Pages

Tuesday 4 October 2011

ஒலிம்பிக் தங்கமும், திருடனின் மனைவிக்கு வந்த பங்கமும்


கால்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தான் முதலாமானவன்....நெருக்கடியான அந்த தெருவின் ஆறடி சாலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினவன் கூட அப்படி ஓட முடியாது, ஆங் பின்னங்கால் பிடறியிலடிக்க....அப்படின்னு கூட ஏதோ சொல்லுவாங்களே..ஆனால் இவன் பண்ணிய வேலைக்கும், ஓடும் வேகத்துக்கும் முன்னங்காலே பிடறியில் அடிக்காத குறை.... கிட்டதட்ட சேரி எஃபெக்டில் இருக்கும் "செம்பட்டின்" அந்த தெருவில் கண்மண் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தான் . தெருவின் இருபுறமும் இருக்கும் வீடுகளின் வாசல்கள் கிட்டதட்ட ஒட்டினாற் போல் இருக்கும் சந்து பொந்துக்களில்...ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தட்டுமுட்டு சாமாங்களை கண்டபடி மிதித்தபடி உயிரை கையில் இறுக்க பிடித்துக்கொண்டு....மன்னிக்கவும்....கையில் ஒரு பர்ஸை இறுக்க பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.'ஓட்ட' ஜோசியம் தெரிந்திருந்த ஒரே காரணத்தினால் இவனை என்னால் இனம் காண முடிந்தது.இவன் திருடன்.



ல்லைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தாள் இரண்டாமானவள், செம்பட்டையடுத்த குண்டூரிலிருந்து ஓட்டமும் நடையுமாக தன் கேரக்டரை நிறைவாக தொடங்கியிருந்தாள் இவள். 

"பாவிப்பய மகன், வேசி மகன்..ராத்திரி அவ்ளோ சொல்லியும் கேக்காம மறுபடியும் திருடபோயிருக்கானே ...உருப்புடுவானா இவன் ...அய்யயொயொயோ".....

என ஆம்புலன்ஸ் சைரன் போல இவள் கதறிக்கொண்டு வந்தது...பிறவி செவிடர்களுக்கு கூட கேட்காமல் இருந்திருக்காது. இந்த நாய் நிச்சயம் செம்பட்டுக்கு தான் களவாடப்போயிருக்கும்....நேத்து தான ஏட்டையா எச்சரிச்சு வுட்டான்....இனிமே திருடினா இவன உரிச்சு எடுத்திருவேன்னு வேற சொன்னானே அந்த தொப்பை ஏட்டு.....நான் கூட இனி இவன் திருட மாட்டான்னு புள்ள மேல சத்தியம் பண்ணி காப்பாத்தி விட்டனே....புள்ளை கூட நேத்திக்கு வந்து அழுதுச்சே...பள்ளிகூடத்துல உங்கப்பாரு என்ன தொழில் பண்றாருனு கேட்டா பதில் சொல்ல முடியலன்னு......இப்படியெல்லாமும் இவள் நினைத்துக்கொண்டு ஓட்டமும், நடையும், பதற்றமுமாக நடந்து கொண்டிருந்ததை வைத்து இவளை இனம் காண டெலிபதியை டீ, காஃபி போல குடிக்கும் என்னால் முடிந்தது...இவள் திருடனின் மனைவி...




வியர்வையும், ஓட்டை புல்லட்டின் இஞ்சினிலிருந்து டீசலும் தெறிக்க புல்லட்டை ஓட்டிக்கொண்டிருந்தான் மூன்றாமானவன்....இவன் கொஞ்சம் கார்ப்பரேட் வாசி போல தென்பட்டான்...கோஸ்ட் ரைடர்ஸில் வரும் ஜானி பிளேஸை தோற்கடிப்பது தான் இவன் லட்சியம் என்பது இவன் சொல்லாமலேயே இவன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது....இவனை கொஸ்ட் ரைடர்ஸோடு ஒப்பிட்டது இவனது வேகம் குறித்தது.ஆனால் இவன் மூகத்தை பார்க்க எதையோ பல்க்காக பறிகொடுத்தவன் போலிருந்தான்.  திருச்சி டோல்கேட்டில் இயங்கத் தொடங்கிய இவனது மெஷின் குதிரை செம்பட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. 

"கொய்யால....அவன் மட்டும் கையில சிக்கினான் செதைச்சிடுவேன்..._______முண்டம்"....

