Pages

Tuesday 4 October 2011

மரணம் எனப்படுவது யாதெனில்


இன்று என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். நான் இன்றோடு வாழ்ந்திருக்கும் 9490 நாட்களோடு எனக்கு 26 வயது முடிவடைகின்றது என்பது மட்டுமே இந்த நாளின் சிறப்பல்ல! இந்த நூற்றாண்டில் கொண்டாட்டங்கள் என்பதே மழுங்கிவிட்டிருக்கின்றன.திருவிழா கிடையாது, திருமண வைபவங்கள் கிடையாது, ஊர் கூடி என்னமோ தேர் இழுப்பார்களாமே! எனக்காக நானே பார்த்துக் கொண்ட வரன் இன்று கைகூடியிருக்கிறது. திருமணம் என்பதே சிக்கலான ஒன்று , அரசாங்கத்திடம் கேட்டால் துணைக்கு ஒரு பெண் கிடைப்பாள், பிடிக்காவிட்டால் அனுப்பிவிடலாம், திருமணத்திற்கு தனியாக அனுமதி வாங்க வேண்டும். அப்படியே கஷ்டப்பட்டு வாங்கிவிட்டாலும் எந்த பெண்ணும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்வதில்லை, வெகு அரிதாக அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் பெற்றோர் அதை விரும்புவதில்லை. இப்படிப்பட்ட ஒரு பற்றற்ற நூற்றாண்டில் நான் மட்டும் தப்பி பிறந்திருக்கிறேன். எனக்கே எனக்காக ஒரு பெண், எங்களிருவருக்கும் ஒரே ஒரு குழந்தை! நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒன்றே ஒன்று தான்! அதை மீறினால் அரசாங்கத்தின் கடுமையான தண்டனை நிச்சயம்.


--------------------------------------------


நான் பார்த்த ஒரே திருமண வைபவம் என் அப்பா அம்மாவுடையது! அதுவும் என் வேலை சம்பந்தமாக என் ஸ்டோர் ரூமை குடைந்து கொண்டிருந்த போது கிடைத்த ஒரு தேய்ந்து போன காம்பேக்ட் டிஸ்கில் இருந்தது. உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த அந்த டிஸ்க்கிற்கு நவீன ரெக்கவரி சாஃப்ட்வேர் கொண்டு ப்ளூ ரே டிஸ்க்காக திரும்பவும் உயிர்கொடுத்தேன். என்னால் அது பிழைத்த காரணத்தினாலோ என்னமோ கைக்கு அடக்கமான அந்த சின்ன டிஸ்க் என் வாலெட்டிலேயே தங்கி விட்டது. அடிக்கடி அதை ஓடவிட்டு நான் ஏங்குவதுண்டு! ஆனால் இந்த அரசாங்கத்தில் திருமணம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது! மக்களுக்காக ஜனநாயகம் என்றிருந்த சூழ்நிலையெல்லாம் கப்பலேறி சுமார் நூறுக்கும் மேலான வருடங்களாகிவிட்டன. இது ஏதோ ஜனநாயகத்தின் நவீன வடிவமாம், டாக்டர் பிலிக்கர் , ஜனத்தொகை கட்டுப்படுத்தமுடியாமல் போய்விட்ட வேற்றுகிரகவாசிகள் இந்த ஜனநாயக முறைகளைத்தான் பின்பற்றுவதாக இந்த தியரியை முன்வைத்தார். நம்பித்தொலைக்க வேண்டிய கட்டாயம் பூமி கிரகத்திற்கு!


--------------------------------------------


  இன்று விடிந்ததிலிருந்தே அம்மாவின் கவனிப்பு அசாதாரணமாய் இருக்கிறது. எதையோ உணர்ந்துகொண்டவள் போல என்னையே சுற்றி சுற்றி வருகிறாள், விழுந்து விழுந்து கவனிக்கிறாள். பரிதவிப்போடு என்னிடம் பேசுகிறாள். உதடுகள் துடிக்க என்னென்னமோ பிதற்றுகிறாள். அதை பார்த்து வருத்தப்படும் உணர்வுகளை இந்த நூற்றாண்டு எனக்களிக்கவில்லை!


--------------------------------------------


  டாக்டர் பிலிக்கர் இந்த நூற்றாண்டில் அதிமுக்கியமான பிறவி! இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த உலகம் தோன்றி உழன்று வந்திருக்கும் இத்தனை கோடி ஆண்டுகளுக்கும், இனி உலகம் இருக்கப்போகும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கும் சேர்த்து அவர்தான் முக்கியமான பிரஜை. நியூட்டன், எய்ன்ஸ்டீன் வகையறாக்கள் எல்லாம் சில்லறை கண்டுபிடிப்பாளர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். கடவுளின் இருப்பை இல்லாமல் செய்தது தான் இவர் செய்த சாதனை. ஆம் முக்கால் நூற்றாண்டு கடும் ஆராய்ச்சிகளின் விளைவாக மரணத்தை வென்றுவிட்டிருக்கிறார் பிலிக்கர்! 21ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த அதிசயத்தை இவர் நிகழ்த்தியிருக்கிறார்.மரணம் என்பதே இல்லை! உலகமெங்கும் ஜனத்தொகை பிதுங்கி வழிகிறது! வாழ்வின் முடிவிலா வெளிப்பயணத்தில் சிக்கி மனநிலை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.அவர்களைகூட பிலிக்கரால் குணப்படுத்திவிட முடியுமென்றாலும் அரசாங்கம் அதை அனுமதிப்பதில்லை, மாறாக அவர்களை சைக்கோக்களாக சித்தரித்து கொன்றுவிடுகிறது.


