என்னுடைய வாதங்கள் எதுவுமே எனக்கு கைகொடுக்கவில்லை.
"நான் சொல்லுவதை ஏன் யாருமே நம்ப மறுக்கிறீர்கள்?" ஆற்றாமையில் மௌனம் கலைத்தேன்.
"நம்பிக்கை என்பதை விட ஆதாரம் எனும் விஷயத்தை தான் சட்டம் சார்ந்திருக்கிறது! என்றார் கப்பல் கேப்டன்.
"குற்றம் சுமத்தப்பட்ட நானே நான் செய்யவில்லை என்கிறேனே! என் மனசாட்சியை விடவா இன்னொரு பொருள் என் மனதிலிருக்கும் உண்மைக்கு சாதகமாக சாட்சி சொல்லிவிட போகிறது?
"உன் மனதில் இருப்பவை உண்மையா பொய்யா என்பதை தீர்மானிக்கவேண்டியவை ஆதாரங்கள், உன்னால் முடிந்தால் அவற்றை ஏற்பாடு செய்..இல்லாதபட்சத்தில் வாயை மூடுவது உசிதம். எனக்கு சத்தம் பிடிக்காது! .
ஆதாரம்..ஆதாரம்..ஆதாரம்!! எங்கே போவேன் அந்த கருமத்தை கண்டுபிடிக்க? நான் இந்த ஆராய்ச்சிக்கப்பலில் இடம் பிடித்ததே மிகவும் துரதிஷ்டவசமான ஒரு விஷயம். எனக்கு என் உயிரை பணயம் வைத்து ..எங்கோ ஒரு கடல் நடு தீவில் உயிர்கள் இருக்கலாமேன நம்பப்படுகிற தீவை கண்டுபிடிக்க மூன்றரை வருடங்கள் பயணப்படுவதில் ஈடுபாடில்லை.
"எவன் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன? நாம் எதற்காக இவ்வளவு சிரமங்களை வலிய போய் வேட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டுமென்றேன்.
காஸ்காடகாமா என்னை வெறித்து பார்த்தார். அப்புறம் பக்கத்திலிருந்த பணியாளை.
என்னை வெறித்ததன் அர்த்தம் வெறுப்பே தான்! ஆனால் பணியாளுக்கு வேறு அர்த்தத்தில் வெறிப்பு பகிரப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் வெளிச்சமற்ற அறையில் ஆகாரமின்றி அடைக்கப்பட்டேன். ஆகாரம் வேண்டுமெனில் நான் கப்பலில் இடம் பெற சம்மதிக்கவேண்டுமென்பது தான் எனக்கு இடப்பட்ட நிபந்தனை! எனக்காக இல்லாவிட்டாலும் என் வயிற்றுக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதாயிற்று.
என்னை விட திறமையான கடலோடிகள் எங்களுடைய குழுவில் இருந்த போதிலும்.காஸ்காடகாமா என்னை வலுக்கட்டாயமாக ஏன் அழைத்துப்போகிறார் என்பதற்கான காரணம் ஒரு இரகசிய சுற்றறிக்கை மூலமாக அனைவருக்குள்ளும் அலசப்பட்டது. என்னிடம் மட்டும் அது மறைக்கப்பட்டது. எத்தனை முயன்றும் அதனை என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை.
15 கப்பல்களும் எண்ணூறு மனிதர்களுமாக ஒரு நெடும்பயணம் 799 நபர்களின் ஆரவாரத்தோடும், என் ஒரே ஒருவனின் வெறுப்போடும் துவங்கியது. ஒரே நாளில் உயிரைக்குடிக்காமல் நான்காண்டு காலம் சிறிதுசிறிதாக கவ்வப்போகும் அபாய விஷத்தை யாரும் உணர்ந்தபாடில்லை. ஓபிய வில்லைகளை கரைத்தடித்து ஆட்டமும் பாட்டமுமாக முதல் வாரத்தை கழித்தார்கள் சக நண்பர்கள்.
