Pages

Tuesday 4 October 2011

கடவுளாகும் சூட்சுமம்



   ன்னை நம்பக்கூடிய அளவு அறிவுள்ள ஜீவராசி பூமியிலேயே இல்லையோ என ஒருகணம் நினைக்க தோன்றியது.பிறகென்ன?  வெறுப்பாக இருக்கிறது! நான் கடைசியாக இந்த விஷயத்தை சொன்னது என் கண்ணில்பட்ட பதினெட்டாவது மனிதனிடம்! வழக்கம் போல அவனும் இதை சட்டை செய்யாமல் வராத எச்சிலை சிரமப்பட்டு ஒன்றுதிரட்டி அவனுக்கு பக்கவாட்டில் எனக்கு எதிர்திசையில் துப்பிவிட்டு ஏதும் பேசாமல் கடந்து போயிருந்தான்! அவனது எச்சில் விரவிய காற்றுபட்ட அந்த சிலவினாடிகள் மட்டும் அவமானம் வெகுண்டு நான் பார்த்தது பொய்யோ என மீண்டும் ஒருமுறை நினைக்க தொன்றியது...ச்சே வாய்ப்பே இல்லை...நிச்சயம் நானே என் கண்ணால் பார்த்த அதிசயம் அது..இருப்பினும்  நேரடியாக பார்த்த நானே இன்னும் முழுமையாக நம்பாத ஒரு விஷயத்தை சொன்ன மாத்திரத்திலேயே 18 பேர் நம்பிவிட வேண்டுமென எதிர்பார்த்தது என் முட்டாள்தனம் தான்..மீண்டும் ஒரு முறை காட்சிகளை மனதில் சம்பவிக்க விட்டு பார்த்தேன்.. வாய்ப்பே இல்லை....அவர் நிச்சயம் கடவுளே தான்..



யாருக்கும் வாய்த்திராத ஒரு அதிசயம் எனக்கு நடந்தது..! அமைதியாக அதே சமயம் அவசர அவசரமாக வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த என்னை வழிமறித்தது அந்த உருவம். கரும் நிறத்தில் சுமார் நாலரை அடி உயரத்தில் அசாதாரணமான தாடி மீசையுடன்...முதலில் ரொம்பவும் பயந்து தடுமாறிவிட்டேன். நகரமுடியாமலும், நம்ப முடியாமலும் நின்றிருந்த என் மன தடுமாற்றத்தை அவ்வுருவம் அறிந்திருக்க வேண்டும்...ஆனாலும் அவர் வாயை திறக்க முற்படவில்லை..சாந்தமான பார்வையுடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தார். பயம் விலகி..லேசாக ஒளிரும் அவரது சருமத்தை ஆச்சரியமாக பார்த்தபடி இருந்தேன். திடீரென என்ன நினைத்தாரோ தெரியாது. சிலபல ஜாலங்களை என் முன் நடத்திக்காட்டினார். ஊமை இருள் படரத்துவங்கிய அந்த நீண்ட நெடும் சாலையின் மங்கலான நிலவொளியில் அவரால் ஆல்ப்ஸ் மலைத்தொடரை கண்முன் வரவழைத்து காட்ட முடிந்தது,ஆப்பிரிக்க ஆதி இனம்,பிரபஞ்ச இயக்கம், விண்மீனின் அழிவு என பலவும் என் கண் முன்னால்... சிறு வயதில் கைகளால் இயக்கப்படும் புரஜெக்டரில் தான் இப்படியான ஒளிசார்ந்த அதிசயங்களை பார்த்திருக்கிறேன். இவர் அதனினும் அதிசயமாக வெறும் கைகளிலிருந்தே ஒளியை விரியச்செய்து  திரேதாயுகத்தின் பன்னிரெண்டு லட்சத்து சொச்சம் வருடங்களையும்,துவாபர யுகத்தின் நான்கு லட்சத்து வருடங்களையும் திரித்து நீட்டி ஏதோ வெள்ளி நிற நூலிழையாக திரட்டி காட்டினார்.  எனக்கு அதை தொட்டு பார்க்க வேண்டும் போலிருந்தது...அவர் மறுப்பேதும் சொல்லவில்லை,  இருந்தாலும் கூட  அவரது அமைதி தழுவும் புன்னகையை மீறி என்னால் எதையுமே செய்யமுடியவில்லை...அவர் எனக்கு சொல்ல நினைப்பதை எல்லாம் அவரது கண்கள் மூலமாகவே என் மனதில் பதிய செய்வதை போலிருந்தது.ஒருவித பரவச உணர்வு என்னை ஆட்கொண்டது போலொரு அயர்ச்சி...எல்லாவற்றையும் தாண்டி அவரிடம் கேட்க என்னிடம் நான்கு கேள்விகள் இருந்தன....ஆனால் அவரை போல கண்களால் செய்திகள் சொல்லும் வித்தை எனக்கு தெரிந்திருக்கவில்லை...வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை!! குறைந்தபட்சம் "மீண்டும் உங்களை எப்போது பார்க்கலாம்?" என்ற நான்காவது கேள்வியையாவது கேட்டு தொலைத்திருக்கலாம்....அன்றிரவு மட்டும் 38 முறை அதை நான் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்ததாக அம்மா அடுத்தநாள் காலையில் சொல்லி சிரித்தாள். இதை ஏன் நான் ஒரே ஒரு முறை அவரிடம் செய்யவில்லை?? என்பது இப்போது எனது ஐந்தாவது கேள்வியாகிவிட்டிருந்தது.
அசாதாரணமாக விடிந்த அந்த காலை வேளையில் அம்மாவிடம் கூட இதை சொல்ல தோன்றவில்லை.விழுந்து விழுந்து சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த அவளை பார்க்க எனக்கு பாவமாகவும், சிரிப்பாகவும் இருந்தது.  




