Pages

Tuesday 4 October 2011

ஆல்புமின் பிரதேசம்


என்னால் இதற்கு மேல் உட்கார முடியவில்லை.....இலையை எடுத்து நார்நாராக கிழித்து சர்வர் மூஞ்சியிலேயே எறியலாம் போல இருந்தது....உச்சி வெயிலில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரை தகிக்க, காற்றாடி பொருத்தும் அளவுக்கு கூட தொழில்தர்மமற்ற அந்த கடையில் அரை மணிநேரம் காத்திருந்தது என் தப்பு தான்....மார்கழி குளிரில் மதியம் 12 மணி கூட லேசாக மக்கர் பண்ணும்....வெயிலில் நடந்தால் சூடேறும்,,,அதுவே நிழலில் அயர்ந்தால் குளிர்காற்று விஜயகாந்த் படத்தில் நகக்கண்ணில் ஊசிவிடுவதை போல படுத்தியெடுக்கும்...
ஆனால் இன்று எனக்கு இருக்கும் கோபத்தில் என் உடலிலிருந்து உமிழப்படும் உஷ்ணமே ஆம்லெட் போடுவதற்கும் , அடுப்பெரிப்பதற்கும் உதவியிருக்கும்....ஆனா பிழைக்க தெரியாத பயலுக எல்.பி.ஜியை எரியவிட்டு என் உடல் உஷ்ணத்துக்கு டஃப் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்....நேற்று மாலை ரெண்டே ரெண்டு இட்லி சாப்பிட்டது..அதன் பிறகு இரவு பத்து மணிக்கு ஒரே ஒரு டீ...அவ்வளவு தான்....நேராக எக்ஸாம் முடித்துவிட்டு சாப்பிட ஹோட்டல் தேடிய போது தான் இந்த ஹோட்டல் கண்ணில்பட்டது...அதுவும் என் நண்பனின் நொண்டி கண்ணுக்கு!
நகரத்துக்கு வெளியே அமைந்திருக்கும் கல்லூரி வளாகங்களின் ஹோட்டல்களில் வேலை பார்க்கும் சர்வர்கள் எல்லாருமே ஒரே மாதிரியான அமினோ அமிலத்திலிருந்து வந்திட்டார்களோ?? லிமிட்டட் மீல்ஸ் சொல்லி இத்தோடு 45நிமிஷமாயாச்சு.... லிமிட்டட் மீல்ஸ் எல்லாம் இப்போ தருவதில்லை ஒன்லி அன்லிமிட்டட் மீல்ஸ் என்று விளக்கினார் சர்வர்....நானெல்லாம் அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட ஆரம்பித்தால் அண்டார்ட்டிக்காவில் சன்ஸ்க்ரீன் லோஷன் விற்க வேண்டி வருமென நினைக்கையில் எனக்கே சிரிப்பு வந்தது....
விலையில் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும் தேவையில்லாமல் வாங்கி வீணடிக்க நான் விரும்பாதது தான்...அன்லிமிட்டட் மீல்ஸை நான் வெறுத்ததற்கு காரணம்.. ஆனால் என்னமோ வராத நோய் வந்தவனை ட்ரீட் பண்ணுகிற தொனியில் நடத்துகிறான்...இந்த சர்வ'ன்' .
4 பேர் புடை சூழ படையெடுத்த எங்களது படை மூன்று பேர் அன்லிமிட்டட் மீல்ஸில் நாட்டம் கொண்ட காரணத்தினால் ஒரு பெரும்படையாகவும், மற்றுமொரு சிறுபடையாகவும் பிரிக்கப்பட்டது. இரண்டாம் கேட்டகரியில் நான் மட்டுமெ இடம் பெற்றது தான் மொத்த ஹோட்டலும் உச்சு கொட்ட நேரிட்ட சோகம்.....ரத்தம் சரேல் புரேலென பாய்ந்து கொப்பளிக்க என் படையை சேர்ந்த மூவரும் புறங்கை முதற்கொண்டு நக்குவதை கொடூரம் கலந்த ஏக்கத்தோடு வெறிக்கிறேன்....சர்வ'ன்' என்னை இன்னமும் கண்டுகொள்ளவில்லை....விரிக்கப்பட்ட இலை கூட சூடு தாங்காமல் லேசாக வாடி விட்டிருந்தது...ஏனோ நான்...பொறுமையின் லிமிட்டை ஏகத்துக்கும் ஏற்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்....