நான் எதிலுமே கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நிற்பதும்,எல்லோரிடமும் வெறுப்பு உமிழ்வதும், ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் பதிவு செய்யப்பட்டது. நான் இரவுகளில் தூங்காமல் கப்பல் மேல்தளத்தில் அமர்ந்துக்கொண்டு ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாகவும் எழுதிக்கொண்டான் ஓபிய போதையிலிருந்த ஒழுங்கு குழுவின் தலைவன்.
ஒரு திசைகாட்டியை நம்பும் அளவுக்கு கூட இங்கு யாரும் என்னை நம்ப தயாராக இல்லை. இதுவரை மனித சுவடுகளே படாத கடல்வழிப்பயணம் என்பது. மற்ற மக்களைப்போலல்லாமல் தூக்கத்திலும் கூட என்னை பயமுறுத்தியது.
மூன்றாவது வாரத்திலேயே நீளவாக்கில் உருகுலைந்த நிலையில் தட்டுபட்டது ஒரு தரைபரப்பு. எல்லோரும் ஆர்பரிக்க, ஏழடி உயரத்திலிருந்த மூன்று பேர் கொண்ட குழு தீவை பார்வையிட அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஆவலாக அவர்கள் போன பாதையையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க, ஆழ்ந்த அமைதி காத்த மரங்கள் ஒரு சிறு சலனம் காட்டி பின் அடங்கின. அதன் பின்னும் கூட அவர்கள் திரும்ப வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித்தார்கள் ஊழியர்கள். எனக்கு முன்னமே இது தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இதில் நான் ஆர்வம் காட்டவில்லை. வழக்கம் போல இதுவும் ஒழுங்கு குழுவால் குறித்துக்கொள்ளப்பட்டது. தீவில் இறங்கிய மூவர் குழுவிடம் நான் ஏதோ பேசிக்கொண்டிருந்ததாகவும் கோபமாக எழுதிக்கொண்டான் குழுத்தலைவன். எதிர்த்து பேசினால் வரப்போகும் பட்டினி சிறைக்கு பயந்து அப்போதும் அமைதி காத்தேன்.
இப்படியாக மூன்று வாரங்கள் கழிந்தன. தீவில் இறங்கியவர்கள் திரும்ப வந்தபாடில்லை. இவர்களும் அவர்களை மீட்க முயற்சிக்கவில்லை. அதற்கு பதில் அவர்களை தீவில் இறக்காமலேயே இருந்திருக்கலாம் என நான் சொல்லியிருந்தால் அதுவும் குற்றம் தான்.
அதன்பின்னும் மூன்று நாட்கள் கழிந்த நிலையில் தான் அவர்கள் குறித்து நம்பிக்கையிழந்தார் காஸ்காடகாமா,
"தீவில் இறங்கியவர்கள் திரும்பாத பட்சத்தில் நிச்சயம் ஏதோ இங்கு ஆபத்து இருக்கிறது, மேலும் மனித நடமாட்டமோ, உயிரின நடமாட்டமோ இங்கு இல்லாததை வைத்துப்பார்க்கும்போது இது அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கலாம். நம் பயண காலத்தில் சிறிதளவே கடந்துள்ள நிலையில் அவர்களைத்தேடி கீழிறங்கி நம்மில் மேலும் பலர் இறப்பதை நான் விரும்பவில்லை. நாம் இங்கிருந்து கிளம்புவது தான் சரி" என்று எல்லோரையும் கூட்டி சொன்னார்.
வழக்கம் போலவே ஆர்ப்பரித்தார்கள் மக்கள். அவர்களை அனுப்புவதில் ஆரம்பத்திலேயே ஆர்வம் காட்டாத என்னை, சபித்தவர்கள். அவர்கள் இறந்ததை மட்டும் ஆரவாரமாக ஏற்றுக்கொள்கிறார்கள். நல்லவேளை நாம் கீழிறங்கி உயிரைவிடவில்லை என்பதற்காக சந்தோசப்படுகிறார்களோ? இருக்கலாம்.
