Pages

Tuesday 4 October 2011

"பசீகரன்" என்னும் கடவுள்

                                                   "பசீகரன்" என்னும் கடவுள் 



   

கி.பி.2167,  நள்ளிரவு தாண்டி 1.31 மணி...

  டாக்டர் பசீகரன் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்..

இம்முறையும் தோல்வி..சக்ஸஸ் காம்பினேஷன் வரும் என பார்த்தால் சல்ஃபியூரிக் ஆசிட் ஃபார்ம் ஆகும் போது ஏற்படுவது போல ரியாக்டரிலிருந்து புகை தான் வந்தது கரும் நிறத்தில்.

இது நிச்சயம் ஒரு கொடுமையான தருணம் தான் அவருக்கு.இருக்காதா பின்னே....இந்த நவம்பர் மாதத்தின் 18ம் நாளின் 28வது முயற்சி இது...அதுவும் சாதாரணமானதில்லை.
 டோகோடிரினால்ஸ் எனப்படும் ஒருவகையான  கெமிக்கல்   கொழுப்பில் மட்டுமே கரையக்கூடியது. இதையும் வேறு சிலவற்றையும் சேர்த்து மனிதன் கரையவே கூடாத மருந்தை கண்டுபிடிப்பது தான் டாக்டர் பசீ விரும்பி  ஏற்றுக்கொண்டிருக்கும் அசைன்மெண்ட்.

ஆம் மனிதனின் சாவை தடுத்து நிறுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியின் இருபத்தியெட்டாவது படியில் தான்  பசீகரனுக்கு இந்த சோர்வு.

 குளிர் கூடிப்போய்விட்ட அந்த பின்னிரவில் ஏ.சி யை குறைத்து வைக்க கூட அவருக்கு நேரம் இருக்கவில்லை.
 குளிர் தாங்காமல்  நடுங்கிக்கொண்டே  VIRTUAL மானிட்டரை பார்த்துக்கொண்டிருந்தார் சற்று முன் வரையிலும்.
இப்போது தான் அதுவே உறைக்கிறது..
நாற்காலியை மெதுவாக சுழற்றி பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.
கெமிக்கல்ஸ் புகைந்து போய் மானிட்டரில் AN ERROR OCCURED என டிஸ்பிளே
ஆவதை இம்முறையும் அவரால் தாங்க முடியவில்லை..

தன்னெதிரே இருக்கும் ஆளுயர கண்ணாடியில் தனக்கு பின்னாலிருக்கும் மேஜையில்
வைக்கப்பட்டிருக்கும் இட்லி தட்டு பிரதிபலிக்கிறது. மாலை 9 மணிக்கு வைக்கப்பட்ட டிபன் இன்னும் அப்படியே இருக்கிறது என்ற உணர்வு கூட இல்லாமல்  ரிஃப்ளக்ஷன் தியரியை பற்றிய யோசனையில் அவர் ஆழ்வது அவருக்கு புதிதல்ல.அதுவும் இட்லி, இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,21ம் நூற்றாண்டு நிறைவு
பெறும் வரையிலும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்ட உணவு என இன்று காலையில் தான் தனது Z-PADல்  சண்டே ஸ்பெஷல் ஆர்டிக்கிள் ஒன்றை   படித்திருந்தார். அதை செய்து தர வேண்டி அவர் அம்மாவிடம் சண்டைபோட்ட போது அம்மாவே ஆடித்தான் போய்விட்டார்.ஒரு வழியாக தன் மகனை பிடித்த
லேப் டெக்னீஷியன் விமலாவின் பேய் விலகி விட்டது என நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டார். கஷ்டப்பட்டு அதன் ரெசிபியை நெட்டில் தேடி எடுத்து   இட்லியை செய்யும் வரை கூடவே நின்றிருந்த பசீகரன் "வேதாளம்" எட்டு மணிக்கே முருங்கைமரம் ஏறிவிட்டதில் அம்மாவுக்கு வருத்தம் தான் ஆனால் இப்போது
பசீகரனுக்கு இட்லி  பெரிய பிரச்சினையாக தெரியவில்லையே.