                                                             *****************
ஹோட்டல்களில் தோசை ஆம்லெட் போடும் வினை தனி டிபார்ட்மெண்ட்.....தன்னிடம் வரும் ஆர்டர்களை அப்படியே செயல்படுத்தி தொழிலில் சின்சியாரிட்டி காட்டும் புரோட்டா மாஸ்டர் தான் அங்கே அதிகம் விளிக்கப்படுபவர்....அதிலும் மேக்கிங் ஆஃப் ஆம்லெட் இருக்கிறதே அது ரொம்பவும் கொடுமை....அடுக்கடுக்காக அடுக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நாலைந்தை எடுத்து படுகொலை செய்து, வெங்காயத்தை நறுக்கியிட்டு ,இன்னும் பல இத்யாதிகளை தூவி, சுடுகல்லில் ஆங்காங்கே பரவ விட்டு பெப்பர் தூவி....இப்படியாக நீளும் அதன் செய்முறை...என்ன தான் நானும் பறப்பவை நடப்பவைகளை சாப்பிடுபவனாக இருந்தாலும் , அந்த முட்டை மேட்டர் மட்டும் எனக்கு  அலர்ஜி.... ஒரே கல்லில் பலவற்றை போட்டு பொரித்தெடுக்கும், நடவடிக்கையாலோ, இல்லை அழுக்கு கையை கொண்டு கலக்கி ஆம்லெட் கரைசலை உருவாக்கும் மாஸ்டரின் தொழில் யுக்தியாலோ, இல்லை வேறு காரணங்களாலோ எனக்கு இந்த அலர்ஜி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் முட்டை சம்பந்தப்பட்ட உணவுகளை நான் தொடுவதில்லை என்பது தான் இந்த பாராகிராப்பின் நேரடி பாடுபொருள். அதுவும் பல துறை புத்தகங்களையும் பிரித்து மேயும் என் அண்ணன் ஒருவன் ஆம்லெட்டில் ஏலியன்கள் வாழ்வதற்கான சுவடு இருக்கலாமென கொளுத்தி போட்டிருந்தான். ஆரம்பத்தில் எனக்கும் அது முட்டாள்தனமாகத்தான் பட்டது.  ஆனால் மர்மங்கள் மானாவரியாக சூழ்ந்திருக்கும் இந்த உலகத்திலே நாம் எதைத்தான் திட்டவட்டமாக மறுத்துவிட முடியும்? எனும் கேள்வி ஒரு பௌர்ணமி இரவில் என்னில் உதித்ததிலிருந்து நானும் அதை பற்றி சிந்திக்க தொடங்கியிருந்தேன்.
                                                               ********************
தம்பீ...தம்பீ ....என் தோளைபிடித்து நாராசமாக உலுக்கினான் எவனோ ஒருவன். பார்த்தால் என் இனிய சர்வன்.    
    "ஆஃப்பாயில் கேட்டல்ல...இந்தா! என் பதிலை கூட எதிர்பார்க்காமல் இலையில் கிடத்தினான்...
     "நான் எப்போ ஆஃப்பாயில் கேட்டேன்?"
     "ஓஹ் நீ கேக்கலியா?? ஓகே பரவாயில்ல லிமிட்டட் மீல்ஸ் தானே சொன்ன?? அது போதாது  உனக்கு இதையும் சாப்பிடு!" 