என அவன் கத்தியது. அவனது மெஷின் குதிரையின் இரைச்சலைத் தாண்டி யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. வழியில் ஒரு பெரியவரை வழிமறித்து 

"இந்த வழியா ஒருத்தன் சிகப்பு கலர் சட்டை போட்டுகிட்டு போனானா பெரியவரே??

"______________ங்ங்கே.."வென பெரியவர் விழிக்க...

"டோல்கேட்டில நான் பஸ்ல இருந்து இறங்குறப்போ என் பர்சை அடிச்சிக்கிட்டு ஓடி வந்துட்டான் அதனால் தான் கேக்குறேன் பெரிசு...சீக்கிரம் சொல்லு எனக்கு நேரம் ஆகுது"அவசரப்படுத்தினான்.

"_______________________"

"அந்த ஆளு செவிடுப்பா..அவன் தாலிய ஏன் அறுக்குற?? " இன்னொரு பெரிசு எகத்தாளமாக ஏசிவிட்டு கடந்து போனது. 

சப்பென ஆகிவிட்டது இவனுக்கு...மீண்டும் புல்லட்டை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு...தன் கெட்ட
வார்த்தை அர்ச்சனைகளை தோடர்ந்தபடி...ஓட்டதொடங்கினான்.
'புல்லட் ஜோசியம்' தெரிந்திருந்தும் கூட என்னால் இவனுடைய பர்ஸ் காணாமல் போனதால் தான் இவன் மூஞ்சியை இப்படி வைத்திருக்கிறானென்ற பேருண்மையை சிரமப்பட்டு கண்டுபிடிக்க வேண்டியதாய் போய்விட்டது .இவன் பர்ஸை கோட்டை விட்டவன். கோட்டைசாமி என இனி விளிக்கப்படுவான்.



கால்தடுக்கி தொபுக்கடீரென கீழே விழுந்தான் திருடன்...

"சனியன் கண்ண எங்க பொடறியலயா வெச்சினு கீற?" 

குப்பத்து ஆண்டியின் அர்ச்சனையையும், மீசையில் ஒட்டியிருந்த மண்ணையும் அசால்ட்டாக  துடைத்து தள்ளியபடி மீண்டும் எழுந்து ஓட எத்தனித்தான் திருடன். முடியவில்லை..முட்டி பெயர்ந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது....பலத்த அடி...அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை....சோகமாகவும், கோபமாகவும் தன்னை தடுக்கிவிட்ட கல்லை திரும்பி பார்த்தான் . கருப்பும் வெள்ளையும் கலந்த கல்...கொஞ்சம் கிட்டே நெருங்கினான்... மைல் கல்!!!
அழுக்கு படிந்திருந்த கல்லை நன்றாக துடைத்துவிட்டு பார்த்தால் இடப்பக்கம் அம்புகுறி போட்டு..மெயின்ரோடு 300 மீட்டர் என்றிருந்தது...திருடனுக்கு "கொள்ளை" மகிழ்ச்சி! 
"உசுரு இல்லாட்டியும் என்னைய காப்பாத்தினயே கல்லே...தாங்க்ஸுப்பா..மெயின்ரோட்டுக்கு போனா எப்பிடியும் தப்பிச்சிரலாம் ...இன்னும் கொஞ்ச நேரம் நான இங்கனையே சுத்திகினு இருந்திருந்தா என்ன சுளுவா பிடிச்சிருப்பானுங்க" என சொன்னதோடு கல் காட்டிய திசையில்  நொண்டி நொண்டி நடையை கட்டினான்.




ந்த திருட்டு கம்னாட்டி எங்க அடி வாங்கிட்டு இருக்கானோ!! கடவுளே என் தாலிய காப்பாத்து என புலம்பிக்கொண்டே வேகத்தை கூட்டி நடந்து வந்துக்கொண்டிருந்தாள் திருடனின் மனைவி...அந்த விமலா சனியன் வேற எம்புருஷன் உத்தமன்,குடிக்கிறதில்ல, சீட்டாடுறதில்ல ஒழுங்கா கூலி வேலைக்கு போறான் அப்படி இப்பிடின்னு பீத்திகிட்டு மினுக்கிட்டு திரியறா...நாங்கூட எம்புருஷன் திருந்திபிட்டான்...இப்பவெல்லாம் திருடறதில்ல...பால்பண்ணைக்கு வேலைக்கு போறான்னெல்லாம் அடிச்சு விட்டுட்டனே...இப்ப இந்த சனியன் திருப்பியும் மாட்டிகிட்டு ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருச்சின்னா தெருவுல மானம் போய்டும், விமலா காறி துப்புவா...வேற வூடு பாக்கறத விட்டா வேற வழி இல்ல...இந்த கடங்காரன கட்டிகிட்டு ஒரு ஊருல நிரந்தரமா இருக்க முடியல..எங்க போனாலும் சனம் காறி துப்புது..இன்னிக்கு மட்டும் கையில கெடைக்கட்டும்..தாலிய அறுத்து மூஞ்சியில எறிஞ்சுபிடுறேன்...எம்புள்ளைய கூலி வேலைக்கு போயி காப்பாத்த எனக்கு தெரியும்! என "கடவுளே தாலிய காப்பாத்து"வில் தொடங்கி "தாலிய அறுத்து எறியனும்" வரைக்கும் திருடனின் மனைவியின் புலம்பல்கள் பல தளங்களில் பயணித்தன.