எட்டு மணிக்கு லேப்பில் நுழைந்தவுடனேயே சிஸ்டம் மானிட்டரில் தோன்றிய பசீ-யின் ப்ரொபசர்
டோரா தான் பிரச்சினை. பரிகாசம் செய்து சிரிக்காத குறையாக உன்னால் அந்த மெடிசினை கண்டுபிடிக்கவே முடியாது என சவால் விட்டிருந்ததில் இட்லிக்கான   ப்ரையாரிட்டி காணாமல் போயிருந்தது. டோரா என்று செல்லமாக அழைக்கப்படும் டோரா புஜ்ஜி தான் பசீகரனின் ப்ரொபசர். சீரியஸாகவே ரொம்பவும்
வில்லத்தனமான ஆள். தன் மாணவன் சாதிப்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வில்லன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பசீகரனுக்கு ரோபாடிக்ஸ் தான் எல்லாமே. ஆரம்பத்தில் ரொபோட்டிக் ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டிருந்தார்.ஆனால் என்ன தான் கஷ்டப்பட்டு ரோபோவை உருவாக்கினாலும்
அதை  இந்த டோரா புஜ்ஜி நிராகரித்துவிட்டு பேரீச்சம்பழம்,இதயம் அது இது என டயலாக் பேசுவது போல அடிக்கடி கனவு வந்து தொல்லை கொடுத்தது.
அதனால் தான் அதுவரையிலும் ரோபோவை உருவாக்குவதற்காக வாங்கி வைத்திருந்த 4 DC மோட்டார், சார்ஜ் பண்ணுவதற்கு வாங்கி வைத்திருந்த 5
டுயூரோசெல் பேட்டரி போன்றவற்றை கொண்டு போய் எடைக்கு போட்டு விட்டு நிஜமாகவே LION DATES வாங்கிவந்துவிட்டார். ரோபோட்டிக்ஸ் துறைக்கு
அத்தோடு முழுக்கு போட்டுவிட்டு அன்று மாலையே கெமிக்கல் எஞ்சினியரிங்குக்கு தேவையான புத்தகங்களை வாங்கி எண்ணி ஆறே மாதத்தில் கெமிக்கல்
துறையில் விற்பன்னர் ஆகியிருந்தார். இதெல்லாம் நடந்தது கடந்த சம்மரில். கெமிக்கல் படித்து விட்டால் மட்டும் போதாதே. டோராவுக்கு முன் சாதித்து காட்ட
வேண்டுமே. அதனால் தான் இட்லியை கூட மறந்து விட்டு 9 மணியிலிருந்து இந்த போராட்டம். இதற்காக சாகா மருந்தை அவர் தேர்ந்தெடுக்க காரணம் அது
தன்னால் முடியும் என உறுதியாக நம்பியதால்.
  மணி 3 ஐ தொட்டு விட்டிருந்தது. மீண்டும் மானிட்டரை பார்த்தார். கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்ட இடைவெளியால் மனது லேசாகியிருந்தது எழுந்து நின்று
கை கால்களை ரிலாக்ஸ் ஆக்கி கொண்டார். மீண்டும் ஒருமுறை ரியாக்டரை சுத்தம் செய்துவிட்டு கெமிக்கல்களை நிரப்பி . இம்முறையும் தோற்றுவிடக்கூடாது
என்ற பயத்தில் கவனமாக ஆபரேட்டிங் கண்டிஷன்களை சரிபார்த்துக்கொண்டார்.ரியாக்டரை சீல் செய்து விட்டு 36 நிமிடங்களுக்கு டைம்-ஐ செட் செய்தார்.                           

    மீண்டும் ஒரு ரிலாக்ஸ் செஷன்.  

 இந்நாட்களில் விஞ்ஞானம் தான் எவ்வளவு முன்னேறிவிட்டது?

