Pages

Tuesday 4 October 2011

வெப்பம் விழுங்கும் நியூட்டன்



     காற்றின் பரப்புஇழுவிசையை விர்ரென கிழித்துக்கொண்டு ஜன்னலைத்தாண்டிப்போய் விழுந்தது என்னுடைய ப்ளூ ரே டிஸ்க்....

  நான் அதிர்ந்து அடங்குவதற்குள், புரொஃபசெர் டோரா அடுத்த அஸ்திரத்தை என் மீது பாய்ச்சினார்,


    "வெளியே போடா.. வந்துட்டான் தூக்கிகிட்டு பெரிய இவனாட்டம், இதெல்லாம் ஒரு இன்னோவேஷனாம். உன்கிட்டயெல்லாம் பொறுப்ப குடுத்தா இப்டிதான் ஆகும்!" 


 திகீரென்றிருந்தது.கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க முன்னே நிகழ்ந்த காட்சிகள் மங்கி, துக்கம் கண்ணை அடைத்தது. இப்படியொரு விஷயத்தை நான் எதிர்பார்த்து வந்திருக்கவில்லை! எதற்கெடுத்தாலும் என்னை முட்டாள், மக்கு, லாயக்கில்லாதவன் என காரணமில்லாமல் திட்டி தீர்க்கும் டோராவின் வாயை இம்முறை நிச்சயம் அடைத்துவிட வேண்டுமென இரவுபகலாக உழைத்து உருவாக்கிய என்னுடைய ஃபார்முலா கொண்ட டிஸ்க் தான் 
 இங்கே ஜன்னல் தாண்டி வாட்டர் ஃபவுன்டெயினில் மூழ்கிகிடக்கிறது. சற்றுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீரில் பிரதிபலிக்கும் 'தோற்றுப்போன' என்னை ஐந்து நிமிடங்களுக்கும் அதிகமாக வெறிக்க என்னால் முடியவில்லை. மெதுவா ஊர்ந்து நடக்கத்துவங்கினேன்.


      ஹாட்சூட்டை உடுத்த மறந்துவிட்டு ஒருநாள் அதிகாலை ஜாக்கிங் போகும்போது தான் இந்த ஐடியா   ஏதேச்சையாக மனதில் உதித்தது. வெயில், வெயில், வெயில்... சூரியனின் சிதைவு காலம் எனப்படும் பிரபஞ்ச   விழுங்கலுக்கான அறிகுறிகள் இந்த நாட்களில் கொஞ்சம் அதிகமாகவே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. காலை ஏழு   மணிக்கெல்லாம் வெப்பநிலை குறைந்தபட்சம் 68 டிகிரியை தொட்டுவிடுகின்றது. மத்தியான வேளைகளில் உலகமே கிட்டதட்ட முடங்கிவிடும். மனித நடமாட்டம் பெரும்பாலும் வீதிகளில் இருக்காது. அத்தியாவசிய தேவைகளுக்காக   நகரங்களில் மக்கள் சுற்றித்திரிய சப்வேக்கள் உலகமெங்கும் உண்டு என்றாலும் மத்தியான வேளைகளில் 
 வெளிச்செல்வதை மக்கள் விரும்புவதில்லை. காலை 1 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்குள்ளாக தான் பெரும்பாலான அலுவலகங்களின் வேலைநேரங்கள் இருக்கும். 10 மணிமுதலான பகல் வேளைதான் இப்போதெல்லாம் மனித இனம் தூங்குதலுக்கும், இன்னபிற காரியங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.       
     