--------------------------------------------


  ஆக மரணமற்ற இந்த உலகத்தில் புத்தி பேதலிக்காமல் வாழ்வதொன்றே சாகாமல் வாழ்வதற்கான வழி! திருமணங்கள் மக்களை பைத்தியம் பிடிக்க செய்கின்றன என மக்களே இணைந்து திருமணத்திற்கு எதிரான மசோதாவை கடுமையாக போராடி கி.பி 2634ம் வருடம் கொண்டுவரச்செய்திருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு  எதிரான கடைசி மக்கள் எழுச்சி இதுவே!



--------------------------------------------


நான் சொல்ல மறந்த இன்னுமொரு முக்கியமான விஷயம் அடியேன் நான் டாக்டர் பிலிக்கரின் பயிற்சி விஞ்ஞானிகளுள் ஒருவன், இந்த வாக்கியத்தை எழுதிய இரவின் மாலையில் பிலிக்கர் என்னுடைய கணக்கு வழக்குகளை முழுவதுமாக முடித்து வவுச்சரில் பிங்கர் பிரின்ட் வாங்கி கொண்டார், என்னுடைய சான்றிதழ்கள் அனைத்தையும் திரும்ப கொடுத்துவிட்டார். 


--------------------------------------------


 என்னை பதவி நீக்க சொல்லி அரசாங்கத்திடமிருந்து தகவல் வந்ததாக என் முன்னாள் சகஊழியனும் என் நெருங்கிய தோழனுமாகிய ஜேக்ஸ் ரகசிய தகவல் அனுப்பினான். நான் அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு அதிமுக்கிய ரகசிய படுகொலைகளுக்கு எதிராக திரட்டிக்கொண்டிருந்த தகவல்களே இதற்கு காரணமாக சொல்லப்பட்டிருந்ததாம்.


--------------------------------------------  


  அரசாங்கம் ஆறு வாரத்திற்கொருமுறை களையெடுப்பை மேற்கொள்கிறது. அவர்கள் கொல்வதற்காக அரசாங்க பதிவேடுகளிலிருந்து பிரஜைகளை ரேண்டமாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த விவகாரம் அப்பட்டமாக பொதுமக்களுக்கு தெரியாவிட்டாலும் அவர்களை கொல்ல நம்பத்தகுந்த காரணங்களை அரசாங்கம் சாதுர்யமாக முன்வைத்து ஏமாற்றிவிடுவதால் மக்கள் முட்டாள்களாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது பிரச்சினை அதுவல்ல! மக்கள்தொகை பிதுங்கி வழியும் ஒரு கிரகத்தில் இந்தமுறை நிச்சயம் அவசியம்! இல்லாவிட்டால் பட்டினி பஞ்சத்தால் மனித இனமே அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்! பணக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ,ஏழை எளியவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து கொல்லும் அரசாங்கத்தின் அயோக்கியத்தனத்திற்கு எதிராக நான் மேற்கொண்ட ரகசிய பிரசாரங்கள் என்னை களையெடுப்பு பட்டியலில் சேர்த்திருக்கிறது. 


--------------------------------------------

ஆம் ! என் உயிரை அரசாங்கம் எடுக்கப்போகும் விஷயம் மூன்று நாள் மீதமிருக்கையில் இன்று  தான் எனக்கு தெரியவருகிறது! எனக்கு சாவு குறித்து நிச்சயம் பயமில்லை. என் மரணத்திற்கு பிறகு போராட்டங்களை முன்னெடுக்க நான் ரகசியமாக ஒரு ஆளை தயார்படுத்தியிருக்கிறேன்! அது யார் எவர் எனும் விவரங்களை இங்கே எழுதி வைப்பது ஆபத்தாகிவிடும்!


--------------------------------------------


  நாளைக்கு எனக்கு சாவு தண்டனை. என்னுடைய கடைசி விருப்பங்களை பட்டியலிட சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. நிச்சயம் நான் பெண்சுகத்தை நாடப்போவதில்லை. ஒரே ஒரு முறை ஒரே ஒரு முறை என் அம்மா எனக்காக அழுவதை பார்க்க அனுமதிக்க கோரப்போகிறேன். நான் அழுகையை பார்த்ததே இல்லை!


--------------------------------------------


  நான் தனிமைபடுத்தப்பட்டுவிட்டேன்! என் அம்மா கண்ணாடி சுவருக்கு அப்பால் என்னை பார்த்தவாறே அழுதுக்கொண்டிக்கிறார். ஆத்ம திருப்தியோடு இந்த கடைசி வரிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் அரை மணியில் என்னை அழைத்துப்போகப்போகிறார்கள். என் போராட்டத்திற்காக நான் என்னையே இழக்கப்போவதை நினைத்தால் பெருமை பீறிடுகிறது.


--------------------------------------------


  கண்ணாடிசுவருக்கு அப்பால் என் அம்மா இன்னமும் அழுதுகொண்டிருக்கிறாள். சிறு புன்னகையோடு நான் அவளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கண்ணில் ஒரே ஒரு துளி கண்ணீர் வழிகிறது. என்னை விஷவாயு அறைக்கு கொண்டு போக மூவர் வந்திருக்கிறார்கள். என்னிடமிருந்து இன்னும் ஐந்தாறு வினாடிகளில் இந்த டைரி பிடுங்கப்படலாம்.


--------------------------------------------


                            ..........திரு.ரோஹன் அவர்களின் சிதைந்து போன டைரியின் பக்கங்களிலிருந்து.

No comments:

Post a Comment