Pages

Tuesday 4 October 2011

வல்லானின் வாகனம்



   எக்ஸாம்...எக்ஸாம்...எக்ஸாம்...ஐயோஓஓஓஓஓஓஓஓஓ.......
தேர்வுகளை கண்டுபிடித்தவன் மட்டும் கையில கெடைச்சா.. பிழிஞ்சுருவேன்... என பல பேர் புலம்பி கேட்டிருப்பீர்கள்.பல பேர் பலவாறாக புலம்புவார்கள், ஆனால் கிடைத்த கேப்பில் படித்து படித்தே ஃபைனல் எக்ஸாமில்  எப்படியாவது நல்ல மார்க் எடுத்துவிடுவார்கள்.
ஆனால் நான் அந்த ரகம் இல்லை. தீயாக படித்தே தீரும் வேகத்தில் உட்காருவேன். எவனாவது ஏதாவது சின்ன விஷயத்தை கொளுத்தி போட்டால் போதும்... நானும் அதையே தீவிரமாக
சிந்தித்தபடி கடைசி வரை படிக்கவே மாட்டேன்...அன்றும் அப்படித்தான்....   
தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள் பற்றி  ஆரம்பித்தான் ஒரு சண்டாளன்...அவனுக்கு அது ரிலாக்ஸேசன் நேரம்.. அவன் தீபாவளி என்ன??   பொங்கல்,கிருஸ்துமஸ் என எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம் , ஆனால் நான்??    இன்னும் ஆரம்பிக்கவே இல்லை .அதற்குள் எனது "தீயாக படித்து விடும் லட்சியம்" பத்தே நிமிடத்தில் முடிவுக்கு வந்திருந்தது...ஒரு பத்து
நிமிஷம் அவனுக்கு கம்பெனி கொடுத்துவிட்டு படிக்கலாம் என்பது தான் என் கணக்கு.. ஆனால் இன்னமும்  ரிலீஸாகாத தீபாவளி ரீலை பிரித்து மேய்ந்து விட்டு அதை பெட்டிக்கும் அனுப்பிவிட்டு அனாயசமாக மீண்டும் புத்தக  கடலில் மல்லாக்க கவிந்தபடி சம்மர்சால்ட் அடித்துவிட்டான் அவன்....எனக்கு கவனம் குவியவா போகுது?? விடிந்தால்
எக்ஸாம் .....இன்னும் சரியாக எட்டரை மணிநேரம் தான் இருக்கிறது.பத்து நிமிடம் கூட படிக்காத பாடத்தை நாளைக்கு எப்படி எதிர்கொள்ளபோகிறேன்??எனக்கு சிரிப்பு வந்தது. இப்போது நான் சிரித்தாலும்,அழுதாலும்  கேட்பாரில்லை..எல்லோரும் புத்தக கடலில் பிசி. நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன்?? என்னால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. நானும் கொஞ்சம் போராடி பார்த்தேன் ஹ்ஹூம் இது வேலைக்காகாது.இந்த முறை என் மேல்
எனக்கே வெறுப்பு. குளிர்கால இரவாதலால் இறுக்கி அடைக்கப்பட்டிருந்த ஜன்னலை திறந்தேன்.லேசான தூறலால் ஈரப்பதம் ஊறிப்போயிருந்த  காற்று முகத்திலேறி குத்தியது.ஆங்காங்கே விளக்கெரியும் அந்த பத்தரை மணி நகரம் கூட என்னை பார்த்து ஏளனம் செய்து சிரிப்பது போல இருந்தது.தெருவில் கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம்
இல்லை....நிலவற்ற அந்த வானம் என்னிடம் என்னவோ சொல்ல விழைவது போலவே பட்டது எனக்கு...ச்சே இந்த எக்ஸாம் மட்டும் இல்லையென்றால் எப்படி ரசித்திருக்கலாம்??  மாடியிலேயே படுத்து ஒட்டி உறவாடியிருக்கலாமே..ஆனால் உண்மை வேறு....தேர்வற்ற நாட்களின் இரவு வானங்கள் என் கண்ணுக்கு பட்டதே இல்லை....எட்டு மணிக்கே தின்றுவிட்டு சரீரம் சாய்க்கும் பழக்கம் தான் காரணம்.எக்ஸாம் இல்லாத நாட்களின் 11மணியை நான் பார்த்ததே இல்லை.எக்ஸாம் புண்ணியத்தில் இன்றைக்கு அதாவது வாய்க்கிறது.
கதவை திறந்து மாடிக்கு வந்தேன்.நிச்சயம் இன்றைக்கு விசித்திரமான இரவு தான்....அந்த முக்கால்வாசி முடங்கிபோன நகரமும்.. எப்போதும் மர்மம் காக்கும் வானமும் இன்று வேறு மாதிரியாக தெரிகிறது எனக்கு....எல்லா வீட்டு ஜன்னல்களிலிருந்தும் என்னை பல கண்கள் நோக்குவது மாதிரியான உணர்வு...வானத்திலிருந்து ஒரு படையே
என்னை நோக்கி தாக்க காத்திருப்பது போன்ற அச்சம்...ஒரு வேளை இந்திரர்களை எதிர்த்த அதே அரக்கர்களாக இருக்குமோ?? எனக்கே சிரிப்பு வந்தது. வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். முதல் ரிலாக்ஸேசன் செசனில் என்னோடு தீபாவளி கொண்டாடிய கிராதகன் அடுத்த சேப்டரை முடித்தவிட்டு அடுத்த திருவிழா கொண்டாட என்னை
தேடி வந்திருந்தான். இந்த முறை மண்ணை எந்த வடிவத்தில் அவன் போட போகிறானோ?? என்னருகில் நெருங்கி பக்கவாட்டில் நின்றான்.நான் அந்த இருளை ஊடுருவி அவன் கண்களை பார்த்தேன்.....தீபாவளி???? பொங்கல்??
ஹ்ஹூம் இந்த முறை வேறு ஏதோ வலுவான பிளான் வைத்திருக்கிறான்.
அவனே ஆரம்பிக்கட்டும் என விட்டுவிட்டேன். சற்று மௌனத்திற்கு பிறகு ஆரம்பித்தான்.
       "மச்சி அந்த நட்சத்திரத்தை பாரேன்" என்றான்.
யெஸ்...இந்த முறை வான சாஸ்திரம் போல....நல்லா சிக்கிட்டேன்.....அவன் துவைத்த துவையலில் எனக்கு வானம் நோக்கும் மனநிலை மாறிவிட்டிருந்தது. ஆனாலும் கடைசி வரை திருச்சி ஏர்போர்ட்டில் தூரத்தில் இறங்கி
கொண்டிருக்கும் விமானம் புளூட்டோ கிரகம் என அடம்பிடித்தான்.நான் எவ்வளவு சொல்லியும் அவன் அதை விமானம் என ஒத்துக்கொள்ளவே இல்லை.அவனுடைய 10 நிமிட ஓய்வு முடிவுற்ற நிலையில் என்னிடம் சொல்லிக்கொள்ளாமலேயே விடைபெற்றான். 
  எனக்கு வெறுப்பேறியது...என்னை எவ்வளவு நல்லா யூஸ் பண்றாங்க என நினைக்கும் போது.....எப்படி நான் காலை எக்ஸாம் எழுதப் போகிறேன்....அட்லீஸ்ட் வருத்தம் வர வேண்டும், இல்லை அழுகை?? ஹ்ஹூம் இன்னிக்கு என்னவோ ஆகிவிட்டது எனக்கு..ஒன்றுமே உறைக்காத ஜடம் போல குளிர் விறைக்க நிற்கிறேன்.....
கண்கள் சொருகிக் கொண்டு வந்தது...மதியம் 12 மணிக்கு சாப்பிட்டது.....12  மணிநேரமாகிவிட்டதால்...குளுக்கோஸ் அளவு குறைந்து கண்கள் இருட்டிக் கொண்டுவருகிறது....படிப்பு...படிப்பு...படிப்பு..பசி...பசி......பசி......
                                                   --------------------------------------------------------