 அதிகபட்சம் மருத்துவத்துறையை எடுத்துக் கொண்டால் கேன்சரெல்லாம் சாதாரணம்.எய்ட்ஸெல்லாம் ஜுஜுபி. சூழ்நிலையும் அப்படி மாறிவிட்டிருந்தது. இப்போதெல்லாம் மழையில் நனைந்தாலே கேன்சர் பிடிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மழையில் நனைந்தாலே  கேன்சர் பிடிக்கிறது என்றாலும் மழை வருடத்துக்கு ஒரு முறை தான் பெய்கிறது. கேன்சரை எளிதாக
குணப்படுத்திவிடவும் முடிகிறது. ஆனாலும் கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு வலியோடு கூடிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அது தான் கொஞ்சம் சிரமம்.

 பசீகரனுக்கும் கேன்சர் தான். கடந்த மாதம் பெய்த மழையில் நனைந்ததால் ஒட்டிக்கொண்ட கேன்சர்.இப்போது சிகிச்சையின் இரண்டாம் மாதத்தில் இருக்கிறார்.

 அடிக்கடி வலி ஏற்பட்டு தொல்லை கொடுக்கும்.வலியை மட்டும் பொறுத்துக் கொண்டால் இதுவும் ஒரு பெரிய பிரச்சினை கிடையாது.
ஆக மொத்தத்தில் இது தான் இப்போது இருக்கும் அதிகபட்ச ஹார்ம்ஃபுல் நோயே.

இதற்கு மேலும் ஒரு நோய் கிடையாது.   

 பசீகரனின் அறையில் ஒரு காலண்டர் உண்டு. அவரது ஆருயிர் நண்பன் சட்டி என்பவரின் ஏஜென்சி விளம்பரம் அடங்கிய டிஜிட்டல் PAD.
சட்டி தனது ஏஜென்சி மூலம் ரோபோக்களை ஆர்டரின் பேரில் டோர் டெலிவரி செய்கிறார். ரெயில்வே கரண்ட் பேனலின் வயரை எடுத்து தனது இடுப்பில் செருகி தானாகவே சார்ஜ்
செய்துக்கொள்ளும் மோஸ்ட் அட்வான்ஸ்டு ரோபொக்களை பற்றிய விளம்பர வாசகங்கள் அந்த டிஜிட்டல் பேடில் வந்து போகும். அதில் ஒரு மூலையில்
HOROSCOPE போன்றவற்றை பார்த்துக்கொள்ளும் வசதியும் உண்டு. இன்னொரு ஸ்பெஷல் விஷயம் அதில் இடம்பெற்றிருக்கும் டெத் மீட்டர்.
நமது உள்ளங்கயை ஸ்கேன் செய்வதன் மூலம் நமது சாவு நாளை தீர்மானித்து விடும் அந்த மீட்டர். கவுண்ட் டவுன் டைமர் மூலம் சாவு தேதியையும்.
நாம் மேற்கொண்டிருக்கும் நோய்சிகிச்சை பற்றிய விவரங்களையும் காட்டும். நாம் மருந்து சாப்பிட மறந்தாலும் கூட தானாகவே வாலன்டியராக நமது Z-PADக்கு
தகவல்களை அனுப்பி ஞாபகப்படுத்தும்.
 அது தான் இப்போது பசீகரனின் கண்ணில் படுகிறது.    ஏற்கனவே தனது கையை ஸ்கேன் செய்திருந்ததால் தனது வாழ்நாள் இன்னும்
              
 67 years 2 months 22 days 4 hours 12 minutes 56 seconds  என ஸ்கிரீனில் காட்டியது .விநாடிகள் குறைய குறைய முன்பெல்லாம்
பயமாக இருக்கும் பசீகரனுக்கு. ஆனால் இன்று அது துச்சமாக தெரிகிறது. ஏளனப்பார்வை பார்த்தான்.    பக்கத்திலிருந்த DISEASE DIAGNO METER பசீகரனுக்கு கேன்சர் குணமாக இன்னும் ஒன்றரை மாதங்கள் இருப்பதாக காட்டியது. இன்றிரவு டேப்லட்
எடுத்துக்கொள்ளாததையும் ஒரு ஃப்ளாஷ் மெசேஜாக காட்டி பிளிங்க் ஆகிக் கொண்டிருந்தது.
   பீப்...பீப்...பீப்... 

