Pages

Wednesday 19 June 2013

நேனோ கார்பன் இழைகள்




நாம் எல்லோரும் சமீபமாக “மறைநீர்” என்ற விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். நாம் அன்றாடம் நுகரும் ஒவ்வொரு பொருளின் உற்பத்திக்கு பின்னாலும் பயன்படும் நீரின் அளவை கணக்கிடும் சித்தாந்தம் இது. இதைக் கண்டறிந்தவர் லண்டனைச் சேர்ந்த டோனி ஆலன்.உதாரணமாக நாமக்கல்லில் பெருமளவு உற்பத்தியாகும் முட்டையை எடுத்துக்கொண்டோமானால் ஒரு முட்டையின் மறைநீர் அளவு 200 லிட்டர். மூன்று ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 200 லிட்டர் நீர் தேவைப்படுகிறது என்பது ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம் தான்.

போலவே தற்போது இந்தியாவின் நீர்வளத்தை கிட்டத்தட்ட இல்லாமல் செய்துகொண்டிருக்கும்,  இரும்பு உருக்கு மற்றும் தானியங்கி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் நீர் பயன்பாடு மிக அபரிதமாக இருப்பது வருந்தற்தகுந்த விஷயம்.சமீபத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இரும்பு உற்பத்தியில் 80 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கின்றன. இந்த முதலீடுகளால் இந்தியா இரும்பு உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாக மாறும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லாவிட்டாலும்,இந்த இரும்பு தொழிற்சாலைகளின் நீர் பயன்பாடு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய எஃகு கொள்கை 2012ன் படி 2016-2017ம் ஆண்டுகளின் இந்திய எஃகு தோழிற்சாலைகளின் நீர் பயன்பாடு 350 மில்லியன் கனஅடி அளவுக்கும், 2025-2026ம் ஆண்டுவாக்கில் அது 650 மில்லியன் கனஅடியாகவும் உயரும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே உலக மக்கள் தொகைக்கு 18% பங்களிப்பை சீரும் சிறப்புமாக வழங்கிக்கொண்டிருக்கும் இந்தியா இந்த மறைநீர் அச்சுறுத்தலை எப்படி சமாளிக்கப்போகிறது என்பது கேள்விக்குறி.

இவ்வளவு மொக்கை எதற்கென்று கேட்கிறீர்களா?

விஷயமிருக்கிறது. நாமெல்லோரும் நேனோ தொழில்நுட்பத்தைப் பற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்டிருப்போம்.சாதாரண மூலக்கூறைப்போல் அல்லாமல் மிக நுட்பமாக கட்டமைக்கப்படும் நேனோ மீட்டர் அலகால் அளவிடப்படும் மூலக்கூறுகளாலானது இந்த நேனோ உலகம்.


இந்த தொழில்நுட்பத்தின் படி உருவான கார்பன் Nano Tubeகள் தான் எஃகு நிறுவனங்களின் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கப்போகின்றன. கார்பன் துகள்களை 1200டிகிரி வெப்பஉலையில் வைத்து கோபால்ட் நிக்கல் வினையூக்கி முன்னிலையில் இது தயாரிக்கப்படுகிறது என்பதெல்லாம் இந்த கட்டுரைக்கு அவசியமில்லாதது. வெப்பம் கடத்தும் திறன் என்று ஒரு விஷயமிருக்கிறது.அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு 0.635 W/mK. அதுவே நேனோ கார்பன் இழை சேர்க்கப்பட்ட தண்ணீரின் வெப்பம் கடத்தும் திறன் 0.78 W/mK. கிட்டதட்ட 30% அதிகம்!. தண்ணீரானது இரும்பு உருக்காலையில் மோல்ட் செய்யப்பட்ட எஃகு தகடுகளை குளிர்விக்கப்பயன்படுகிறது. 

800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதித்துக்கொண்டிருக்கும் இந்த தகடுகளை குளிர்விக்க சாதாரண நீரானால் பெருமளவு தேவைப்படும். அதுவே நேனோ கார்பன் இழைகள் அந்த நீரில் சேர்க்கப்பட்டால் வெப்பம் கடத்தும் திறன் கணிசமாக அதிகரிப்பதோடு மிகக்குறைந்த அளவு நீரைக்கொண்டு இந்த தகடுகளைக் குளிர்விக்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிட்டதட்ட ஒவ்வொரு டன் எஃக்குக்கும் 12800 லிட்டர் அளவுக்கு நீரை சேமிக்க முடியும்.இது மட்டுமின்றி வெப்ப மாற்று உபகரணங்கள் பயன்படும் இடங்களிலெல்லாம் இந்த கார்பன் இழை தொழில்நுட்பம் வரும்காலங்களில் பெரிதும் பயன்படப்போகிறது.

ஏன் இன்னும் சில வருடங்களில் நம் இட்லி குக்கர், பால் குக்கர்களில் கூட இந்த நீரை உபயோகிக்கும் நிலை வரலாம்.

தொழிற்சாலைகளின் பெருக்கம் தவிர்க்க முடியாததாகி வரும் இந்நாட்களில் சுற்றுசூழலை பாதுகாப்பது பெரும் சவாலாகி இருக்கிறது.. அந்த வகையில் இந்த ஆராய்ச்சியில் முதல் ஆளாக களமிறங்கியிருக்கும் டாடா ஸ்டீலின் முயற்சியை வரவேற்போம்.

நன்றி:The Hindu.