நாட்கள் நகர்ந்தாலும்..தினம் தினம் அந்த நிகழ்வு எனக்கு முந்தைய நாள் மாலை தான் நடந்தாற்போல ஒரு உணர்ச்சி.. என் வழக்கமான அலுவல்களை தாண்டி அவரை மீண்டும் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு தொக்கி தவிக்க செய்தது.  
அவரை நான் மிகத் தீவிரமாக தேடத்தொடங்கிய இந்த நான்கு மாதங்களில்  விசித்திரமான சில சம்பவங்கள் நடந்தேறின,

சம்பவம்:1
  அவரை நான் முதன்முதலில் சந்தித்த சாலை சந்திப்பில் தார் சாலை அகற்றப்பட்டு, ஒரு கடவுளின் பிரகாரத்தோடு, ஒரு சிறு கோவிலும்,அதை சுற்றி பூத்து குலுங்கும் செடி கொடிகளும் உருவாக்கப்பட்டன.எப்போதுமே ஓய்வில்லாமல் இயங்கும் அந்த சாலை சந்திப்பை திடீரென வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன?  என என் நண்பனிடம் கேட்டு வைத்தேன்,பதிலில்லை.
சம்பவம்:2
  அவர் காட்டிய வெள்ளி இழையை பார்த்ததிலிருந்து இரவு நேர வானங்கள் ஒருவித அகோர சப்தங்களை என்னுள் மட்டும் பிரத்யேகமாக எழுப்புவதை போலவும், ஏதேதோ சாஸ்திரங்கள் என் காதில் ஓதப்படுவது போலவுமிருந்தது. இவற்றை மொட்டைமாடியில் படுத்துறங்குவதை நான் நிறுத்தியிருந்தாலே தவிர்த்திருக்கலாம் என்றாலும்..மேற்புறம் மூடப்பட்ட அறைகளில் உறங்க முனையும் வேளைகளில் என் சாவு நேர சம்பவங்கள் ஒன்று கூடி என் காதுக்குள் சம்பாஷிப்பது  போன்ற உணர்வுகள் தோன்ற ஆரம்பித்தன. மொட்டை மாடி உறக்கங்களை என்னால் அவ்வளவு எளிதில் உதறிவிட முடியவில்லை.
சம்பவம்:3
  என்னை சுற்றி வெண்மையான இறக்கைகள் கொண்ட விநோத மனிதர்களும், உடலெல்லாம் கருமை பூண்ட கொடூர மனிதர்களும் நடமாட ஆரம்பித்தார்கள். அவர்கள் என் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறார்கள் என உணரும் பொழுதுகளில் ஒருவித பயம் என்னை கவ்வ துவங்கியிருந்தது. வெள்ளை மனிதர்களும், கருமை மனிதர்களும் தாவி, பறந்து போர் புரிந்து கொண்டார்கள்.
சம்பவம்:4
  நான் கடவுளை சந்தித்த அதே தேதியிட்ட தபால் ஒன்றை தபால்காரர் என் வீட்டில் கொடுத்துவிட்டு போயிருந்தார்.ஒரு குறிப்பிட்ட முகவரியிட்ட அந்த தபாலில்   நான் அவரிடம் கேட்கவிருந்த கேள்விகளை அவர் அறிந்திருந்ததாகவும், கலியுகத்தில் கடவுளர்களுக்கு பேசும் திறன் இல்லையெனவும், சித்திரை பௌர்ணமியொன்றில் மக்கள் குறைகளை அவர் தீர்க்கவிருப்பதாகவும், அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், நுழைவுக்கட்டணத்தை வசூலிக்கவும் என்னை தேர்ந்தெடுத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.கலியுகத்தில் கடவுளர்களால் பேச முடியாதென்றால் என்னால் ஏன் 'அந்த' நாளில் பேச முடியாமலிருந்ததென்ற என் ஆறாவது கேள்விக்கும் கூட அந்த கடிதத்தில் பதிலில்லை.
                       