  இந்த மாதிரியான சூழ்நிலையில் ஹாட்சூட் உடுத்தாமல் வெளியே போகக்கூடாதென்பது தான் அரசாங்கத்தின் ஆணை. யாருமே ஹாட்சூட் இல்லாமல் வெளியே போகக்கூடாது அப்படிப்போனால் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டுமென்பது அரசாங்கத்தாலேயே கொண்டுவரப்பட்ட விதி! அரசியல்வாதிகள் கூட வெயில் சார்ந்த   வாக்குறுதிகளை கொடுத்துத்தான் தேர்தல்களை சந்திக்கிறார்கள். மரம் செடிகளை மீண்டும் நட்டு உலகமெங்கும் வளர்ப்போம் என்கிறார்கள். பெரும்பாலும் அழிந்துபோய்விட்ட தாவர இனங்கள் மீண்டும் பயிரிடப்பட்டு அவை 
வளர்தலுக்கான சூழ்நிலை உருவாக்கப்படுமென்கிறார்கள். வெயிலின் தாக்கத்தை குறைக்க ஹாட்சூட், குளிர்சாதங்களை   தாண்டி ஒரு மாற்று நிச்சயம் உருவாக்கப்படுமென்கிறார்கள். 21ம் நூற்றாண்டுக்கு முந்தைய சூழ்நிலைகள் பூமியில்   மீள்கொணரப்படும் என்கிறார்கள் , ஆனால் காலங்காலமாக நடப்பது போல எந்த மாநிலகட்சியோ,தேசிய கட்சியோ கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியதே இல்லை. அதிலும் கொடுமையான விஷயம், ஹாட்சூட்டுகளையும், குளிர்சாதங்களையும் அரசாங்கம் மட்டுமே விற்கும்!  மாதத்திற்கு ஒரு முறை ஹாட்சூட்டையும், மூன்று மாதத்திற்கொரு முறை வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் குளிர்சாதனங்களையும் ஒவ்வொரு குடும்பமும் மாற்றியே தீர வேண்டும். மாற்றாத பட்சத்தில் அவை வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு கிட்டதட்ட அனைவரிடமும் பணம் பறிக்கப்படும். 


   அரசாங்கம் குளிர்சாதனங்களை பல தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. நான் பணியாற்றுவது   அப்படியான ஒரு தனியார் நிறுவனத்தில் தான். பொதுவாக இப்படியான எல்லா தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி பிரிவொன்று இயங்கி வரும். அதாவது 
வெயிலை சமாளிக்கும் மாற்றை கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்கிறோம் என பொதுமக்களை ஏமாற்ற அரசாங்கம்   நிறுவனங்களுக்கு போட்டிருக்கும் கட்டளை அது. கிட்டதட்ட அங்கு எந்தவித ஆராய்ச்சியும் நடக்காதென்பதும், பெரும்பாலான நிறுவங்கள் அந்த மையங்களை உணவருந்தும் கூடமாக பயன்படுத்திவருகின்றன என்பதும்   முகத்திலறையும் உண்மை!.அந்த ஆராய்ச்சி வென்றுவிட்டால் தான் அரசாங்கத்தின் முக்கியத்தொழிலே   படுத்துவிடுமே! 


  வேலைக்கு நான் புதிது என்பதால் நிறுவனத்தின் வழக்கங்களை நான் அறிந்திருக்கவில்லை. அதாவது புதிதாக   இணையும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வெயில் மாற்று ஆராய்ச்சியை தொடருமாறு அழைப்பு விடுக்கப்படும், ஆனால்  மாணவர்கள் அதை தட்டிகழித்துக்கொண்டே வந்து ஆராய்ச்சியை சமர்பிக்கும் நாளில் தன்னுடைய ஆராய்ச்சி   தோல்வியுற்ற மாதிரியாக காண்பிக்க வேண்டும்.   இந்த ரகசிய சூட்சுமங்களை அவர்கள் சொல்லிகொடுக்கும் முக்கியமான வகுப்பொன்றை நான் தவற விட்டிருந்தேன். அதனால் தானா என்னவோ ரொம்பவும் மெனக்கெட்டு என்னுடைய ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்திருந்தேன்.

அம்மோனியாவோடு சேர்த்து பெயர் சொல்லக்கூடாத வேதிப்பொருட்கள் திணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட   இன்ஃப்ராரெட் ஷூட்டர் நிச்சயம் புரட்சியை ஏற்படுத்துமென்பது எனக்கு சத்தியமாகத்தெரியும்.    வானை நோக்கி இந்த ஷூட்டரால் சுட்டால் போதும் உள்ளேயிருந்து பரவும் அம்மோனியா கலந்த கலவை   இன்ஃப்ராரெட் அலைகளோடு விரவி ஒளி ஆற்றலில் இருக்கும் வெப்பத்தன்மையை விழுங்கிவிடும்! கிட்டதட்ட இது   ஆற்றலை அழிப்பதற்கு சமமானது! ஒளி அலையின் ஒரு குவாண்டம் பொட்டலத்தை இது சிதறடிப்பதன் மூலம்   அடுத்தடுத்த குவாண்டங்களின் ஆற்றல் செத்து போவது தன்னிச்சையாக நிகழுமென்பது தான் இதன் தனிச்சிறப்பு.