சுமார் பத்து நிமிடமிருக்கும்.... நின்றபடியே கண்ணயர்ந்திருந்தேன்...சற்று சுதாரித்துக் கொண்டு மீண்டும் வானம் நோக்குகையில்...நீல நிறத்தில் ஒரு ஒளிக்கீற்று மின்னி மறைந்தது....எனக்கு பின்மண்டையில் சுளீரென்றது....வந்த தூக்கம் ,பசி எல்லாம் காணாமல் போய் எனர்ஜி லெவல் ஏகத்துக்கும் ஏறியிருந்தது.....சிலியரியை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பார்வை குவித்தேன்...
 மீண்டும் அதே கீற்று.........புள்ளியில் ஆரம்பித்து....
 நீளவாக்கில் விரிந்து நீலநிற......செறிவுடன்...எனக்கு ஹார்ட்பீட்  எகிறியது........
படப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்......நீளவாக்கில் விரிந்த ஒளி ஜூம் ஆகி என்னை நோக்கி வருவது போலவே
இருந்தது.......டிஸ்கஸ் த்ரோவில் எறியப்பட்ட தட்டு நம்மை நோக்கி வருவது போல....வேகமாக வர...வர..இட்லி போன்ற அந்த உருவத்தின் வேகம் குறைந்தது...மினுக் மினுக் விளக்குகளோடு சுமார் நாற்பதடி விட்டம் இருக்கும்....சுழலவும் இல்லை....புகையோ, நீராவியோ கூட வரவில்லை...கிட்டதட்ட அந்த இயக்கத்தை மிதத்தல் என்று சொல்லலாம்......கிளைடர் போல....
பக்கத்து வீடுகளின் விளக்குகள் கூட தானாகவே அணைந்துவிட்டன....திடீரென அந்த நீல ஒளியின் வீச்சு என்னை தாக்கியதை போலிருந்தது.....மெல்லிய மின்சாரம் தாக்கியது போல......உடலில் மெல்லிய வலி வேறு..........சுமார் நூறடியில் மிதந்த அந்த தட்டிலிருந்து இரண்டு உருவங்கள் இறங்கி மிதந்தன.....கண்கள் இல்லை....கழுத்து சூம்பி
போய்...பயமுறுத்தும் உருவம்.....என்னால் சத்தம் போட முடியவில்லை....வாயை திறக்கவே முடியவில்லை.....என்னை அப்படியே தூக்கிக் கொண்டு பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்றன.....என்னால் பேச முடியாவிட்டாலும் பார்க்க முடிந்தது...ஒரு அறையில் என்னை சாய்வாக படுக்க வைத்தார்கள்....என்னால் டெலிபதி மூலமாக அவர்களை
தொடர்பு கொள்ள முடிந்தது.....
  "ஏன் என்னை தூக்கி வந்தீங்க"  

