Pages

Wednesday 21 March 2012

தலையற்ற விதி



கி
ரகத்தை நெருங்க முயன்று தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் முயற்சித்துக்கொண்டிருந்தது
மற்றொரு கிரகம், நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சந்தித்தித்துக்கொள்ள நினைப்பதே பிரபஞ்சத்தின் 
மாபெரும் முட்டாள்தனம் தானே?! காற்றைத்துரத்தியபடி காற்றும், பறவையைத் தொடர்ந்தபடி
பறவையும், பூச்சியை துரத்தியபடி பூச்சியும், இரவையே விரட்டிக்கொண்டு பகலுமாக ,
மேலெலுந்தவாரியாக பார்க்கையில் ஏதுமற்றதாக காட்சியளிக்கக்கூடிய அந்த இரவு நேர வானம்
இப்படியான ஒழுங்குமுறைகளை லட்சக்கணக்கில் ரகசியமாக எனக்கு மட்டும் வெளிப்படுத்தியபடி
இருக்கிறதாகத் தோன்றுகிறதெனக்கு. வானத்தை வெறித்துபார்த்தபடி கண்டதையும் பிதற்றுவது
ஏதோ இப்போது தான் தொடங்கிய நாகரீகப்பழக்கமென தயவு செய்து யாரும்
நினைத்துக்கொண்டிருக்காதீர்கள்.வானத்தை வெறிப்பது தான் ஆதி, துவக்கம்,
நினைவிலடக்கவியலாமல் நீண்டுச்செல்லும் பிரபஞ்ச சூன்யவெளிப்புதிரின் முழுமுதற் விடை.
மனித விலங்குகளாகிய உங்களெல்லோரின் அறிவுப்புள்ளியின் துவக்கத்தின் ஒளிக்கீற்று.
வெயிலாய், மழையாய், காற்றாய், இடியாய், மின்னலாய், கிரகணமாய் ஒழுங்குமுறைகளின்
பிறப்பிடம்.



ன்னை முதன்முதலாய் மனிதனெனும் உணர்விலிருந்து விடுபடச்செய்தது ஒரு மனிதக்கூட்டமே
தான். அது ஒரு இழவு வீடு என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மரணம் என்பது எவ்வளவு
இயல்பானதும் ஒழுங்கானதுமென்பதை நான் எடுத்துரைக்கப்போய் தான் என்னை அடித்து உதைத்து
நான் மனிதனே இல்லை என என் வாயலேயே சொல்ல வைத்தார்கள். நெருங்கிய
சொந்தமில்லாவிட்டாலும்,செத்தவன் என் ரத்த சொந்தமென எனக்கு வேண்டப்பட்டவர்கள்
பேசிக்கொண்டார்கள், ஒன்று இங்கே இருக்கும் எல்லோரும் ஒருவருக்கொருவர் ரத்த
தொடர்புடையவர்களாகத்தானிருக்க முடியும்,இல்லையெனில் என்னை தயவு செய்து உங்களது
காட்டுமிராண்டி கூட்டத்தில் சேர்க்காதீர்கள் என்றேன்.அத்தோடு என்னை பார்க்க வருவதையும்
நிறுத்தி என்னை தனிமைப்படுத்த துவங்கினார்கள்.



