Pages

Thursday 5 September 2013

சொர்க்க வழிப்பாதை





   ஏதோ ஒரு திடப்பொருள் என் ஓட்டத்திற்கு திடீர் தடைபோட்டது. எம்பி போய் குப்புற விழுந்தேன்.காயம் படவில்லை. சிறு சிராய்ப்பு கூட இல்லை.  மீண்டும் மந்திரக்குள்ளனின் குரல்,

     "இப்போது கூட பாதகமில்லை இப்படியே ஓடிவிடு நான் உனக்கு சிறப்பு அனுமதி வாங்கி தருகிறேன் பிரதான கதவை திறக்க"

    "போடா குள்ளா"

    "இதற்காகவே உனக்கு அது கிடைக்க கூடாதென சபிக்கிறேன்"

   "அதெல்லாம் எனக்கு தெரியும் இங்கேயிருந்து இந்த தங்கநிற சாலையில் போகணுமா, இல்லை தார் சாலையில் போகணுமா அதை மட்டும் சொல்லு"

    "பூலோக தற்குறியே தார் என்றால் என்ன? அது கருநிற வைரத் துகள்களால் பதியப்பட்ட சாலை,உன் உடலை நீ திரும்ப அடைவதற்கான நேரம் இன்னும் அரை   மணி தான்...அதன் பிறகு நீயே விரும்பினாலும் உன் உடலுக்கு உன்னால் திரும்ப முடியாது"

   "எல்லாம் எனக்கு தெரியும் என் தாத்தாவின் உயிரில்லாமல் நான் திரும்பி பொகப்போவதில்லை"

   "அதைத்தான் நானும் சொல்கிறேன் நீ திரும்பப் போவதில்லை!"

    "வாயை மூடு எனக்கு தெரியும்"

    "அது உன் விதி இப்படி சவால் விட்டதனாலேயே பல பேர் இங்கேயே நிரந்தரமாக தங்கியிருக்க நேர்ந்திருக்கிறது."

   "இரண்டு சாலைகளில் ஒன்று தான் சரியானது.எது சரியான சாலை என்பது எனக்கும் கூட தெரியாது. என்னாலும் இங்கிருந்து மறைந்து ராஜாவின் அரண்மனைக்கு முன் தோன்ற முடியுமே தவிர சாலைகளை உபயோகிக்க இயலாது, இதையும் மீறி தவறான சாலைகளில் செல்பவர்கள் திரும்பி வர இயலாத ஏற்பாடுகளை எங்களது மகாராஜா ஏற்படுத்தி வைத்திருக்கிறார். பல ஆன்மாக்கள் சொர்க்கம் செல்லும் பேரவாவில் இந்த சாலைகளில் காணாமல் போன சம்பவங்கள் பூலோகவாசியான உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கிளம்பிவிட்டேன்!  அங்கு மேலும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை...தங்க நிற சாலை, வைரத்தால் பதியப்பட்ட சாலை ஏதோ ஒன்றில் தான் என் தாத்தாவின் உயிரை    மேலோக எடுபிடிகள் கொண்டுபோயிருக்க வேண்டும்.

    என்னை அலைக்கழிக்கும் நோக்கில் ஆரம்பத்திலிருந்தே இந்த எடுபிடிகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நானும் என் தாத்தாவும் தண்ணி லாரியில் இடிபட்டு விழுந்ததிலிருந்தே அப்படித்தான். இடிபட்டு விழுந்த ஐந்தாவது நிமிடத்தில் சுயநினைவு வர கண்விழித்த போது என் தாத்தா மிதந்து கொண்டிருந்தார் கூடவே மூன்று எடுபிடிகள் அவரை இழுத்துப்பிடித்திருந்தார்கள். மெதுவாக அவர்கள் மேலே மிதந்து செல்ல ஆரம்பிக்க, உடலை அசைக்க முடியாமல் நான் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

  ஆனால் அவரை காப்பாற்றியாக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது.  நான் அவரை காப்பாற்றியாக வேண்டும்.  நான் அவரை காப்பாற்றியாக வேண்டும்  நான் அவரை காப்பாற்றியே ஆக வேண்டும்  மூன்று நிமிடங்களுக்கு
இதையே தான் தீவிரமாக எனக்குள் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறேன் போல.இது  ஒருவகை செல்ஃப் ஹிப்னாடிஸம். ஏற்கனவே அடிபட்டு குற்றுயிராக கிடந்த எனக்கு செல்ஃப் ஹிப்னாடைஸ் செய்து ஆன்மாவை பிரியச்செய்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. கொஞ்ச நேரத்தில் என் ஆன்மா உடலிலிருந்து விடுபட்டு என் உடலை பார்த்து சிரித்தது.