அரை மணிநேர இடைவேளையில் அண்டார்டிக்கா பாலைவனத்தில் GUITAR ஐ வைத்து டூயட் பாடிக்கொண்டிருந்த  பசீகரன் பீப் ஒலியால் கவனம் கலைந்து
ரியாக்டரை நோக்கினார்.
PRODUCT FORMED, REACTION SUCCESS ,PERFECT CONDITION  எனக் காட்டியது VIRTUALஸ்கிரீன்.
பசீ-யால் நம்பவே முடியவில்லை...சந்தோசத்தில் கத்தியே விட்டார். அங்குமிங்கும் ஓடினார். ஒருமுறை கிள்ளிபார்த்துக் கொண்டார்.
அவர் போட்ட ஆட்டத்தில் மேசையிலிருந்த இட்லி கீழே விழுந்து சிதறியது. தாமதிக்காமல் ரியாக்டரை திறந்தார். ஃபார்ம் ஆகியிருக்கும் மனிதம் காக்கும்
மருந்தை எடுத்து பார்த்து சந்தோசப்பட்டார்

.புரொபசர்  டோரா புஜ்ஜியின் ஃபோட்டோவை சிஸ்டம் மானிட்டரில் பிரவுஸ் செய்து எடுத்து விரலால் கொக்கி காட்டி  பழிப்பு காட்டினார்.

இனி மனிதனுக்கு இறப்பே கிடையாது...நான் தான் கடவுள்.. என் சிலையை தான் மக்கள் வீடுகளில் வைத்து சேவிக்க போகிறார்கள் என கத்திக் கொண்டே துள்ளி
குதித்தார்.
ஆனால் சோதித்து பார்க்க வேண்டுமே.....உடனடியாக எப்படி சோதித்து பார்ப்பது??

மணி அதிகாலை 4..

.இந்த நேரத்தில் யாரை போய் தேடுவது???

பேசாமல் தனக்கே சோதித்து பார்த்து விட முடிவெடுத்தார். 

மருந்திலிருந்து கொஞ்சம் எடுத்து உருண்டையாக்கி மனதை திடப்படுத்திக்கொண்டு பல்லில் படாமல் விழுங்கினார்.

தொண்டை எரிச்சலெடுத்தது.
 அது  வயிற்றுக்கு போய் சேரும் வரையிலும் நெருப்புத்துண்டை விழுங்கியது போலிருந்தது. வயிற்றுக்குள் ஏதேதோ மாற்றங்கள்....

களுக்...முளக்...டபக்....டனால்...

எல்லாம் அடங்கியாயிற்று. வயிறு நார்மலாகி விட்டது.
ஒருவித புது தெம்பு வந்திருந்தது. சாப்பிடாததால் ஏற்பட்டிருந்த சோர்வு கூட இப்போது இல்லை....

ஆனால் சாவு கிடையாது என்பதை எப்படி சோதித்து பார்ப்பது??

இருக்கவே இருக்கிறது சட்டியின் டிஜிட்டல் PAD....அதை நோக்கி ஓடினார்...

தனது உள்ளங்கையை பதித்தார்....

 PAD ல் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தன ஒரு நிமிடம் ஸ்கிரீன் அணைந்து விட்டது....

 சிறிது நேரத்தில்  எஞ்சியிருக்கும் வாழ்நாட்களை காட்டிக்கொண்டிருந்த டைமரில்             

உங்கள்   வாழ்நாள் இன்னும்______ "INFINITE" நாட்கள் உள்ளன என

காட்டியது. "வெற்றி...வெற்றி ...வெற்றி...

.நான் தான் கடவுள் எனக் கத்திக்கொண்டே 

 DISEASE DIAGNO மீட்டரை நோக்கினார்.

  உங்கள் கேன்சர் குணமாக இன்னும் _________"INFINITE" நாட்கள் உள்ளன என்றிருந்தது.

No comments:

Post a Comment