பதிலில்லை.....

ஆனால் அவர்களுக்குள் என்னவோ டெலிபதியில் தகவல்களை பறிமாறிக்கொண்டார்கள்..

என் உடலில் என்னவோ சோதனை செய்தார்கள்..எண்டோஸ்கோப்பி போன்ற ஒரு கருவியை எனது காதுக்குள் விட்டு மூளையை தொட்டார்கள். என்னென்னவோ மாற்றங்கள். அவர்களின் தேவை மனித இனத்தை சோதனை செய்வதாக இருக்கும்..
ஆனால் என் மூளையில் ஏதேதோ மாற்றங்கள்..ஒருவித சல்ஃபர் நெடி மூக்கை துளைத்தது..... சீக்கிரமே முடித்து விட்டார்கள்....என்னை அப்படியே சுளுவாக தூக்கி வந்து என் வீட்டு மாடியில்
விட்டுவிட்டு....பறக்கும் தட்டில் தவ்வி ஏறி கண நேரத்தில் மறைந்தது பறக்கும் தட்டு....அவ்வளவு நேரமும் செயலற்று கிடந்த நான் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தேன்.....உடலில் ஏதேதோ மாற்றங்கள்...காதில் வினோத சப்தங்கள்.... நீல
ஒளி இன்னமும் அந்த இடத்தில் நீடித்தது....வேகமாக ஓடி போய்.... நண்பர்களை கூட்டிக் கொண்டு ஓடிவந்தேன்.....நான் காட்டிய இடத்தில் ஒன்றுமே இல்லை....ஏமாற்றமே மிஞ்சியது....ஆனால் ஒளிபட்ட இடங்களில் சூடு இன்னமும் போகவில்லை...அதை தொட்டு காட்டி விளக்க முற்பட்டேன்...அவர்கள் என்னை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு ஒருமாதிரியாக சிரித்தார்கள்.....தலையில் அடித்துக் கொண்டு இறங்கி போய்விட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்.
மணி 4.....

புத்தகத்தை எடுத்தேன்....முதல் பக்கத்தை திறந்தேன்.. என்ன ஆச்சரியம் ஒருபக்கத்தை பார்த்தமட்டிலேயே என்னால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடிந்தது!!!!......சரசரவென ஸ்கேன் செய்யும் தொனியில் பார்த்து மனதில் ஏற்ற முடிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.....கண்கள் அகல முழு புத்தகத்தையும் ஸ்கேன் பண்ணிக் கொண்டு
படுத்துவிட்டேன்.....
                                              ---------------------------------------------------------------------
10மணி...


கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.....எனக்கு இப்போது இதை பார்க்க ஏளனமாக இருந்தது.....

நமக்கு இருக்கும் அறிவுக்கு இவ்வளவு ஈசியான கேள்விகளா??
எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்....

கொஞ்ச நேரம் மற்றவர்களின் முகங்களை நோக்கினேன்...

நைட்டெல்லாம் படித்த நண்பர்கள் திருதிருவென
விழிக்கிறார்கள்.....எனக்கு ஒரே சந்தோசம்...


பேனாவை திறந்தேன்... பார்ட்-A என எழுதினேன்...


என் பார்வை பட்டதுமே பேனா மை ஆவியாகி காணாமல் போனது.....

No comments:

Post a Comment