  இப்போது என்னாலும் பறக்க முடிந்தது. எடுபிடிகள் போன பாதையின் சுவடுகளில் மிதந்து தொடர்ந்தேன்.

  முன்னூறு நிமிஷ பறத்தலில் தென்பட்டது ஒரு நகரம், கரு மேகங்கள் மண்டி, மின்னல் வெட்டி, தொடர்ந்து மழை பெய்துக்கொண்டிருந்தது. மிகப்பெரிய கதவு ஒன்று வழக்கம் போல மூடியே இருந்தது. செவ்வாய் கிரகத்தை எல்லாம் எந்திரங்களை இறக்கி பல்வேறு ஆங்கிள்களில் படப்பிடிக்க முடிந்த நம் கண்ணுக்கு இத்த்னை வருடங்கள் இந்த வெண்வெளி நகரம் தட்டுப்படாமல் போனது ஆச்சரியம் தான். கதவை நெருங்குகையில் எங்கோ மறைவிலிருந்து திடீரென தோன்றினான்  குள்ளமான உருவம் கொண்ட மனிதன். விசித்திரமாக இருந்தான். கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பூலோக சாமியார்களை தலையில் அடித்து ஐந்தடி உள்ளே பூமிக்குள் இறக்கினது போல உருவம்.

   ஏதோ ஒரு தடிமனான புத்தகத்தை புரட்டியபடி,

    "உன் வரிசை எண் சொல்லு"

   "................."

     "இறந்த தேதி? "

   "........."

   "அட யாரப்பா நீ? ஊமையா?"

   "இல்லையே!"

 " அப்புறமென்ன? எமலோக தூதர்கள் உனக்கு வரிசை எண்ணை சொல்லவில்லையா?"

   "அப்படின்னா என்ன?"

   "அடே நீ எங்கிருக்கிறாய் என்றாவது தெரியுமா? உன்னை யார் இங்கே கூட்டி வந்தது? நீ தனியாக வந்த போதே எனக்கு சந்தேகம்!"

   "தெரியவில்லை ஆனால் என் தாத்தாவின் உயிரை எடுபிடிகள் கொண்டுபோயிருக்கும் இடத்திலிருக்கிறேன் என்பது மட்டும் சத்தியம்"

  "உஷ்ஷ்ஷ் சத்தம் போட்டு சொல்லாதே அவர்கள் எடுபிடிகளல்லர்,எமனின் பிரத்யேக தூதுவர்கள், உன் பெயரென்ன? நட்சத்திரமென்ன அதையாவது சொல்லு? "

  "வாழவந்தான்,ஸ்விட் டட்டில்னு சொல்ற வால் நட்சத்திரம் தான் என் ஃபேவரிட்"

   உன் குசும்புக்கு இத்தனை நாள் உன்னை எப்படி விட்டு வைத்தார்கள் எம் தூதுவர்கள்?!

  "பெயர் மட்டும் போதாது உன்னை அடையாளம் காண, இந்த தகட்டில் உன் உள்ளங்கையை பதியசெய்",

  பதித்தேன்

  "அடேய் உனக்கு இன்னும் 60 வருடங்கள் வாழ்க்கை இருக்கிறதடா அதற்குள் எப்படி உன்னால் இங்கு வர முடியும்?!

  "எப்படியோ வந்தேன்..கதவை திறந்து விடு ,எனக்கு என் தாத்தாவின் உயிர் வேண்டும்"

  அதிர்ந்து வியர்த்து என்னை முறைத்தான் குள்ளன்.

  "இங்கிருந்து ஓடிவிடு இல்லாவிட்டால் உன் தாத்தாவோடு சேர்த்து உன்னையும் அடைக்க வேண்டியிருக்கும்'

  "அடைக்கப்போகிறீர்களா??!

  தவ்வி மதில்சுவர் மேல் மீண்டும் ஏறிக்கொண்டான்

 கதவருகில் நெருங்கினேன்.திறந்து தானிருந்தது. குள்ளன் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான். நான் உடலைகுறுக்கி உள்ளே நுழைத்து கணநேரத்தில் மறுபுறம் வந்துவிட்டேன். நீண்டதொரு சாலை. பத்துநிமிடம் உற்றுபார்த்தால் தான் தெரியும் தூரத்தில் ஏதேதோ அரண்மனை சாயலில் கட்டிடங்கள்.தாமதிப்பது நிச்சயம் ஆபத்து. ஏதோ அடைத்துவிடுவார்களென்று வேறு சொன்னான் குள்ளன்.கள்ளசாவி கூட கொண்டுவரவில்லை!

