்சரிச்சு வுட்டான்....இனிமே திருடினா இவன உரிச்சு எடுத்திருவேன்னு வேற சொன்னானே அந்த தொப்பை ஏட்டு.....நான் கூட இனி இவன் திருட மாட்டான்னு புள்ள மேல சத்தியம் பண்ணி காப்பாத்தி விட்டனே....புள்ளை கூட நேத்திக்கு வந்து அழுதுச்சே...பள்ளிகூடத்துல உங்கப்பாரு என்ன தொழில் பண்றாருனு கேட்டா பதில் சொல்ல முடியலன்னு......இப்படியெல்லாமும் இவள் நினைத்துக்கொண்டு ஓட்டமும், நடையும், பதற்றமுமாக நடந்து கொண்டிருந்ததை வைத்து இவளை இனம் காண டெலிபதியை டீ, காஃபி போல குடிக்கும் என்னால் முடிந்தது...இவள் திருடனின் மனைவி...




வியர்வையும், ஓட்டை புல்லட்டின் இஞ்சினிலிருந்து டீசலும் தெறிக்க புல்லட்டை ஓட்டிக்கொண்டிருந்தான் மூன்றாமானவன்....இவன் கொஞ்சம் கார்ப்பரேட் வாசி போல தென்பட்டான்...கோஸ்ட் ரைடர்ஸில் வரும் ஜானி பிளேஸை தோற்கடிப்பது தான் இவன் லட்சியம் என்பது இவன் சொல்லாமலேயே இவன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது....இவனை கொஸ்ட் ரைடர்ஸோடு ஒப்பிட்டது இவனது வேகம் குறித்தது.ஆனால் இவன் மூகத்தை பார்க்க எதையோ பல்க்காக பறிகொடுத்தவன் போலிருந்தான்.  திருச்சி டோல்கேட்டில் இயங்கத் தொடங்கிய இவனது மெஷின் குதிரை செம்பட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

"கொய்யால....அவன் மட்டும் கையில சிக்கினான் செதைச்சிடுவேன்..._______முண்டம்"....

என அவன் கத்தியது. அவனது மெஷின் குதிரையின் இரைச்சலைத் தாண்டி யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. வழியில் ஒரு பெரியவரை வழிமறித்து 

"இந்த வழியா ஒருத்தன் சிகப்பு கலர் சட்டை போட்டுகிட்டு போனானா பெரியவரே??

"______________ங்ங்கே.."வென பெரியவர் விழிக்க...

"டோல்கேட்டில நான் பஸ்ல இருந்து இறங்குறப்போ என் பர்சை அடிச்சிக்கிட்டு ஓடி வந்துட்டான் அதனால் தான் கேக்குறேன் பெரிசு...சீக்கிரம் சொல்லு எனக்கு நேரம் ஆகுது"அவசரப்படுத்தினான்.

"_______________________"

"அந்த ஆளு செவிடுப்பா..அவன் தாலிய ஏன் அறுக்குற?? " இன்னொரு பெரிசு எகத்தாளமாக ஏசிவிட்டு கடந்து போனது. 

சப்பென ஆகிவிட்டது இவனுக்கு...மீண்டும் புல்லட்டை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு...தன் கெட்ட
வார்த்தை அர்ச்சனைகளை தோடர்ந்தபடி...ஓட்டதொடங்கினான்.
'புல்லட் ஜோசியம்' தெரிந்திருந்தும் கூட என்னால் இவனுடைய பர்ஸ் காணாமல் போனதால் தான் இவன் மூஞ்சியை இப்படி வைத்திருக்கிறானென்ற பேருண்மையை சிரமப்பட்டு கண்டுபிடிக்க வேண்டியதாய் போய்விட்டது .இவன் பர்ஸை கோட்டை விட்டவன். கோட்டைசாமி என இனி விளிக்கப்படுவான்.



கால்தடுக்கி தொபுக்கடீரென கீழே விழுந்தான் திருடன்...

"சனியன் கண்ண எங்க பொடறியலயா வெச்சினு கீற?" 

குப்பத்து ஆண்டியின் அர்ச்சனையையும், மீசையில் ஒட்டியிருந்த மண்ணையும் அசால்ட்டாக  துடைத்து தள்ளியபடி மீண்டும் எழுந்து ஓட எத்தனித்தான் திருடன். முடியவில்லை..முட்டி பெயர்ந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது....பலத்த அடி...அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை....சோகமாகவும், கோபமாகவும் தன்னை தடுக்கிவிட்ட கல்லை திரும்பி பார்த்தான் . கருப்பும் வெள்ளையும் கலந்த கல்...கொஞ்சம் கிட்டே நெருங்கினான்... மைல் கல்!!!
அழுக்கு படிந்திருந்த கல்லை நன்றாக துடைத்துவிட்டு பார்த்தால் இடப்பக்கம் அம்புகுறி போட்டு..மெயின்ரோடு 300 மீட்டர் என்றிருந்தது...திருடனுக்கு "கொள்ளை" மகிழ்ச்சி! 
"உசுரு இல்லாட்டியும் என்னைய காப்பாத்தினயே கல்லே...தாங்க்ஸுப்பா..மெயின்ரோட்டுக்கு போனா எப்பிடியும் தப்பிச்சிரலாம் ...இன்னும் கொஞ்ச நேரம் நான இங்கனையே சுத்திகினு இருந்திருந்தா என்ன சுளுவா பிடிச்சிருப்பானுங்க" என சொன்னதோடு கல் காட்டிய திசையில்  நொண்டி நொண்டி நடையை கட்டினான்.