ன் பிறவிப்பயனை அடைந்துவிட்டதை போல ஒரு உணர்வு ஆட்கொள்ள....என் வயிற்று பிழைப்பு எனக்கு துச்சமாக பட்டது..அப்போது எனக்கிருந்த ஒரே கவலை மக்களை நம்பச் செய்து ஒன்று திரட்டுவது.சந்தேகத்துடன் தான் பிரச்சாரத்தை ஆரம்பித்தேன். மக்களை நம்ப வைப்பது நான் எதிர்பார்த்த அளவுக்கு சிரமமாக இருக்கவில்லை.....நானே எளிதில் நம்பிவிடாத தன்மை கொண்ட என் பேச்சை முதல்முறை கேட்கும்போதே அதிசயம்போல் நம்பினார்கள்.. நுழைவுகட்டணத்தை செலுத்தி அவரவர் பெயர்களை பதிந்து கொள்ளவும் செய்தார்கள்,ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் மக்களே பிரச்சாரத்திலிறங்கிய அதிசயமும் நடந்தது.  மூன்றே வாரங்களில் என்னிடம் சேர்ந்த சில லட்சம் கோடிகளை என்னால் பாதுகாக்க முடியவில்லை ...மேலும், இவ்வளவு நபர்களை எப்படி கடவுளால் ஒரே நாளில் சந்தித்துவிட முடியும் என்ற சந்தேகமும் என்னை குடைந்தெடுத்தது,கடவுளிடமே கேட்டுவிட்டால் உசிதமென முடிவெடுத்து பணத்தை எடுத்துக்கொண்டு, கடவுள் குறிப்பிட்ட அந்த பௌர்ணமிக்கு முந்தின நாள் அவரை சந்திக்க அவரது தபாலில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேரில் போனேன்...ஒரு பெரிய மைதானத்தில் ஒரே  ஒரு சாதாரண ஆறுக்கு-நாலு அறையில் சாந்தசொரூபியாக வீற்றிருந்தார் "கடவுள்", இம்முறையும்,எனக்கு கேள்விகேட்கும் வாய்ப்பை அவர்வழங்கவேயில்லை...கொஞ்ச நேரம் நின்றிருந்துவிட்டு.வாகனத்தில் கொண்டு போயிருந்த  பணத்தை அங்கேயே வைத்துவிட்டு அமைதியாக திரும்பி வந்துவிட்டேன். 




'டவுள்" குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது... அன்று விடியற்காலையிலிருந்தே மக்கள் என்னை மொய்க்கத் தொடங்கினர். மக்கள் புடைசூழ, கடவுளின் இருப்பிடம் நோக்கி நடந்தே பயணித்தேன். லட்சக்கணக்கானவர்கள் பின்தொடர...பரந்து விரிந்த மைதானத்தில் மக்கள் நிறைந்திருக்க.. மக்களை அறைக்கு வெளியே நிறுத்திவிட்டு, கதவை திறந்து உள்ளே சென்று தாழிட்டேன்...அறை வெறிச்சோடி கிடந்தது ,கடவுள் அங்கு இல்லை!!! "30 நாளில் மோசடியை கற்றுக்கொள்வது  எப்படி" என்ற புத்தகம் மட்டும் கீழே சிதறிகிடந்தது.அறையை சுற்றி வெளியே காத்திருக்கும் மக்களை பற்றிய பயத்தையெல்லாம் தாண்டி, புதிதாக ஏழாவது கேள்வி ஒன்று என் மனதை குடைந்தெடுக்க ஆரம்பித்தது,

"நான் ஏன் கடவுளாக பிறக்கவில்லை??" 

2 comments:

  1. ஏழாம் கேள்வி?

    நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

    ReplyDelete