முழுக்க முழுக்க கோபம் கொப்பளிக்க மெஷின் குதிரையின் கர்ணகொடூர சத்தமும் சேர்ந்து கொள்ள திருடனை கொண்டு போக புல்லட்டில் வரும் எமன் கணக்காக மூஞ்சியை வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தான் கோட்டை சாமி'...அதை கோபம் என்று கூட சொல்ல முடியாது...வெறி!...திருடன் கையில் கிடைத்தால் கொத்து பரோட்டா போட்டுவிடுமளவுக்கு வெறி.இருக்காதா பின்னே ?! காலையில் அம்மாவுக்கு ஆபரேசன் செலவுக்காக பணம் எடுத்துகிட்டு பேங்குல இருந்து டவுன் பஸ்ஸுல ஆஸ்பத்திரிக்கு திரும்ப போற வழியில தான் ஒரு திருட்டு நாய் பர்சை அடிச்சிகிட்டு ஓடிட்டுது! சுளையா 30 ஆயிரம் ரூவா சலவை நோட்டுகள்...இன்னிக்கு அந்த பணம் கெடைக்கலேன்னா..அம்மாவோட கதி என்ன?? என அவன் கொஞ்சம் வாய்விட்டே புலம்பியது..அவனையும், அவன் புல்லட்டையும் தாண்டி எனக்கு மட்டும் கேட்டது. 



திருடன் மெயின்ரோட்டை தாண்டி ஒரு முச்சந்தியில் ஏதாவது வண்டி வருமா என எதிர்பார்த்து காத்திருந்தான். திருடனின் முதுகு பக்கமிருந்த சாலையில் வேக வேகமாக வந்துக்கொண்டிருந்த திருடனின் மனைவி இவனைக்கண்டதும் வேகமெடுத்தாள்.


புல்லட்டில் வந்துகொண்டிருந்த கோட்டைவிட்டவனின் புல்லட் அந்த முச்சந்திக்கு வந்ததும் மக்கர் பண்ணியது. பைக்கை விட்டிறங்கி என்னவோ நோண்டிக்கொண்டிருந்தான்.டீசல் தீர்ந்துவிட்டிருப்பதை கண்டுபிடித்து.."ஷிட்" என புல்லட்டை உதைத்தான்..யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என சுற்றி பார்த்தால் அவனுக்கு எதிர் சாலையில் முதுகை காட்டியபடி திருடன்.கிட்டதட்ட அவனை நோக்கி ஓடினான்.


திருடனிடம் வந்த திருடனின் மனைவி அவனிடம் ...

"ஏய்யா இந்த பக்கம் போனா செம்பட்டு வரூமா? என கேட்டாள்..

ஆமோதிப்பது போல திருடன் தலையாட்ட அந்த திசை நோக்கி தனது புலம்பல் நடையை தொடங்கினாள் திருடனின் மனைவி.



திருடனை நெருங்கிய கோட்டைசாமி..

"சார் இங்க பக்கத்துல எங்க பெட்ரோல் பங்க் இருக்கு?? " என்றான். திருடன் கை காட்டிய திசையில்...தன் புல்லட்டை உருட்டதொடங்கினான் கோட்டைசாமி. 


ன்னமும் வண்டி கிடைக்காமல் தார்சாலையை வெறித்துபார்த்தபடி நின்றிருந்தான் திருடன்.




ஆங் ஒரு சின்ன விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே.... திருடன் என்ற ஒரு விஷயத்தை தவிர நம்ம 'ஹீரோ' திருடனுக்கும் "திருடனின் மனைவி"யின் கணவனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை! அதே சமயம் சிகப்பு சட்டை போட்டிருந்ததை தவிர கோட்டைசாமியின் பர்ஸை அடித்தவனுக்கும் நம்ம ஹீரோவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை!!

No comments:

Post a Comment