மாதங்கள் கழிந்தன. தினமும் தொடரும் ஒரே வகையான கொண்டாட்டங்களும்,ஓபியமும், கடல் உணவும் அனைவரையும் வெறுப்புறசெய்தது. பெரும்பாலானோர் சாப்பிடுவதை தவிர்த்தார்கள். நாங்கள் பயணப்பட்ட திசை நோக்கி வெறித்துபார்த்து ஏக்கம் கொள்ள துவங்கினார்கள். கடலின் நிசப்தமும், குரூர ஓங்காரமும் எல்லாவற்றிற்கும் பயந்து நடுங்கினார்கள் .
கரை தென்படாதா என்பது தான் அனைவரின் ஒருமித்த விருப்பமாக இருந்தது. பகலில் தூங்குவதும், இரவில் விழித்திருப்பதும், வாய்விட்டு அழுவதுமாக ஊழியர்களின் செயல்பாடுகள் விசித்திரம் கொண்டன.
காஸ்காடகாமா முதன்முறையாக பயணத்தை எண்ணி வருத்தமுற ஆரம்பித்தார். அனைவரையும் குணப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். மருத்துவக்குழுவாலேயே பிரச்சினை என்ன என்பதை கண்டறிய இயலவில்லை. சிகிச்சையை துவங்கிய மருத்துவக்குழுவும் சில வாரங்களில் நம்பிக்கையிழந்தது. ஒருவிதமான பயமும், பதற்றமும் தொற்றிக்கொள்ள,யாருமில்லாத வேளையாகப்பார்த்து மருத்துவகுழுவினர் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்கள்.
மருத்துவக்குழுவின் மரணம் எங்களது கப்பலை மட்டுமல்லாமல், மற்றைய பதினான்கு கப்பலில் இருந்தவர்களையும் பயம் கொள்ளச்செய்தது. பிறகப்பல்களில் இருந்த மருத்துவக்குழுவினர் அவர்கள் குணப்படுத்த முயற்சித்ததால் தான் இறந்தார்கள் எனக்கருதிக்கொண்டு மருத்துவம் செய்ய மறுத்தார்கள்.
காஸ்காடகாமா இதே நோய் தொற்றும் நிலைக்கு ஆளான போது. கப்பலின் மேல் தளத்துக்கு சென்று ஒரு நாள் முழுவதும் வாய்விட்டு கத்தினார். அவர் வாய்விட்டுஅழுவதன் மூலம் மன அழுத்தத்தை விரட்டி அடிக்கலாமேன எண்ணியிருக்கக்கூடும்! கிட்டதட்ட எழுநூறுக்கும் மேற்ப்பட்ட ஊழியர்களும் இதே மாதிரி முயற்சிக்க, கடலின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு அந்த இரவு முழுவதும் கம்பீரமாக பயணித்தன கப்பல்கள்.
விடியற்காலையில் கடலின் போக்கு சற்று மாறியிருந்தது. அழகாக நுரைத்துக்கிளம்பி, கப்பல் விளிம்புகளை இதமாகத்தழுவிச்சென்றது கடல். தாங்கள் இரவு போட்ட சத்தத்தில் கடல் பயந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள் ஊழியர்கள்.
சற்று பதற்றம் குறைந்து கழிந்துக்கொண்டிருந்த இரண்டாவது வாரத்தின் ஓரிரவில் கடைசியாக வந்துக்கொண்டிருந்த ஏழு கப்பல்கள் திசைமாறிப்போயின. கப்பல் காணாமற் போனதற்கான காரணம் தீவிரமாக அலசப்பட்டது. போலி வரைபடங்கள் தயாரித்து நான் அவர்களை திசைதிருப்பியிருக்கலாமென என் கணக்கில் குற்றம் சேர்க்கப்பட்டது. என்னை அவர்கள் விசாரிக்காததால், கடலின் வெப்ப மற்றும் குளிர் நீரோட்டத்தின் காரணமாக கடல் காற்றின் திசை திடீரென மாற வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தை நான் சொல்ல முடியாமல் போயிற்று.