 கல் தடுக்கி விழுந்து எழுந்து குள்ளனின் ஏளனங்களுக்கு ஆளாகி இப்போது தங்க சாலையா கரு நிற சாலையா என்பதே பிரதான பிரச்சினை.

  அரை மணியில் பாதி தான் இப்போது மிச்சமிருந்தது.

 எந்த சாலையையும் எடுக்காமல், அருகில் வந்து இருசாலைகள் பிரியும் இடத்தை கவனித்தேன். பிரியுமிடத்தில் சாலை கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. காலால் லேசாக மிதித்தேன். அந்த லேயர் உடைந்து உள்ளுக்குள் சரிந்தது.

 பாதாள சுரங்கம்! அடாது பெய்த மழையால் தங்கதுகள்களும், கருநிற வைரமும் தண்ணீரில் கலந்து மிதந்து கொண்டிருந்தன. அலேக்காக உள்ளே இறங்கினேன். கும்மிருள். கண்ணை மூடிக்கொண்டு ஓடுவது தான் உசிதம். இன்னும் 11 நிமிடங்கள் தான்!

  சளக்.. சளக்கென தண்ணீர் என் கால்களில் பட்டு  தெறித்துக்கொண்டிருக்க, ஏழு நிமிட கெடு மீதமிருந்த நிலையில் சுரங்கம் முடிவுக்கு வந்தது. பெருமூச்சு விட்டேன்

 மீண்டுமொரு ராட்சத கதவு. குள்ளன் சிரித்துக்கொண்டிருந்தான்.எரிச்சலாக வந்தது எனக்கு

 "தயவு செய்து என்னை உள்ளே விடு, என் தாத்தாவுக்கு இன்னிக்கு ரிட்டையர்மெண்ட்,அவரை கூட்டிப்போய் ரிட்டையர்மெண்ட் பணத்தை வாங்கிக்கிறேன்..அதுக்கு பிறகு உன் எடுபிடிகளை அனுப்பி வை தாத்தாவை நானே பிடிச்சு குடுக்கிறேன் நாளைக்கு"

 "புரியவில்லை!, இறந்தவரை பூலோகத்துக்கு திருப்பி அனுப்பும் அதிகாரம் எனக்கில்லை..அனுப்பவும் முடியாது. இறந்தது இறந்தது தான். உன்னால் அவரை கூட்டிப்போக முடியாது"

 "ஐந்து நிமிடங்கள் தானிருக்கிறதடா குள்ளா"

 முறைத்தான். கதவருகில் போய் நின்று என்னவோ முணுமுணுத்தான் கதவு நீங்கிக்கொண்டது.

 மிக அழகாக நிர்மாணிக்கப்பட்ட நகரம்.மேலோகத்தில் எப்படி சிமெண்டும், ராணா டார் முறுக்குக்கம்பியும் கிடைக்கிறதென்று கேட்டால் குள்ளன் சபித்து தொலைப்பான்! எதுக்கு வம்பு.

 நான்கு நிமிடங்கள்.

ஏதோ நர்சரி ஸ்கூலுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.ஓவென அழுகுரலும், சிரிப்பொலியும், காச் மூச்சென கூச்சலும், அதோ அங்கே இரு நீண்ட நெடிய கட்டிடம் தெரிகிறது என் தாத்தாவை இழுத்து வந்த தடியன்களையொத்த எடுபிடிகள் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தான்கள்.

 நைசாக நெருங்கினேன். என்னை வெடுக்கென முறைத்தவர்கள் அப்புறம் சுதாரித்து சிரித்துக்கொண்டான்கள். கட்டிடத்தில் நுழைந்தால் லட்சக்கணக்கான அலமாரிகளில் ஒரு சின்ன கையடக்க கண்ணாடி குமிழுக்குள் இறந்தவர்களின் ஆத்மாக்கள் அடைக்கப்பட்டிருந்தன. குமிழ்கள் ஒளிர்ந்து அறை வெளிச்சத்தால் நிரம்பிக்கொண்டிருந்தது.

 மூன்று நிமிடங்கள்.......

 இந்த லட்சக்கணக்கான குமிழ்களில் என் தாத்தாவை கண்டுபிடிக்க வேண்டுமே.! செய்வதறியாது திகைத்த என் கண்ணில் "குற்றவகை" என கொட்டை எழுத்தில் எழுதப்பட்ட கதவு தெரிந்தது. கண்டிபிடித்துவிடலாம். உள்ளே போனால் கற்பழிப்பு,கொலை,கொள்ளை,ஊழல்,சுரண்டல்,வன்மம்,மது,மாது,சூது........