ன்னை நானே சிறப்பானவனாக பாவித்துக்கொள்வது கொஞ்சம் தலைக்கனம் சார்ந்த
விஷயமென்பதை நானறிவேன், ஆனாலும் வேரு வழியில்லை, இங்கே நான் மனிதன் இல்லை
என்று வாதிட்டால் அப்போ நீ என்ன பெரிய இவனா?! என்கிறார்கள்.மனிதர்களின் சிறப்பே
இவ்வாறாக அவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்
என்பது தான். முன்பெல்லாம் மனிதர்கள் எனக்கு அவ்வளவு இடையூறாக
தோன்றமாட்டார்கள்.ஆனால் இப்போதோ நிலைமையே வேறு.நான் எங்கு போனாலும்
அதைகண்டுபிடித்து என்னை பின்தொடர்வது போலவே வருகிறார்கள் எப்போதும் எங்கேயும்
எதையாவது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்,அவர்களால் பேசாமல் ஒரு மணித்தியாலம் கூட
இருக்கமுடியாதோ தெரியவில்லை.அவர்களைக் கண்டால் சொல்லவோணாத ஆத்திரமேமேலிடுகிறது.ஆக்கிரமிப்பு எனும் பதத்தை கண்டுபிடித்தவன் மனிதன் தானே.
பூமிக்கோளத்தின் சிறு பகுதியையும் எஞ்சவிடாமல் அவனே ஆக்கிரமித்தும் தொலைத்திருக்கிறான். இந்த உலகத்துன்பங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு மரணம் என்று கொண்டீர்களானால் அதையும் நீங்களே தான் முழுமையாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறீர்கள்.


நான் பிறந்தபோது சமநிலை ஆன்மா,எந்த விந்தணுவிலிருந்து நான் பிறப்பெடுத்திருந்தாலுமே நான்
இன்றைய நானாகத்தான் உருவாகியிருப்பேன்.உலக சமுதாயத்தின் ஒடுக்குமுறைகள்
தான் என்னை இன்றைய நபராக வளர்த்தெடுத்திருக்கிறது,
'இல்லை உலகின் நாகரீகம் தான் என்னை வளர்த்தது,
இல்லை இல்லை ஆற்றாமை, இல்லை நான்…இல்லை நான்…இல்லைநான்…
இப்படி என்னை வளர்த்தெடுத்ததற்கு ஏகப்பட்ட நியதிகள் பொறுப்பேற்க
முன்வரும்போது நான் கொலையே செய்தாலும் என்னை தண்டிப்பது
நியாயமாக இருக்காது என்று தான் தோன்றுகிறது.


 கோடானுகொடி விந்தணுக்களும் தங்களூக்கே உரிய ஆன்மாவை உள்ளடக்கியது.
ஒருமனிதனின் ஓராயிரம் விரயங்களிலும்,துரிதஸ்கலிதங்களிலும்,ஆபாசக்கனவுகளிலும் தப்பித்து “நாம்” பிறப்பதென்னவோ அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை.ஒருவேளை ஆன்மா என்பதே புரட்டாக இருக்குமோ?! என்றவாறும் கூட சமயங்களில் நினைக்கிறேன். உங்களைப்போலல்லாமல் உயிரற்ற எண்ணங்களிடம் கூட பாரபட்சம் பாராட்டுவதில்லை நான். அனைத்து திசைகளிலும் அவற்றை சுழலவிட்டு இன்பம் காண்கிறேன்.


 தைக்கண்டுமே கலங்காத எனக்கு காலத்தைக் கண்டால் கலக்கமாக இருக்கிறது,
உலகின்கொடூரமான ஆயுதம் அணு ஆயுதம் என்கிறார்கள்,கொடுமையான விஷம்,
கொடுமையான தண்டனை,கொடுமையான சித்ரவதை,கொடூரமான கொலை,இப்படியாக நீளும்பட்டியலில் காலம் இடம்பெறாதது நிச்சயம் விசித்திரம்.காலம் தன்னுள்ளே ஒளித்துக்கொண்டிருக்கும் குரூரங்களும் கொடுமைகளும் அ-இரக்கங்களும் தான் எத்துனை.


காலம் என்பதே பொய்யான அளவீடென்று தோன்றுகிறது.,காலம் எனவொன்று உண்மையில்
இருக்கிறதா என்ன?உலகம் தோன்றிய பிறகு தான் காலமும் தோன்றியது என எந்த முட்டாள் மனிதனாவது வாதிடத்தயாரா? உலகத்தோற்றத்திற்கும் முன்னமும்,அழிவுக்கு
பிந்தியதுமான சூன்யவெளியில் காலம் என்ற அளவீட்டை எந்த கணக்கில் வைப்பீர்கள்?