பயணம் துவங்கிய ,முதல் நாளில் எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் இப்போது வரைக்கும் இருக்கின்றேன். நம்பிக்கை நிறைந்தவர்களைத் தான் கடலின் ஓங்காரம் குலைத்து போட்டுவிடும் வாய்ப்பிருக்கிறது.சுத்தமாக நம்பிக்கையோ பற்றோ இல்லாத என்னை கடலால் எதுவுமே செய்யமுடியவில்லை. கடலின் ஓங்கார சீற்றத்துக்கு என் மௌனத்தையே பதிலாகத் தந்துகொண்டிருந்தேன்.
அடுத்த கட்டமாக பசிப்பிணி எல்லோரையும் வாட்டி வதைக்கத்துவங்கியது. கடல் உணவுகளை சாப்பிட்ட மாத்திரத்தில் வாந்தியெடுக்க துவங்கினார்கள். எலும்பும் ,தோலுமாக மெலிந்து , உணவின்றி சாகத்துவங்கினார்கள்,
பசி நோயை காஸ்காடகாமாவால் குணப்படுத்த முடியவில்லை. அனைவரும் இறந்துபோவதை அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். கரையை விட்டு கிளம்பிய முதலாம் வருடத்தில் எங்களில் இருநூறு பேர் மட்டுமே உயிரோடிருந்தோம். ஆனைவரும் இறந்ததால் ஆளில்லாமல் வந்துகொண்டிருந்த ஏழு கப்பல்கள் ஒன்றுக்கொன்று மோதியும், திசைமாறிச்சென்றும் மூழ்கின.
காஸ்காடகாமாவின் அசாத்திய நம்பிக்கை. நாம் நிச்சயம் கரை திரும்புவோம் என அவரை நம்ப வைத்தது. துணைக்கப்பல்கள் எதுவுமே இல்லாத நிலையில், இனி நாம் கண்டுபிடிக்கவேண்டிய தீவை அடைந்தாலும் உயிர்பிழைப்பது கஷ்டமென்பதை ரொம்பவும் தாமதமாக உணர்ந்துக்கொண்ட அவர். கப்பலை மீண்டும் வந்த வழியிலேயே செலுத்தும் ஆயத்தப் பணிகளில் இறங்கினார்.
வடக்கு காற்றடி காலம் துவங்க இன்னும் ஓரிரவு மீதமிருந்தது. தெற்கு எமக்களித்த இழப்புகள் போதுமென அவர் கருதியிருக்கக்கூடும்.காலையில் வடக்கு நோக்கி மீண்டும் பயணப்படவிருந்த போதிலும், இந்த பயணம் தோல்வியுற்றதற்கான காரணத்தை ஆராய குழுவொன்றை நியமித்தார்.
ஒழுங்கு நிலை நாட்டும் குழுவினரும் இதில் முக்கிய பங்காற்றினார்கள். முறையான வரைபடங்கள் இல்லாதது, அனுபவமில்லாத கடலோடிகள், உணவுபற்றாக்குறை ஊழியர்களின் அதீத கேளிக்கை, விளங்கிக்கொள்ளமுடியாத தெற்கு கடல்வழியின் தன்மை, இவற்றோடு சேர்த்து நானும் ஒரு காரணமாக சேர்க்கப்பட்டேன்.
799 பேர் உடனடியாக ஒத்துக்கொண்ட கடல்பயணத்தை நான் தவிர்த்தற்கு ஏதோ காரணம் இருப்பதாக சாதித்தார்கள். அமானுஷ்ய தீவில் இறங்கியவர்களுக்கு தவறான வழியை சொல்லிகொடுத்து நான் தான் கொன்றதாகவும் முடிவெடுத்தார்கள். எல்லோரும் பயந்து உயிரிழந்த போதும் நான் சலனப்படாததற்கு காரணம் ஏதோ மாய மாந்திரீகமெனவும் அதை நான் மற்றவர்களுக்கு கற்பிக்காதது குற்றமெனவும் சொல்லிக்கொண்டார்கள்.