 "ரொம்ப அக்கறை...இத எடுய்யா முதல்ல...சாப்பாடு கொண்டுவா முதல்ல" 

 "வெச்சாச்சே தம்பீ ...வேற யாரும் ஆஃப்பாயில் கேக்கல....யாருக்கும் குடுக்கவும் முடியாதே!"
 சுற்றிலும் பார்வையை சுழலவிட்டேன்...ஒருத்தனை கூட காணோம்! நடுத்தர வயது பெரியவர் ஒருவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரும் அதே கடையில் வேலை பார்ப்பவர். 

 "----------------------",முறைத்தேன்.
 "சாதம் ரெடியாகிட்டு இருக்கு , கொஞ்சம் பொறு" என அசால்ட்டாக சொல்லிவிட்டு நகர்ந்தான்.
 "டேய் அதை தானே ரெண்டு மணிநேரமா செய்துகிட்டு இருக்கேன் "என்று கத்திவிடலாம் போலிருந்தது. 

  நான் கத்தினாலும் 3 டெசிபலை தாண்டப் போகாத என் எனர்ஜி லெவலுக்கு ....இன்னும் இன்னும் பொறுமையாய் இருந்து எரிபொருளிட்டுக்கொள்வதை வேறு வழியே இல்லை....

 என் நிலையை நினைத்து பரிதாபப்பட கூட எந்த உயிரினமும் அங்கில்லை.ஆளே இல்லாவிட்டாலும் கல்லில் எதையோ வார்த்து வேக விட்டு பிஸியாக நின்று கொண்டிருந்தார் மாஸ்டர்.

                                       ************************************
கிட்டதட்ட ஆஃப்பாயில் சாப்பிடுமாறு சர்வ'னா'ல் மிரட்டப்பட்ட நான்.அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒருவேளை நான் மேற்சொன்ன அண்ணனின் கோட்பாடுகள் உண்மையாகிவிட்டால்?? அவர் சொன்னது மாதிரி பிரபஞ்சமெங்கும் பரவியிருக்க வாய்ப்புள்ள வேற்றுகிரக நண்பர்கள் இந்த ஆஃப்பாயிலிலும் இருந்துவிட நேரிட்டால்?? நான் சாப்பிட்ட பிறகு வயிற்றை கிழித்துக்கொண்டு வந்து குதித்தால்??
"ஸ்பீசிஸ்" படத்தின் காட்சிகள் என் கண் முன்னே விரிந்தன. என்னத்தான் நான் பசியில் இருந்தாலும், பசிக்கொடுமையால் முட்டை பொருளை சாப்பிட துணிந்தாலும் அது ஆம்லெட்டாக இருந்திருக்கலாம்!  நன்றாக வேகவாவது செய்திருக்கும். ஏலியன் என்ன ?? பாக்டீரியா ,கரப்பான்பூச்சி என சகலமும் செத்து மடிந்திருக்கும். ஆனால் இது ஆஃப்பாயில், முப்பதே வினாடி வேக வைத்தல் வினையில் கல்லின் சூடு கூட ஆஃப்பாயிலில் பரவியிருக்காது.அப்படியிருக்க என் பௌதிக அறிவும், பயாலஜி அறிவும் கான்ஃபரென்ஸ் போட்டு என்னை தடுக்கின்றன. 

ஒரு சிறு துண்டு இலையில் வைக்கப்பட்டிருந்த அந்த அரைவேக்காட்டு ஆல்புமின் பரவல் எனக்கு குமட்டலை கூட்டியது.
கீழே குனிந்து நன்றாக உற்றுபார்த்து இன்ச் பை இன்சாக ஆராய்ந்தேன்...எதுவுமே தென்படவில்லை. காதை தீட்டிக்கொண்டு ஏதாவது வினோத சத்தம் வருகிறதா என கவனித்தேன். அதுவும் இல்லை...மூன்றாவதாக கையில் எடுத்து அதன் வைப்ரேஷனைக் கொண்டு ஏலியன் இருப்பை கணிப்பது என முடிவு செய்தேன். அந்த சோதனையும் வெற்றிபெற்றால் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சி அங்கே நிகழ்வுற இருந்தது. மக்கள் கூடி நின்று "சதீஷ் ,கமான், கமான் என ஆர்பரிப்பது போல ஒரு ப்ரேமை. இலையோடு சேர்த்து கையிலெடுத்தேன். முகத்துக்கு நேரே கையை கொண்டு வந்து ஏதாவது மாறுதல் தெரிகிறதா என கவனித்தேன். ஆஃப்பாயிலின் மேல் தூவப்பட்டிருந்த பெப்பர் நெடி தாளாது... நான் பெருங்காற்றெடுத்து தும்ம, இலையோடு சேர்த்து சிதறி விழுந்தது. ஏலியன், கரப்பான்பூச்சி, பாக்டீரியா என எந்த சுவடுமற்ற ஆஃப்பாயில். 

No comments:

Post a Comment