        ருநாள் இரவு முழுவதும் இவ்வாறே வானத்தை வெறிப்பது எனக்கு மிகவும்
பிடித்தமான ஒரு விஷயம். ஒழுங்குமுறைகள் தான் நம்மை வழிநடத்துகின்றன,
ஒழுங்குமுறைகள்தான் நம்மை தோற்றுவித்தன, ஒழுங்குமுறைகள் தான் உயிரை உருவாக்கின
என்றெல்லாம் பலவாறாக கண்ணில்படுபவர்களிடமெல்லாம்சொல்லித்தான் வருகிறேன்.நான் மனநிலை பாதித்தவன் எனும் ரீதியில் தான்
இதையும் மனித இனம் அணுகித் தொலைக்கிறது. ஆனால் கேவலமாக மனிதன் என்ற பெயரால்
அழைக்கப்படுவதை விட இதை நான் மிகவும் விரும்பிகிறேன்.

 டப்பாவிகளே மனநல காப்பகத்தில் கூட என்னை தனியாக விடமாட்டீர்களா நீங்கள்?
இங்கேயும் சாரைசாரையாக வந்து என் தனிமையை கெடுக்கிறீர்களே..செத்து ஒழியுங்கள்… 
மாம் நான் தான் கொலை செய்தேன் ஆனால் கொலை செய்தது நானல்ல ஐயா
சந்தேகமெனில் என் நாட்குறிப்பைத் தான் கேளுங்களேன்.


 காலத்தை ஒழுங்குமுறை குலைத்தால் என்ன நடக்குமென்பது தான் மனிதன்
எனும் உணர்விலிருந்து என்னை விடுவித்தது.இப்போது அது மீண்டுமொருமுறை நடக்கத்தான் போகிறது.என்கழுத்தை சுற்றி இறுக்கப்பட்ட அந்த கயிறு அதன் இறுக்கத்தை கூட்டும்போது
இன்பமாக இருக்கிறது.உடலிலிருந்து வெளிப்பட்டு காலத்தை கவனிக்கிறேன்,வருடுகிறேன், கொஞ்சி மகிழ்கிறேன்.

நான் உடலாக,பருப்பொருளாக இருந்த போது இதே போல காலம் எனக்கு கைவந்திருந்தால்
என்செயல்களுக்கு அவசியமே இருந்திருக்காது.இப்போதும் தாமதமில்லை. இந்த பிரபஞ்சத்தை காப்பாற்ற என்னை விட்டால் வேறு யார்!? மனிதர்களாகிய உங்களை ஒழித்தாலே தப்பித்தது அது. ஒழுங்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தின் ஒழுங்கை ஒரேயொரு புள்ளியில் குலைத்தேன்.
அடுத்தகணம் பிரபஞ்சத்தை விழுங்கத்தொடங்கியிருந்தது காலம். பிரபஞ்சம் தன்னை தானே எளிதாக புதுப்பித்துக்கொள்ளும்,ஆனால் உன்னால் அது ஒருபோதும் முடியாது மனிதனே.
அதற்கு நீ கோடிக்கணக்கான வருடங்கள் சூன்யவெளியோடு சூன்யமாக கலந்து காத்துக்கிடக்கவேண்டும், நியாயவிலைக்கடையில் பொருள் வாங்கிவிடுவது போல எளிதானதல்ல அது. ஒரு வேளை இனியொரு முறை அந்த பிரபஞ்ச நோய் ஏற்படாமலும் போகலாம்.


னால் ஒன்று,பிரபஞ்ச அழிவையும் பாழாய்ப்போன விஞ்ஞானத்தால் வென்றுவிட முடியுமென
யோசித்துக்கொண்டிருக்கும் சவலைகளுக்காக சொல்கிறேன் வலி என்பதே துளியுமற்ற
சாவு தூக்கில் தொங்குவது தான் மனித இனமே ஒருவேளை பிரபஞ்ச அழிவை நீங்கள் தடுத்துவிட்டாலும் தயவு செய்து தூக்கில் தொங்கி செத்துப்போய் இங்கேயும் வந்து என் தனிமையைக்கெடுக்காதீர்கள்.