கப்பலின் மேற்தளத்தில் கூடியிருந்த அனைவரின் விருப்பமும், எனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றி அதை குரூரமாக பார்த்து இரசிப்பதாக இருந்தது.
கடல் இறுதியாக அவர்களை இந்த மனநிலையில் விட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.
என்னுடைய வாதங்கள் எதுவுமே எடுபடவில்லை.
ஆதாரம் கேட்கிறார்கள், நானும், நம்பிக்கையே இல்லாத என் மனசாட்சியையும் தவிர எனக்கு ஆதரவாக அங்கு எதுவுமேயில்லை! நான் எங்கிருந்து ஆதாரத்தை கொணர்வது?
விசாரணையின் முடிவில் காஸ்காடகாமா குரூரமாக சிரித்தான். அவனது உதட்டு விளிம்புகளில் மனிதக்கொழுப்பு ஒட்டியிருந்ததை என்னால் உணரமுடிந்தது. கூடியிருந்த ஊழியர்கள் அனைவரும் சத்தம் போட்டு சிரிக்கும் போது. அவர்களின் கண்களிலிருந்தும், குரூரம் தெறித்தது, மனிதம் புசிக்கும் வேட்கையை அவர்களுக்குள் கடல் நாங்கள் கரை திரும்பப்போகும் ஓரிரவிற்கு முன்னால் விதைத்திருந்தது.
தூக்குமேடை தயார் செய்யப்பட்டு, எல்லோரும் கூடியிருந்து ஆரவாரத்துடன் என் தண்டனையை நிறைவேற்ற தயாரானார்கள். ஓராண்டுக்கு முன்னம் இவர்கள் கிளம்பும் போது அவர்களிடமிருந்த உற்சாகம் அவர்களிடம் இன்று மீண்டும் தென்பட்டது. கண்கள் மூடி அமைதி காத்திருந்த நான் என் விதியையும், என் ஒரே ஆதாரமான மனசாட்சியையும் எண்ணி நொந்துக்கொண்டேன்.
தண்டனைக்கு ஒருநாழிகைக்கு முன்...
"இந்த ஒருநாழிகைக்குள் உன்னால் உன் குற்றத்தை மறுக்கும் ஆதாரத்தை தயாராக்கமுடியுமா"
எனக்கேட்டுவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தான் காஸ்காடகாமா.
ஆட்டமும் கொண்டாட்டமும் கொஞ்சம் தீவிரமாக ஆரம்பித்த நொடியில். கடல் கோபம் கொள்ள ஆரம்பித்தது.ஒருகணம் கொதித்து அடங்கிய கடல் நீர், பின்வாங்கும் தோரணையில் சில அடிகள் உள்வாங்கியது.கடலெங்கும் இருக்கும் உயிரினங்கள் ஒருசேர ஒலிஎழுப்புவதைப்போல சகித்துக்கொள்ள முடியாத சத்தம் காற்றில் கூடிவிட்டிருந்தது.திடீரென கடல் சுழன்று சுமார் ஐம்பதடி உயரத்தில் எம்பி, கப்பலைக்கவ்வ ஆரம்பித்தது. நிலைத்தடுமாறிய கப்பல். சிறிது சிறிதாக மூழ்க ஆரம்பிக்க,கடல் சீற்றத்தில் மழை போல போழிந்த கடல் மீன்களும், பிற உயிரினங்களும் ஊழியர்களையும், காஸ்காடகாமாவையும் கடித்து குதறத்துவங்கின.
மிகப்பெரும் அளவு கொண்ட மீன் ஒன்று என் முன்னே விழுந்து சுதாரித்து. கை,கால்கள் கட்டப்பட்டிருந்த என்னை உண்ண ஆரம்பிக்க
அப்போதும் சலனமற்றிருந்த என் ஆதாரமும் ,என்னிலிருந்து விடுபட்ட நானும் மௌனமாக அதைப் பார்த்தபடி வான் நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தோம்.
No comments:
Post a Comment