ஒரு   ஷூட்டின் வீச்சு 5000 கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரவும் சக்தி வாய்ந்தது. இதனால் கிட்டதட்ட 18 டிகிரி வரை   வெப்பநிலையை கட்டுப்படுத்தலாம்! இது ஒரு சரித்திர சாதனையாக இருக்கப்போகிறது .

 காலங்காலமாக ஐன்ஸ்டீனையும், நியூட்டனையும் கொண்டாடினார்கள், ஆற்றலுக்கு அழிவில்லை என்றார்கள்.   ஆனால் என்னால் முடிகிறது வெப்ப ஆற்றலை என்னுடைய சாதாரண ஷூட்டரைக்கொண்டு விழுங்கி ஏப்பம் விட முடிகிறது.  இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு என் பெயரைத்தான் அறிவியலுலகம் மந்திரமாகக் கொள்ளப்போகிறது   என்றெல்லாம் கனவுகண்டிருந்த போது தான் என்னுடைய ஆராய்ச்சியடங்கிய டிஸ்க் வெளியே எறியப்பட்டது. 


     மெதுவாக ஊர்ந்து எதையெதையோ சிந்தித்தபடியே சென்று என் வீட்டை அடைந்த நான் என்னுடைய லேப்பில்   சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். என்னுடைய ஷூட்டரை பார்க்க எனக்கே ஆதங்கமாக இருந்தது. என்னவொரு   கேவலமான அரசாங்கம். மக்களின் பிரச்சினை தீர்க்கும் ஒரு சாதனத்தை கூடவா அனுமதிக்கமாட்டான்கள்!? 
இவன்களுக்கு நல்ல சாவே வரப்போவதில்லை என்பதாக நினைத்துக்கொண்டு என்னுடைய ஷூட்டரை வருடியபடி   நின்றிருந்தேன். திடீரென காற்றில் ஒலியின் அடர்த்தி கூடி சத்தம் அதிகமானது . கண்ணாடி ஜன்னல் வழியாக வெளிப்புறமாக பார்த்தேன். மக்கள் அனைவரும் கதறிக்கொண்டு வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தார்கள். எனக்கும்   பதற்றமேற, தெர்மோ சென்ஸாரை ஜன்னலுக்கு வெளியே நீட்டி வெயிலில் படும்படி வைத்தேன். வெப்பநிலை 136   டிகிரி! பகீரென்றது! சூரியப்புயல்! அதிலும் இது கொடூரமாக அல்லவா இருக்கின்றது. 136 டிகிரிகளை தாளாது மக்கள் 
சுருண்டு விழுவதை வீட்டுக்குள்ளிருந்து பார்க்கவே பதற்றமாக இருந்தது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். 


இந்த புயலுக்கு எவனும் தப்ப முடியாதென்பது நிச்சயம் தெரிகிறது. நாளைக்குள்ளாக நிச்சயம் மனித இனத்தில் பாதி   இருக்கப்போவதில்லை!     வேகமாக ஓடி என்னுடைய ஷூட்டருக்கு மின் இணைப்பு கொடுத்து அதன் அதிகபட்ச ஃப்ரீகுவன்சியில் வைத்து.  ஷூட் பட்டனை தட்டினேன். ஷூட்டரிலிருந்து மெதுவாக விரவத்துவங்கிய அகச்சிவப்பு கதிர் மெதுவாக ஜன்னல் 
வழியாக விரவி வெப்பத்தை கொல்ல ஆரம்பிக்க, பக்கத்திலிருந்த சேரில் அமர்ந்து மீண்டும் துளிர்க்க ஆரம்பித்த என்   நியூட்டனாகும் கனவை தொடர ஆரம்பித்தேன்.     

No comments:

Post a Comment