இரண்டு நிமிடங்கள்....

 அய்யய்யோ குற்றங்களின் வகைகளை படித்து முடிக்க முயற்சித்தாலே நான்கு நாட்கள் ஆகும் போலிருக்கிறது.இந்த லட்சணத்தில் நான் என உடலுக்கு திரும்பவே முடியாது. என் தாத்தா என்ன குற்றம் செய்திருப்பார்? யொசித்தேன். ஆங் எப்போது பார்த்தாலும்  சிகரெட் ஊதித் தள்ளி பக்கத்திலிருப்பவர்களை சித்ரவதை செய்வாரே! வேகமாக ஓடி புகையிலை பிரிவை அடைந்தேன். அதில் எங்கேயுமே அவர் இல்லை! கிட்டதட்ட  நம்பிக்கையிழந்தேன். அறையை வெறுப்பாக நோட்டமிட தொடங்கினேன். ஒரு மூலையில் ஒரே ஒரு குமிழ் மட்டும் தனியே வைக்கப்பட்டிருந்தது "எப்போதும் மூக்குப்பொடி  உபயோகித்து தும்மி தும்மியே தொல்லை கொடுத்தவன்" என்னும் தலைப்போடு .

ஆஹா...கண்டுபிடித்தாயிற்று! குமிழை லாவகமாக கையிலெடுத்துக்கொண்டு ஓடத்துவங்கினேன்...

ஒரு நிமிடம் பாக்கியிருந்தது.

முதல் பிரதானகதவு............ இரண்டாவது கதவு........அதை தாண்டிவிட்டால் அங்கிருந்து மறைந்து பூலோகத்தில் தோன்றும் சக்தியை பிரயோகிக்கலாம்! ஆத்மாவாக இருத்தலில் உள்ள வசதி இது!

  ஓடிய வேகத்தில் தரையை கவனிக்கவில்லை! திடப்பொருள் மீண்டும் தடுக்கி தாவிப்போய் விழுந்தேன். கையிலிருந்த குமிழ் எட்டடி உருண்டுபோய் உடைந்து நீர்த்துப்போனது! அய்யோ! போச்சு .! எல்லாமே போச்சு ! இன்னும் முப்பதே வினாடிகள் தான்!

 எழுந்திரிக்க முடியவில்லை! குள்ளன் தோன்றினான்..சிரித்தான்.

 'நான் அப்பொழுதே சொன்னேன் உன்னால் முடியாதென்று! இப்போது உன் தாத்தா ஆத்மாவாக கூட இல்லை! பெருமைப்பட்டுக்கொண்டான்

   ".............."    கெட்ட வார்த்தையே தான்.

 குள்ளன் நெருங்கினான். ஓங்கி ஒரு உதை கொடுத்தான். "பிழைத்துப்போ!

 சிதையில் சில வினாடிகளுக்கு முன்னம் தீ மூட்டப்பட்டிருந்த என் உடலின் மீது விழுந்தேன்! சுயநினைவு வந்து சூடு உறைக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. பதறிப்போய் சிதையிலிருந்து உதறி எழுந்தேன்!

 "பாரேன் இப்போதான் தீ வெச்சோம் அதுக்குள்ளாற பொணம் வெறைக்குது!"என்றான் ஒருவன்

 தொடர்ந்து,   நடுமண்டையில் நச் நச்சென்று நாலு உருட்டுகட்டைகள் பதம் பார்த்தன!

 குள்ளனை மீண்டும் பார்க்கபோகிறேன்.





  

Monday 2 September 2013

ஊடல் தோற்கும் புள்ளி.






   அந்தி கவியும் அந்திமமொன்றில் தான் ஆரம்பித்தன என் தோல்விகள்

   புணராமல் புணர்தலென்னும் விதியை  பந்தயப் பொருளாய் காட்டினாய்

   கனவுலகில் உனை நெருங்க எத்தனித்து ஜெயித்துக்கொண்டது என் முதலாம் தோல்வி,
 
   கண்களால் நான் தொடுக்க முயன்ற சைகைகளை சட்டையே செய்யவில்லை உன் வெற்றி

   வார்த்தைகளால் புணர முயன்ற நவீன முயற்சியும்
     
    உன் முன் மண்டியிட்டு மன்றாடி கதற நேர்ந்தது..
       
    வெற்றிகளெனும் உன் காதல் பாதரசத்தை என் முயற்சிகளெனும்
   
   காற்று  நீர்க்கச்செய்வது எங்கணம்!