ந்த திருட்டு கம்னாட்டி எங்க அடி வாங்கிட்டு இருக்கானோ!! கடவுளே என் தாலிய காப்பாத்து என புலம்பிக்கொண்டே வேகத்தை கூட்டி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் திருடனின் மனைவி...அந்த விமலா சனியன் வேற எம்புருஷன் உத்தமன்,குடிக்கிறதில்ல, சீட்டாடுறதில்ல ஒழுங்கா கூலி வேலைக்கு போறான் அப்படி இப்பிடின்னு பீத்திகிட்டு மினுக்கிட்டு திரியறா...நாங்கூட எம்புருஷன் திருந்திபிட்டான்...இப்பவெல்லாம் திருடறதில்ல...பால்பண்ணைக்கு வேலைக்கு போறான்னெல்லாம் அடிச்சு விட்டுட்டனே...இப்ப இந்த சனியன் திருப்பியும் மாட்டிகிட்டு ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருச்சின்னா தெருவுல மானம் போய்டும், விமலா காறி துப்புவா...வேற வூடு பாக்கறத விட்டா வேற வழி இல்ல...இந்த கடங்காரன கட்டிகிட்டு ஒரு ஊருல நிரந்தரமா இருக்க முடியல..எங்க போனாலும் சனம் காறி துப்புது..இன்னிக்கு மட்டும் கையில கெடைக்கட்டும்..தாலிய அறுத்து மூஞ்சியில எறிஞ்சுபிடுறேன்...எம்புள்ளைய கூலி வேலைக்கு போயி காப்பாத்த எனக்கு தெரியும்! என "கடவுளே தாலிய காப்பாத்து"வில் தொடங்கி "தாலிய அறுத்து எறியனும்" வரைக்கும் திருடனின் மனைவியின் புலம்பல்கள் பல தளங்களில் பயணித்தன.



முழுக்க முழுக்க கோபம் கொப்பளிக்க மெஷின் குதிரையின் கர்ணகொடூர சத்தமும் சேர்ந்து கொள்ள திருடனை கொண்டு போக புல்லட்டில் வரும் எமன் கணக்காக மூஞ்சியை வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தான் கோட்டை சாமி'...அதை கோபம் என்று கூட சொல்ல முடியாது...வெறி!...திருடன் கையில் கிடைத்தால் கொத்து பரோட்டா போட்டுவிடுமளவுக்கு வெறி.இருக்காதா பின்னே ?! காலையில் அம்மாவுக்கு ஆபரேசன் செலவுக்காக பணம் எடுத்துகிட்டு பேங்குல இருந்து டவுன் பஸ்ஸுல ஆஸ்பத்திரிக்கு திரும்ப போற வழியில தான் ஒரு திருட்டு நாய் பர்சை அடிச்சிகிட்டு ஓடிட்டுது! சுளையா 30 ஆயிரம் ரூவா சலவை நோட்டுகள்...இன்னிக்கு அந்த பணம் கெடைக்கலேன்னா..அம்மாவோட கதி என்ன?? என அவன் கொஞ்சம் வாய்விட்டே புலம்பியது..அவனையும், அவன் புல்லட்டையும் தாண்டி எனக்கு மட்டும் கேட்டது. 



திருடன் மெயின்ரோட்டை தாண்டி ஒரு முச்சந்தியில் ஏதாவது வண்டி வருமா என எதிர்பார்த்து காத்திருந்தான். திருடனின் முதுகு பக்கமிருந்த சாலையில் வேக வேகமாக வந்துக்கொண்டிருந்த திருடனின் மனைவி இவனைக்கண்டதும் வேகமெடுத்தாள்.


புல்லட்டில் வந்துகொண்டிருந்த கோட்டைவிட்டவனின் புல்லட் அந்த முச்சந்திக்கு வந்ததும் மக்கர் பண்ணியது. பைக்கை விட்டிறங்கி என்னவோ நோண்டிக்கொண்டிருந்தான்.டீசல் தீர்ந்துவிட்டிருப்பதை கண்டுபிடித்து.."ஷிட்" என புல்லட்டை உதைத்தான்..யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என சுற்றி பார்த்தால் அவனுக்கு எதிர் சாலையில் முதுகை காட்டியபடி திருடன்.கிட்டதட்ட அவனை நோக்கி ஓடினான்.


திருடனிடம் வந்த திருடனின் மனைவி அவனிடம் ...

"ஏய்யா இந்த பக்கம் போனா செம்பட்டு வரூமா? என கேட்டாள்..

ஆமோதிப்பது போல திருடன் தலையாட்ட அந்த திசை நோக்கி தனது புலம்பல் நடையை தொடங்கினாள் திருடனின் மனைவி.



திருடனை நெருங்கிய கோட்டைசாமி..

"சார் இங்க பக்கத்துல எங்க பெட்ரோல் பங்க் இருக்கு?? " என்றான். திருடன் கை காட்டிய திசையில்...தன் புல்லட்டை உருட்டதொடங்கினான் கோட்டைசாமி. 


ன்னமும் வண்டி கிடைக்காமல் தார்சாலையை வெறித்துபார்த்தபடி நின்றிருந்தான் திருடன்.




ஆங் ஒரு சின்ன விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே.... திருடன் என்ற ஒரு விஷயத்தை தவிர நம்ம 'ஹீரோ' திருடனுக்கும் "திருடனின் மனைவி"யின் கணவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை! அதே சமயம் சிகப்பு சட்டை போட்டிருந்ததை தவிர கோட்டைசாமியின் பர்ஸை அடித்தவனுக்கும் நம்ம ஹீரோவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!